Published : 25 Mar 2015 10:54 am

Updated : 25 Mar 2015 10:54 am

 

Published : 25 Mar 2015 10:54 AM
Last Updated : 25 Mar 2015 10:54 AM

நொந்து கிடக்கும் நைஜீரியா - 5

5

பதற்றம் அடைய வைக்கும் செய்திகளுக்குப் பஞ்சமே இல்லாத நாடு நைஜீரியா.

1993-ல் நைஜீரியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் சனி அபச்சா என்ற ராணுவத் தளபதி. சர்வாதிகாரி. சர்வாதிகாரம் எவ்வளவு ஆபத்தானது என்பதை உலகுக்குப் புரிய வைத்தவர்.

‘’நான் ஆட்சி செய்யும்போது நாட்டில் அரசியல் இயக்கங்கள் எதற்கு?’’ என்றார். அவற்றுக்குத் தடைவிதித்தார். (பின்னர் அவர் அரசு கஜானாவிலிருந்து தனது 5 ஆண்டு ஆட்சியில் மூன்று பில்லியன் டாலர் தொகையைத் திருடியதாகவும் தெரியவந்தது).

முக்கியமாக கென் சரோவிவா தொடர் பான இவரது ஆணை மனிதாபிமானம் கொண்ட யாரையுமே நடுங்க வைக்கும்.

கென் சரோவிவா ஓர் இயற்கை அபிமானி. நாடக ஆசிரியர். ஒகானி என்ற பழங்குடி இன மக்களுக்காக போராடியவர். அவரால் முக்கியமாக ஒரு விஷயத்தை பொறுத்துக் கொள்ளவே முடிவில்லை.

நைஜர் டெல்டா பகுதியில் பெட்ரோல் வளம் நிறைந்திருந்தது. ஆனால் தவறான வழிகளில் அந்தப் பெட்ரோலியத்தை அரசு சுத்திகரிப்பு செய்தததால் அந்தப் பகுதி முழுவதுமே மாசு அடைந்தது. தவிர கடலின் ஒரு பகுதியில் பெட்ரோலியம் கலந்தது. இதனால் அங்குள்ள கடல் வாழ் உயிரினங்கள் கொத்து கொத்தாக மடிந்தன. தவிர இதனால் அந்தப் பகுதியில் வசித்த பழங்குடி மக்களும் பல்வேறு நோய்களுக்கு உள்ளானார்கள்.

இதற்கெல்லாம் எதிராகத்தான் போராடினார் கென் சரோவிவா. அவருக்குப் பின்னால் மக்கள் அணி திரண்டார்கள்.

இதெல்லாம் சர்வாதிகாரி சனி அபச்சா வுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. “கென் சரோவிவா ஒரு தீவிரவாதி” என்று குற்றம் சுமத்தினார். அவரை தூக்கிலிட ஆணையிட்டார்.

கென் சரோவிவா இறந்தார் என்பதைவிட அதிர்ச்சியை அளிக்கும் தகவல் அவர் எப்படி இறந்தார் என்பது. ‘அதுதான் தூக்கிலிடப்பட்டார் என்று சொல்லிவிட்டீர்களே’ என்கிறீர்களா. அது உண்மைதான். ஆனால் அதிலும் சர்வாதிகாரியின் மிருகத்தனம் தெளிவாகவே வெளிப்பட்டது.

தூக்கிலிடப்பட்ட சில நொடிகளிலேயே ஒருவரது மரணம் நிகழ வேண்டும். அப்படித்தான் அத்தனை நாடுகளிலும் ஏற்பாடு செய்திருப்பார்கள். ஆனால் கென் சரோவிவாவை துடிக்கத் துடிக்க வைத்து சாகடித்தார்கள்.

தூக்கில் மாட்டப்பட்டபோது 20 நிமிடங்கள் அவர் உயிரோடு துடித்தார். அந்தத் துடிப்பையும், அவரது கைகள் அங்குமிங்கும் ஆதரவு தேடி அலைபாய்ந்ததையும், அவரது மரணத்தையும் ஒருவர் வீடியோ எடுத்தார். அந்த வீடியோ, நைஜீரிய சர்வாதிகாரிக்கு அனுப்பப்பட, அவர் அகமகிழ்ந்தார். ஆக கென் சரோவிவா அவ்வளவு நேரம் துடித்தபின் அடங்கியது அதிபரின் மிருகத்தனமான சதியாக இருந்திருக்கக்கூடும் என்கிறார்கள்.

சனி அபசா பின்னர் மாரடைப்பால் இறந் தார். அபுபக்கர் என்ற அவரது வாரிசும் மக்களிடையே கடுமையாகவே நடந்து கொண்டார். உலக நாடுகளின் கடும் எதிர்ப் புக்குப் பிறகு ஒலுஷேகன் ஒபஸான்ஜோ என்பவர் நைஜீரிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ராணுவமும் இவருக்கு ஆதரவு தரத்தயார் என்று கூறியது.

இந்த அதிபர் நியமித்த விசாரணைக் குழுவில் சனி அபசாவின் வேறு பல அராஜகங்களும் வெளிப்பட்டன. ஒபஸான்ஜோ கூட ஒருவிதத்தில் பாதிக் கப்பட்டவர்தான். புரட்சி செய்ததாக மேற்படி சர்வாதிகாரியால் சிறைபடுத்தப்பட்டார். ‘4 ஆண்டுகள் காற்றோட்டமே இல்லாத ஒரு குடிசைக்குள் வைக்கப்பட்டிருந்தேன்’ என்பதிலிருந்து ‘சொல்லவே கூசும்படியான மனித உரிமை மீறல்கள்’ என்பதுவரை பலவித அரக்கத்தனங்கள்.

“ஓராண்டுக்கு என் கைகளையும், கால்களையும் தொடர்ந்து பிணைத்திருந் தார்கள். இப்படி ஓர் ஆணையைப் பிறப்பித்தது சர்வாதிகாரி சனி அபச்சாதான்” என்று மனித உரிமை விசாரணை கமிஷனுக்கு முன்பாக வாக்குமூலம் அளித்தார் ஒரு ராணுவ அதிகாரி.

வேறு பலருமே தங்களுக்கு அந்த சர்வாதிகாரியால் இழைக்கப்பட்ட கொடுமைகளை விவரித்தபோது கதறி தீர்த்து விட்டார்கள்.

ஆனால் இதெல்லாம் நடக்கும்போது சனி அபச்சா இறந்து விட்டிருந்தார்.

கென் சரோவிவா உண்மையில் 1993 அதிபர் தேர்தலில் ஜெயித்திருக்க வேண்டுமென்று கூறப்படுகிறது. ஒருவேளை அதனால்தான் இந்தமுடிவோ?

ஏற்கெனவே, ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவின் தற்காலிக உறுப்பினர் பதவியை நைஜீரியா இழந்திருந்தது. காரணம், அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள். தென்னாப்பிரிக்கா, நைஜீரியாவில் உள்ள தனது தூதரை திரும்ப அழைத்துக் கொண்டது.

கென் சரோவிவாவின் முடிவுக் குப் பிறகு எந்த நாடுமே நைஜீரியாவிட மிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யக் கூடாது என்று நெல்சன் மண்டேலா பகிரங்க மாகவே அறிக்கை விடுத்தார். ஆனால், இப்படிப்பட்ட தடைகளால் நைஜீரிய மக்கள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவார்கள் என்று பல நாடுகள் கருதியதால் மண்டேலா வின் திட்டம் வெற்றி பெறவில்லை.

ராணுவ ஆதரவு ஆட்சி முடிந்தவுடன் மதக்கலவரங்களும், இனப் போராட்டங்களும் அங்கு தலைவிரித்து ஆடத் தொடங்கின.

நைஜீரியாவின் இரண்டு மாநிலங்களில் ஏற்கெனவே ஷரியா அமலில் இருக்கிறது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கடுலா என்ற மாநிலத்திலும் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நிலை உருவானவுடன், அந்த மாநிலத்தில் உள்ள மாதா கோவில்களில் கூடிய ஐயாயிரம் கிறிஸ்தவர்கள், மாநில கவர்னரின் அலுவலகத்தை நோக்கி ஊர்வலம் நடத்தினர்.

போகும் வழியில் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். தங்களது நிலைப்பாட்டை வலியுறுத்தும் போஸ்டர்களை தெருச் சுவர்களில் ஒட்டினர். முஸ்லிம்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசிக் கொள்ள, வன்முறை வெடித்தது. இதன் விளைவாக 300-க்கும் அதிகமானவர்கள் இறந்தனர்.

நைஜீரியாவுக்கு பெரும் சவாலாக விளங்குவதில் இந்தப் பிரச்னையும் ஒன்று. இந்தச் சட்டம் முஸ்லிம்களுக்கானது என்ற வாதத்தை கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இதைப் பொதுச் சட்டமாக்குவதற்கு முதல்படி அது என்றே நம்புகின்றனர்.

இதுவரை, “நாட்டின் உச்ச நீதிமன்றம் ஷரியாவைப் பற்றி என்ன முடிவெடுக்கிறது என்று பார்ப்போம்’ என்று சொல்லி காலத்தை ஓட்டி வந்த அதிபர், மேற்படி வன்முறை சம்பவங்களுக்குப் பிறகு பிறநாட்டு ‘டிவி’ மற்றும் பத்திரிகைகளுக்கும் பேட்டியளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட, ‘கல்லால் அடித்தே சாகடிப்பது, கைகால்களை வெட்டுவது போன்ற தண்டனைகள் சட்டமாக ஆகாது’ என்று உறுதியளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆனால், அதற்குப் பிறகு 4 மாநிலங்களில் ஷரியா ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டது. அந்தந்த மாநில ஆளுநர்கள், ‘என்ன செய்ய பெரும்பான்மை மக்களுக்கு இது பிடித்திருக்கிறதே! என்று கூறிச் சிரிக்கின்றனர்.

(உலகம் உருளும்)

வரலாறுஜி.எஸ்.எஸ் தொடர்நைஜீரியாஆவணத் தொடர்உலகம்போகோ ஹராம்கென் சரோவிவாசனி அபச்சா

You May Like

More From This Category

More From this Author