Published : 05 Mar 2015 09:37 AM
Last Updated : 05 Mar 2015 09:37 AM
பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓடியதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை ஜெ.ஜெ.நகர் அருகேயுள்ள கோல்டன் ஜார்ஜ் நகர் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் சுகுமார்(62). ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர். 2007-ம் ஆண்டு திருமங்கலம் காவல் நிலைய ஆய்வாளராக சுகுமார் இருந்தபோது, அண்ணாநகர் 2-வது பிரதான சாலையில் தமிழ்செல்வி என்ற பெண் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அடுத்த சில நாட்களில் நொளம்பூரில் ஒரு பெண் இதேபோல கொலை செய்யப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொலை வழக்குகள் குறித்து விசாரணை நடத்திய சுகுமார், வில்லிவாக்கத்தை சேர்ந்த ஜெயக்குமார்(40) என்பவரை கைது செய்து, அவர்தான் கொலையாளி என்பதை நிரூபித்தார். இதனால் ஜெயக்குமாருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.
இந்த வழக்கு நடந்தபோதெல்லாம் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட ஜெயக்குமார், ஆய்வாளர் சுகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 22-ம் தேதி பரோலில் வெளியே வந்த ஜெயக்குமார், 24-ம் தேதி தலைமறைவாகிவிட்டார். பெரம்பூர் அருகே செம்பியத்தில் குடும்பத்துடன் ஜெயக்குமார் வசிக்கிறார். இதனால் புழல் சிறை நிர்வாகம் சார்பில் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தப்பியோடிய ஜெயக்குமாரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே எனக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார் முன்னாள் ஆய்வாளர் சுகுமார். புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் ரவி, உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.