Published : 16 Mar 2015 07:52 PM
Last Updated : 16 Mar 2015 07:52 PM

சட்டப் பேரவையில் மார்ச் 25-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர், 25-ம் தேதி தொடங்குகிறது. அன்று காலை 10 மணிக்கு 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், கடந்த பிப்ரவரி 17-ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய தினம் பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா உரையாற்றினார். பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 4 நாட்கள் விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அதையடுத்து தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் ப.தனபால் அறிவித்தார்.

பின்னர், பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் மாதம் தொடங்கும் என கூறப்பட்டது. பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் வேகமாக நடந்து வந்தன. கடந்த 8-ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் பட்ஜெட் தாக்கல் குறித்தும், அதில் இடம் பெறவேண்டிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் 25-ம் தேதி தொடங்கும் என்று பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்றிரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவை விதி 26(1)-ன் கீழ், பேரவையின் அடுத்த கூட்டத்தை, மார்ச் 25-ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். பேரவை விதி 18(1)-ன் கீழ், 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 25-ம் தேதி பேரவைக்கு அளிக்க வேண்டும் என்றும், முன்பண மானியக் கோரிக்கைகள் மார்ச் 28-ம் தேதி (சனிக்கிழமை) பேரவைக்கு அளிக்க வேண்டும் என்றும் ஆளுநர் கே.ரோசய்யா நாள் குறித்துள்ளார்.

அதன்படி, 2015-16-ம் ஆண்டுக் கான பட்ஜெட், 25-ம் தேதி காலை 10 மணிக்கு பேரவையில் தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், அன்றைய பேரவை நடவடிக் கைகள் முடிந்துவிடும். பின்னர் பேரவைத் தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடக்கும். இதில் பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, துறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறை வேற்றுவது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும்.

அதையடுத்து பேரவை கூடும் நாளில், பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கும். விவாதத் துக்கு பதிலளித்து முதல்வர் பேசுவார். அதைத் தொடர்ந்து துறைவாரியான மானியக் கோரிக் கைகள் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்துக்குப் பிறகு நிறைவேற் றப்படும். பட்ஜெட் கூட்டத் தொடர் ஒரு மாதத்துக்கும் மேலாக நடக்கும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூர் உயர் நீதிமன் றத்தில் நடந்துவரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கு விசாரணை முடிவடைந்துள்ளது. இவ்வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பட்ஜெட் கூட்டத் தொடர் தள்ளிப்போகும் என்று செய்திகள் வெளியாயின. இந்நிலையில், 25-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக் கப்பட்டுள்ளது.

கடந்த பேரவைக் கூட்டத் தொடரில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் மோகன்ராஜ் பேசியபோது கடும் அமளி ஏற்பட்டது. பேரவைத் தலைவர் இருக்கையை தேமுதிக உறுப்பினர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து, அவர்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். கூட்டத் தொடர் முழுவதும் என்றால், பேரவையை முடித்து வைப்பதாக ஆளுநர் அறிவிக்கும் வரையான காலமாகும். எனவே, இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் தேமுதிக உறுப்பினர்கள் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x