Published : 29 Mar 2015 10:03 am

Updated : 29 Mar 2015 10:04 am

 

Published : 29 Mar 2015 10:03 AM
Last Updated : 29 Mar 2015 10:04 AM

கோடை தொடங்கும் முன்பே கடுமையான குடிநீர் தட்டுப்பாடு: பல்லாவரம் நகராட்சி மக்கள் கடும் அவதி

கோடை தொடங்கும் முன்பே குடிநீர் தட்டுப்பாடு ஆரம்பித்து விட்டதால் பல்லாவரம் நகராட்சி மக்கள் தவிப்பில் உள்ளனர்.

சென்னை அடுத்த பல்லாவரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் 2.65 லட்சம் பேர் வசிக் கின்றனர். சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வராததால் இப்பகுதியினர் பெரும்பாலும் பாலாற்று நீரையே நம்பியுள்ளனர். பழைய பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், குரோம்பேட்டை, கீழ்க்கட்டளை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பல்லாவரம் நகராட்சிக்கு ஒரு நாளுக்கு 100 லட்சம் லிட்டர் நீர் தேவை. ஆனால், கிடைப்பதோ இதில் பாதிக்கும் குறைவு. இதனால் குடிநீர் விநியோகத்தில் தாமதம், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து குமரன் குன்றம் பகுதியை சேர்ந்த பலராமன் கூறும்போது, ‘‘5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் கிடைத்தது. தற்போது 15 அல்லது 20 நாட்களுக்கு ஒருமுறைதான் கிடைக்கிறது. அதுவும் தண்ணீர் விடப்படும் நேரமும், அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் தனியார் லாரியில் தண்ணீர் வாங்குகின்றனர். தண்ணீ ருக்காக பல ஆயிரம் செலவிட வேண்டியுள்ளது. சென்னையில் இருக்கிறோமே தவிர, அருகில் உள்ள பகுதிகளுக்கு கிடைக்கும் சென்னை குடிநீர் திட்டங்கள் எங்களுக்கு கிடைப்பதில்லை’’ என்றார்.

அஸ்தினாபுரத்தில் வசிக்கும் குடும்பத் தலைவி கீதா கூறும் போது, ‘‘செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் கொண்டு வருவதாக பேசுகிறார்கள். அத்திட்டம் செயல் படுத்தப்பட்டால் பற்றாக்குறை தீரும். ஆனால் அது பேச்சளவி லேயே உள்ளது’’ என்றார்.

பல்லாவரம் நகராட்சித் தலைவர் கே.எம்.ஆர்.நிசார் அஹமத் கூறியதாவது:

சென்னை குடிநீர் வாரியத்திடம் இருந்து கிடைத்துவந்த 30 லட்சம் லிட்டர் நீர், 15 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்து கிடைத்த 40 லட்சம் லிட்டர் 10 லட்சமாக குறைந்துவிட்டது.

கோடையில் குடிநீர் தட்டுப் பாட்டை சமாளிக்க வாலாஜாபாத் தில் பாலாற்று படுகையில் 4 போர்வெல் போடுகிறோம். அதில் இருந்து 10 லட்சம் லிட்டர் கிடைக்கும். செம்பாக்கத்தில் ரூ.20 லட்சம் செலவில் கிணறு தோண்டப்பட்டுள்ளது. அதில் இருந்து 5 லட்சம் லிட்டர் கிடைக்கும். இதுதவிர, நகராட்சி எல்லைக்குள் 42 போர்வெல் தோண்டும் பணி நடக்கிறது. நகராட்சியின் நீர் தேவை சுமார் 100 லட்சம் லிட்டர். தற்போது 40 லட்சம் லிட்டர் மட்டுமே கொடுக்க முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் வி.சந்தானம் கூறும் போது, ‘‘கோடை வந்த பிறகுதான், குடிநீர் தட்டுப்பாட்டுக்கு என்ன தீர்வு என்று யோசிக்கிறார்கள். காஞ்சிபுரம் உட்பட 8 மாவட்டங் களில் பற்றாக்குறையாக மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை குடிநீர் வாரியத்தின் சேவைகளை பல்லாவரம் நகராட்சிக்கு விரிவாக்கம் செய்ய 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.153 கோடி செலவில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்ன ஆயிற்று? பல்லாவரம் பெரிய ஏரியில் ரசாயனக் கழிவுகள் கலக்காமல் தடுத்திருந்தால் நிலத்தடி நீர் மாசுபடாமல் இருந்திருக்கும். இன்று ஏரிகள் கான்கிரீட் கட்டிடங்களாக மாறியுள்ளன. பாதுகாப்பான, சுத்தமான குடிநீர் என்பது இப்பகுதியினருக்கு இன்னமும் ஒரு கனவாகவே உள்ளது’’ என்றார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

கோடை காலம்கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டுமக்கள் கடும் அவதிபல்லாவரம் நகராட்சி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author