Published : 28 Mar 2015 08:25 AM
Last Updated : 28 Mar 2015 08:54 AM
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. இதையொட்டி, கடைகள் அடைக்கப்படுகின்றன. லாரிகள் ஓடாது. அரசு பஸ்கள் இயங்கும் என்று தெரிகிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் 28-ம் தேதி (இன்று) முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுவதாக தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத் துள்ளது.
இதையொட்டி. மாநிலம் முழுவதும் 60 லட்சம் கடைகள் இன்று அடைக்கப்பட்டிருக்கும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார். முழு அடைப்புப் போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் என்று அதன் தலைவர் விக்கிரமராஜா கூறியுள் ளார்.
இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் இயக்கப்படாது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி அறிவித்துள்ளார்.
பலத்த பாதுகாப்பு
ஆளும் கட்சியான அதிமுக இந்த போராட்டத்துக்கு வெளிப்படை யாக ஆதரவு தெரிவிக்கவில்லை. அரசு பஸ்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால், அவை இயங்கும் என்றே தெரிகிறது.
முழு அடைப்புப் போராட்டத் தின்போது அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஓசூர் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதை யடுத்து தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள அத்திப் பள்ளியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அனைத்து சோதனைச்சாவடி களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.