Last Updated : 08 Mar, 2015 10:56 AM

 

Published : 08 Mar 2015 10:56 AM
Last Updated : 08 Mar 2015 10:56 AM

எம்.எச்-370: யாருக்கும் இப்போது அக்கறை இல்லை!

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.எச்-370 விமானம் காணாமல் போய் இன்றோடு ஓராண்டாகிறது. சர்வதேச அளவில் மிகப் பெரிய நாடுகளும் கடற் படைகளும் விமானப் படைகளும் அந்த விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கியதா, நிலத்தில் விழுந்ததா, மலைப் பகுதியில் நொறுங்கியதா என்று தெரியவில்லை. விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து சமிக்ஞை ஏதும் வெளியாகவில்லை.

விமானக் குழுவினரோ விமானப் பயணிகளோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகத் தங்களுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று யாருக்கும் தெரிவிக்கவில்லை. விமானம் பறந்த வழியில் இருந்த நிலை யங்களோ, அருகில் பறந்துகொண்டிருந்த விமானங்களோ வித்தியாசமாக எதையும் பார்க்கவோ கேட்கவோ இல்லை. விமானம் கடத்தப்பட்டதாக எந்த அமைப்பின் மீதும் சந்தேகம் வரவில்லை. விமானத்தைத் தாங்கள் கடத்தியதாகவும் யாரும் தெரிவிக்கவில்லை. இது விபத்துதான் என்றால், விமானத்தின் எந்தப் பகுதியும் எப்படி இத்தனை நாட்களாக வெளியில் வராமல் இருக்கிறது என்று தெரியவில்லை.

2014 மார்ச் 8

அமெரிக்காவைச் சேர்ந்த பள்ளிக்கூட ஆசிரியை சாரா பாஜ்ச், பெய்ஜிங்கில் உள்ள தனது அடுக்ககத்திலிருந்து நண்பர் பிலிப் அந்த விமானத்தில் வரப்போகிறார் என்று காத்திருந்தார். அந்த விமானம் காணாமல் போனதாக, உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று ஒளிபரப்பானது. ஆஸ்திரேலியத் தொழிலதிபரும் துப்பறியும் நிபுணருமான ஈத்தன் ஹண்ட் துபாயிலிருந்து பாரீஸுக்கு விமானத்தில் அப்போது சென்றுகொண்டிருந்தார். தூரக் கிழக்கு நாட்டி லிருந்து ஒரு விமானம் வழிதவறிப் பறந்து, ஐரோப்பாவுக்குச் சென்றுவிட்டதாக வெளியான செய்தியை ஈத்தனின் உறவுக்காரப் பெண் அவருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தார். அடிக்கடி தனக்கு வந்த மின்னஞ்சல் செய்தியால் குழப்பமடைந்த ஈத்தன், பாரீஸ் நகருக்குச் சென்றதும் ஹோட்டல் அறையில் உள்ள தொலைக்காட்சியில் செய்தியைப் பார்க்கத் தொடங்கினார்.

மர்மமான மறைவு

கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்குக்கு இரவு 12.41 மணிக்குப் புறப்பட்ட அந்த விமானம் காணாமல் போய்விட்டது. விமானம் ஆபத்தில் சிக்கியிருப்பதாக விமானி எந்தத் தகவலையும் அனுப்பவில்லை. இரவு 1.30 மணிக்கு ஜப்பானைச் சேர்ந்த போயிங் 777 விமானம் அருகில் பறந்தது. அந்த விமானி எம்.எச்.370-ஐத் தொடர்புகொண்டு 'வியட்நாம் வான் எல்லையில் நுழைந்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். பதில் ஏதும் வரவில்லை.

மலாக்கா நீரிணைப் பகுதியில் உள்ள புலாவ் பேரக் என்ற தீவில் பின்னிரவு 2.40 மணிக்கு அந்த விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக மலேசிய விமானப்படைத் தளபதி டான் ரோட்சாலி தாவுத் தெரிவித்தார். மார்ச் 11-ல் இப்படிக் கூறிய விமானப்படை தளபதி, தான் அப்படிக் கூறவேயில்லை என்று அடுத்த நாள் மறுத்துவிட்டார். பினாங்கு நகருக்கு வட மேற்கில் 200 மைல்கள் தொலைவில் பின்னிரவு 2.15 மணிக்கு ராடாரில் சிக்னல் கிடைத்தது என்றார். அடுத்த நாள் அதையும் மாற்றி பின்னிரவு 2.30 மணி என்று நேரத்தைத் திருத்தினார்.

விமானத்தில் இருந்த யாரோ தகவல் தொடர்பு கருவிகளைப் பயன்படுத்த முடியாமல் தொடர்பைத் துண்டித்ததாகவும், தொடர்ந்து 6 மணி நேரத்துக்கு விமானம் நிலையில்லாமல் மிதந்துகொண்டே இருந்ததாகவும், பயணியர், விமானக் குழுவினர் உள்ளிட்ட 239 பேரும் போதிய பிராணவாயு கிடைக்காமல் செயலிழந்துவிட்டதாகவும் மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் மார்ச் 15-ம் நாள் அறிவித்தார்.

லட்சக் கணக்கானவர்கள் தேடல்

இணையதளத்தில் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொண்ட லட்சக் கணக்கானவர்கள் தங்கள் பகுதியில் விமானத்தின் சிதைவுகள் தென்படுகின்றனவா என்று தேடத் தொடங்கினார்கள். கடல் பரப்பில் ஏதாவது மிதந்துவருகிறதா, எண்ணெய்ப் படலங்கள் தென்படுகின்றனவா என்று மலேசியா, வியட்நாம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளையொட்டிய கடல் பரப்பில் தேடுதல் வேட்டை தொடங்கியது. மலேசிய அரசு எதையோ மறைக்கிறது, அல்லது தேடுதலில் ஆர்வம் காட்டவில்லை என்று பிற்பாடு நினைத்த பலர், தாங்களாகவே குழுவாகச் செயல்பட்டுத் தேட முற்பட்டார்கள்.

ஆசிரியை சாரா பாஜ்ச் பலமுறை பேட்டி காணப்பட்டார். அவர் எதிர்பார்த்துக் காத்திருந்த நண்பர் பிலிப் உட், ஐ.பி.எம். நிறுவனத்தின் அதிகாரி. 3 ஆண்டுகளாக இருவருக்கும் நட்பு. இருவரும் கோலாலம்பூரில் ஒன்றாகச் சேர்ந்து வாழத் திட்டமிட்டிருந்தனர். அவர் இறந்திருக்க மாட்டார் என்று சாரா உறுதியாக நம்புகிறார்.

இந்த விமானத்தில் சென்றவர்களில் ஒருவர்கூட நண்பரோ, உறவினரோ இல்லையென்றாலும், இந்த விமானத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் ஈத்தன் ஹண்ட் (55). ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பிறந்த அவர் உடற்பயிற்சி மையம், கணினி மென் பொருள் நிறுவனங்களை நடத்துகிறார்.

21-வது நூற்றாண்டில் ஒரு விமானம் சுவடே இல்லாமல் காணாமல் போய்விட முடியுமா என்பதுதான் அவரது தீவிரத்துக்குக் காரணம். பிரேசில் நாட்டின் நாலாவது பெரிய ஹோட்டல் குழு மத்தின் அதிபர் மார்ட்டின் வான் ஸ்லை (51). ஏர்பிரான்ஸ் விமானம் 447, அட்லான்டிக் பெருங்கடலில் 2009-ல் விழுந்து விபத்துக்குள்ளானதில் தன்னுடைய தங்கை அட்ரியானாவை இழந்தவர் மார்ட்டின் வான் ஸ்லை. எனவே, இம்மாதிரி விமான விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு உதவுவதற்காக அமைப்பை ஏற்படுத்தினார். எம்.எச்-370 விபத்துக்கு உள்ளானவுடனேயே அதில் சென்றவர்களின் உறவினர்கள் சிலரை, லாக்கர்பி விமான விபத்தில், நியூயார்க்கில் நடந்த இரட்டைக் கோபுரத் தகர்ப்பில் தங்களுடைய உறவினர்களை இழந்தவர்கள் தொடர்புகொண்டு அனுதாபம் தெரிவித்தார்கள்.

பெரும் தொகை பரிசு!

இந்த விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்பதை அரசுகளின் உதவியின்றித் தனிப்பட்ட முறையில் தேடி அறிவது, தகவல் தருவோருக்குப் பெரும் தொகை பரிசாகத் தரப்படும் என்று அறிவிப்பது, அதற்காக மக்களிடம் நிதி திரட்டுவது என்ற முடிவை ஈத்தன் அறிவித்தார். ஃபேஸ்புக்கில் 17 லட்சம் பேர் உறுப்பினராக இருப்பதால், 2 வாரத்தில் இந்தத் தொகை கிடைத்துவிடும் என்று ஈத்தன் நம்பினார். இதற்காக இன்டீகோகோ (Indiegogo) என்ற இணையதளத்தின் உதவியை நாடினார். விமான விபத்துக்குப் பிறகு, அதில் சென்றவர்களின் உறவினர்களை மலேசிய அரசு அழைத்தது. அங்கு ராணுவ அதிகாரிகளும் இருந்தனர். விமானத் துறை அதிகாரி களை உறவினர்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவே வந்ததுபோல அவர்கள் நடந்துகொண்டார்கள். மார்ச் 24-ல் ஏர்லைன்ஸ் விமானம் அனுப்பிய செய்தியில், "எம்.எச்.370-ல் சென்ற அனைவரும் இறந்துவிட்டனர் என்றே சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிகிறது, நாங்கள் மிகவும் வருந்துகிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்கள். பலருக்கும் இது கோபத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது. 'இப்படி இரக்கமில்லாமல் சொல்ல எப்படி முடிகிறது?' என்பதே அவர்களின் கேள்வியாக இருந்தது.

சாரா அளித்த பேட்டிகளை வைத்தே அவரைப் பலரும் அணுகினர். சந்தர்ப்பவாதிகள், சொந்த ஆர்வத்தில் துப்பறிபவர்கள், மனநல சிகிச்சை தருபவர்கள், வேறு கிரகத்திலிருந்து வந்து கடத்தியிருப்பார்கள் என்று நம்புகிறவர்கள் எனப் பலர் அவரைச் சந்தித்தனர். அரசுத் தரப்பில் அவரைச் சந்தித்தவர்கள் பிலிப்புடன் அவருக்கு எப்படி நெருக்கம் என்று இங்கிதமில்லாமல் பல கேள்விகளை எழுப்பினார்கள். விபத்து நடந்த 8 வாரங்களுக்குப் பிறகு, சாராவின் முகவரி கிடைத்து அவரைக் கண்டுபிடித்தார் ஈத்தன் ஹண்ட். சாரா முதலில் அவரை நம்பவில்லை.

6 பேர் குழு

விமானத்தைப் பற்றி தகவல் அறியும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் 6 பேர். அமெரிக்க பள்ளிக்கூட ஆசிரியை சாரா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஈத்தன், பிரேசிலைச் சேர்ந்த மார்ட்டின் வான் ஸ்லைஸ், பிரெஞ்சுத் தொழிலதிபர் கிஸ்லெய்ன் வாட்டர்லூஸ், சென்னையைச் சேர்ந்த மனித வள ஆற்றல்துறை ஆலோசகர் கே.எஸ். நரேந்திரன், புணேயைச் சேர்ந்த பிரஹ்லாத் ஷிர்சாத். சில மலேசிய, சீனக் குடும்பங்களையும் இவர்கள் தொடர்புகொண்டனர். அரசு தேடுவதே போதும் என்றனர் அந்தக் குடும்பத்தினர். 50 லட்சம் டாலர் திரட்டப்பட்டால் அதிலிருந்து நிதி பெறவும் விருப்பம் காட்டினர்.

பிறகு, அந்த விமானத்தில் சென்றவர்களின் புகைப்படங்களைத் தொகுத்து வெளியிட்டு, விபத்துபற்றித் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன் நன்கொடை தருமாறும் அழைப்பு விடுத்தார்கள். தகவல் தருவோருக்குச் சன்மானம் உண்டு என்றும் அறிவித்தனர். எதிர்பார்த்தபடி தகவலோ, நன்கொடைகளோ வரவில்லை. 1,00,516 டாலர்கள் மட்டுமே வசூலானது. தொகை குறைவாக இருந்ததால், பரிசு தரும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு, கிடைத்த தொகையைக் கொண்டு புலனாய்வு வேலையைத் தொடங்கினர். ஆனால், எந்தத் தகவலும் கசிந்துவிடாதபடி அதிகாரிகள் தடுத்தனர்.

கோலாலம்பூரில் பாதுகாப்பு எப்படி?

கோலாலம்பூர் விமான நிலையத்தையும் ஈத்தன் ஒரு நாள் முழுக்கத் தங்கியிருந்து நோட்டமிட்டார். வான் பயணிகளுக்கு உணவு, சிற்றுண்டி, பானங்கள் எடுத்துச் செல்லும் சரக்கு வண்டிகள் எந்தவிதச் சோதனையும் இல்லாமல் விமான நிலை யத்துக்குள் போவதும் வருவதுமாக இருந்தன. யார் வேண்டுமானாலும் விமானம் நிற்குமிடம் வரை தடையில்லாமல் செல்லும் வகையில் இருந்தது பாதுகாப்பின் லட்சணம்! மலேசியாவின் பட்டர்ஒர்த் என்ற ராணுவத் தளத்தில் அந்த விமானம் தரையிறங்கிய பிறகு, வேறு எங்கோ பறந்திருக்க வேண்டும் என்கிறார் ஈத்தன். தென் பசிபிக் பெருங்கடலில் ஏன் தேடுதல் வேட்டை நடக்கவில்லை என்று கேட்கிறார் சாரா. இந்தோனேசியாவில் மட்டுமே மக்கள் வசிக்காத 16,000 தீவுகள் இருக்கின்றன. அவற்றில் ஏராளமானவை மிகவும் சிறியவை. அவற்றில் மூன்றில் ஒரு பகுதி தீவுகள் மழைக் காட்டுக்குள் விமானத்தை மறைத்துவைக்கும் அளவுக்குப் பெரியவை.

சில கேள்விகள்

ஆக்ஸிஜன் இன்றி விமானத்தில் உள்ளவர்கள் இறந்திருப்பார்கள் என்று ஒரு ஊகம் சொல்லப்படுகிறது. விமானப் பயணிகளும் குழுவினரும் இறந்துவிட்ட பிறகு, விமானம் மட்டும் எப்படி தனியாக, எந்த ராடாரிலும் சிக்காமல், ஓசையின்றி, 6 மணி நேரம் பறந்திருக்க முடியும்? அப்படியே கடலிலோ தரையிலோ விழுந்திருந்தாலும் எப்படி உடையாமல், நொறுங்காமல், பாகங்கள் சிதறாமல் அப்படியே பொட்டலம்போல கண் மறைவாக விழுந்திருக்க முடியும்? இதை ஈத்தனும் சாராவும் கேட்கின்றனர்.

பதவியில் இருப்பவர்களின் நடவடிக்கைகள் வினோதமாகவும், மர்ம மாகவும் இருப்பதால் சந்தேகங்கள் வலுக்கின்றன. விமானம் கடலில் விழுந்தால் அது விரைவில் தெரிந்துவிடும். விமானம் புறப்பட்ட உடனேயே யாரோ அதைத் தங்களுடைய கட்டுப் பாட்டுக்குக் கொண்டுவந்துவிட்டார்கள் என்கிறார் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் பிரிட்டிஷ் தலைமை நிர்வாகி டிம் கிளார்க். சென்னையைச் சேர்ந்த கே.எஸ். நரேந்திரனும் தென் சீனக் கடல் வழியாக விமானம் பறந்திருக்கலாம் என்கிறார்.

பைலட்டின் கடைசி கோரிக்கை

ஈத்தன் இந்த விசாரணையில் இப்போதும் தீவிரமாக இருக்கிறார். அந்த விமானம் புறப்படுவதற்கு முன்னால் அங்கு வந்த பைலட், கூடுதலாக 2 மணி நேரம் பறப்பதற்கேற்ப எரிபொருள் நிரப்பச் சொன்னாராம். இதைக் கூறிய ஈத்தனிடம் இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டபோது இல்லை என்றார். அதே சமயம், பைலட்டுகள் இப்படி அடிக்கடி கேட்பது வழக்கம்தான் என்றும் குறிப்பிட்டார். 2 மணி நேரம் கூடுதலாகப் பறந்தால், மாலத் தீவுகளிலோ அமெரிக்கக் கடற்படைத் தளம் இருக்கும் டீகோ கார்சியா தீவுக்கோ செல்ல முடியும். இந்த விபத்துகுறித்துத் துப்புத் துலக்க, ஈத்தன் அணுகிய தனியார் துப்பறியும் நிறுவனத்துக்குக் கொடுத்த பணம் செலவாகிவிட்டது.

கடந்த சில மாதங்களாக அவர்கள் பணம் வாங்கிக்கொள்ளாமலேயே துப்பறிந்துவருகிறார்கள். அப்புறம் தந்தால் போதும் என்கிறார்கள். நிச்சயம் உண்மை வெளியாகும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் மார்ட்டின். சாரா பொறுமையிழந்துவிட்டார். இனிமேல் யார் வந்தாலும் எனக்கும் பிலிப்புக்கும் உள்ள நட்பு பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்க மாட்டேன் என்கிறார். விமானத்தைப் பற்றித் திட்டவட்டமாக ஏதாவது தெரிந்தால் பேச வாருங்கள் என்று சலிப்பு, கண்டிப்பு கலந்த குரலில் கூறுகிறார்.

© 'தி கார்டியன்'

தமிழில் சுருக்கம்:சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x