Published : 17 Mar 2015 12:22 pm

Updated : 17 Mar 2015 18:01 pm

 

Published : 17 Mar 2015 12:22 PM
Last Updated : 17 Mar 2015 06:01 PM

உயர்வதும், உயர்த்துவதும்: ஆங்கிலம் அறிவோமே- 49

49

எங்கள் பேராசிரியர் “We shall call it a day” என்று அவ்வப்போது கூறுகிறார். அவர் என்னதான் சொல்ல வருகிறார்? அதுவும் வகுப்பு முடியும்போது இதைச் சொல்கிறார். “இதுதான் சிறந்த தினம்’’ என்று அதற்கு அர்த்தமா? அதாவது தன் வகுப்பைத் தானே பாராட்டிக் கொள்கிறாரா?

மேலே உள்ளது ஒரு வாசக மாணவரின் சந்தேகம். ‘நண்பரே உங்கள் பேராசிரியர் தற்பெருமையாக எதையும் குறிப்பிட்டுவிடவில்லை. அவர் என்னதான் சொல்ல வருகிறார் என்பதை நீங்களேகூட உங்களையும் அறியாமல் கூறியிருக்கிறீர்கள்.

Call it a day என்றால் வகுப்பு அல்லது பணி முடிவடைந்துவிட்டது. (அதாவது இன்றைக்கு). I shall call it a day என்றால் மறைமுகமாக “போதும். நான் கிளம்புகிறேன்” என்று அர்த்தம். அதனால்தான் வகுப்பு முடிவடையும்போது கடைசியாக அதைச் சொல்கிறார் உங்கள் ஆசிரியர்.

Day in and Day out ஆங்கிலத்தில் பல சந்தேகங்களை வாசகர்கள் கேட்கிறார்கள். ஓரிரு வாக்கியங்களில் பதிலளிக்க முடிந்தவற்றுக்கு நேரடியாகப் பதிலளிக்கிறேன். ‘இதற்கான பதிலைப் பலரும் ​அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று கருதினாலோ, நீளமான பதில் தேவைப்படுகிறது என்றாலோ, அதை இந்தத் தொடரில் எழுதலாமென்று தீர்மானிக்கிறேன். Day by day இரண்டாவது வகை பதில்கள் தேவைப்படும் கேள்விகள் அதிகமாவதால் வாசகர்கள் கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

முந்தைய பாரா ஒரு தன்னிலை விளக்கம் மட்டுமல்ல. Day என்ற வார்த்தையை வேறு எப்படியெல்லாம்கூடப் பயன்படுத்தலாம் என்பதற்கான எடுத்துக்காட்டும் கூட.

Day in and day out என்றால் நெடுங்காலமாக என்ற அர்த்தம்.. I have been living here day in and day out.

Day by day என்றால் தினமும் என்று அர்த்தம். நாளுக்கு நாள் என்ற அர்த்தமும் உண்டு. ​ Prices are rising day by day.

ராஜிநாமா செய்வதை ‘பேப்பர் போடுவது’ என்று குறிப்பிடும் மென்பொருள் ஊழியர்களின் பேச்சுவழக்கில் a day off என்றால் ஒருநாள் விடுமுறை என்று அர்த்தம்.

Every dog has its day என்றால் ஒவ்வொரு நாய்க்கும் அதற்குரிய சிறப்பு ஒரு நாளில் உண்டு என்பது அர்த்தம். அதாவது ‘வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்’ என்பார்களே அதுபோல.

CAN – MAY – COULD - MIGHT

Can, May, Could, Might ஆகிய நான்கு வார்த்தைகளில் எதை எப்போது பயன்படுத்தலாம் என்று கேட்டிருக்கிறார் ஒரு நண்பர்.

Can என்பது முடியும் என்பதைத் தெரிவிக்கும் ஒரு வார்த்தை. என்னால் இந்த நதியில் நீச்சலடித்து மறுகரைக்குச் செல்ல முடியும் என்றால் I can swim across this river.

அவரால் இந்தக் கணக்கைப் போட முடியும் என்றால் He can work this sum.

ஆக, can என்பது ஓர் ஆக்கபூர்வமான உறுதிப்பாட்டை உணர்த்துகிறது.

ஆனால் May என்பது ‘வாய்ப்பு உண்டு’ என்பதையே வெளிப்படுத்துகிறது. அதாவது நடக்கலாம், நடக்காமலும் போகலாம்.

He may be at home என்றால் அவன் வீட்டில் இருக்கலாம் என்று அர்த்தம். (அதாவது இல்லாமலும் போகலாம்).

It may rain tomorrow என்றால் மழை பெய்யுமா என்பதை யூகம் செய்ய நீங்கள் இங்கி, பிங்கி, பாங்கி போட்டுப் பார்க்கலாம். அல்லது வானிலை ரமணனை ஆலோசித்துவிட்டு (அதன்படியோ, அதற்கு எதிராகவோ) குடையை எடுத்துச் செல்லலாம் அல்லது கையை வீசிக் கொண்டு நடக்கலாம்.

மேலும் தெளிவாக வேறுபாட்டை உணர வேண்டுமென்றால் கீழே உள்ள இரண்டு வாக்கியங்களைப் படியுங்கள்.

1) It cannot be true.

2) It may not be true

இவற்றின் அர்த்தங்கள் மு​றையே “அது ஒருபோதும் உண்மையாக இருக்காது’’, “அது உண்மையாக இல்லாமலும் இருக்கலாம்’’.

இந்த இரண்டு வித்தியாசங்களைத் தெரிந்து கொண்டால், எப்போது could, எப்போது might என்பதும் தெளிவாகவே புரியும்.

நிகழ்காலத்துக்கு can பயன்படுத்தினால், கடந்த காலத்துக்கு could. நிகழ்காலத்துக்கு may பயன்படுத்தினால், கடந்த காலத்துக்கு might.

I can swim across this river. I could swim across this river when I was young.

He says it may be true. He said it might be true.

RICE – RISE - RAISE

Rice என்றால் அரிசி அல்லது சாதம்.

Rise என்றால் உயர்வது அல்லது அதிகமாவது என்று பொருள். Water level is rising. Population is rising.

Raise என்பதும் உயர்வது அல்லது அதிகமாவதுதான். ஆனால் இதுதானாக நடைபெறுவதல்ல. வேறு ஒருவருடைய (அல்லது வேறொன்றின்) முயற்சி தேவைப்படுகிறது என்று அர்த்தம். I raised him from his childhood என்றால் குழந்தையிலிருந்தே நான் அவனை வளர்த்து வருகிறேன் என்று அர்த்தம். Please raise the cot என்றால் ‘கட்டிலை உயர்த்து’ என்று அர்த்தம்.

இந்த வித்தியாசத்தை இப்படியும் குறிப்பிடலாம். Rise என்பது மேலே செல்வது. The sun rises. Hot air rises. (அதாவது ​சூரியன் தானாக எழுகிறான். வெப்பமான காற்று தானாக மேலெழும்புகிறது).

Raise என்பது மேலே செலுத்த வைப்பது அல்லது ஒரு மேம்பாட்டுக்கு உட்படுத்தப்படுவது.

Raise your hands.

The Company has a need to raise its effectiveness.

(அதாவது கையை நீங்கள் உயர்த்த வேண்டும். திறமையை நிறுவனம் உயர்த்த வேண்டும்).

Rise என்ற வார்த்தையின் past tense rose. அதன் past participle risen.

Raise என்பதன் past tense raised. அதன் past particple-ம் raised என்பதுதான்.

(இந்த past participle என்பதைப் பற்றிக் கொஞ்சம் விளக்கமாகப் பிறகு பார்க்கலாம். ஏனென்றால் பலருக்கும் சந்தேகங்கள் வரும் விஷயம் இது. இப்போதைக்கு has, have, had போன்ற வார்த்தைக்குப் பின்னால் இடம்பெற வேண்டிய வார்த்தை என்று இதைத் தோராயமாக வைத்துக் கொள்வோம்).

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

ஆங்கில அறிவுமொழி அறிவுஆங்கில பயிற்சிஆங்கிலம் அறிவோமேபொதுஅறிவுஆங்கில வழிகாட்டி

You May Like

More From This Category

More From this Author