Last Updated : 20 Mar, 2015 03:06 PM

 

Published : 20 Mar 2015 03:06 PM
Last Updated : 20 Mar 2015 03:06 PM

ரோஹித் சர்மா நோ-பால் விவகாரம்: வங்கதேச ரசிகர்கள், ஊடகங்கள் கொந்தளிப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட்டில், மெல்போர்னில் நேற்று நடைபெற்ற 2-வது காலிறுதிப் போட்டியில் இந்திய அணிக்குச் சார்பாக நடுவர்கள் செயல்பட்டதாக வங்கதேச ஊடகங்கள் சாடியுள்ளன.

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வங்கதேச ரசிகர்கள் தங்கள் கோபத்தை கொட்டித் தீர்த்துள்ளனர். மேலும், நேற்று ஆட்டம் முடிந்தவுடன் ரசிகர்கள் பலர் வங்கதேசத்தில் ஆங்காங்கே பாக்.நடுவர் அலீம்தாருக்கு எதிராக கோஷமிட்டபடி ஆர்பாட்டம் செய்தனர். டாக்கா பல்கலைக் கழக வளாகத்தில் நடுவர் அலீம் தார் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.

அதிக விற்பனையாகும் செய்தித்தாள் ஒன்றில் ‘நடுவர்கள் வங்கதேசத்தைத் தோற்கடித்தனர்’ என்று தலைப்பு செய்தி வெளியிட டாக்கா டிரைபூன் பத்திரிகை “இந்தியாவும் நடுவர்களும் உலகக்கோப்பை காலிறுதியில் வங்கதேசத்தை தோற்கடித்தனர்’ என்று தனது செய்தியில் தலைப்பிட்டுருந்தது.

நேற்று வங்கதேச கேப்டன் மஷ்ரபே மோர்டசா வெளிப்படையாகவே நடுவர் மீது விமர்சனம் வைத்தார். “நடந்ததை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ரோஹித் விக்கெட் நிச்சயம் ஆட்டத்தை திருப்பியிருக்கும். இது குறித்து நான் எதையும் கூறுவது முறையாகாது ஆனால் அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர், என்ன நடந்தது என்பதை.” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ஷேன் வார்ன் அப்போது வர்ணனையில் இருந்தார் அவர் பந்து இடுப்புக்குக் கீழ்தான் வந்தது என்றும் அது ஒரு விக்கெட் வீழ்ச்சிதான் என்றும் கூறினார்.

ஆனால் நடுவர் அலீம் தார் உடனடியாக நோ-பால் என்று கூறியது அனைவருக்குமே சந்தேகத்தை எழுப்பியது. காரணம் உடனடியாகக் கூறும் அளவுக்கு அது இடுப்புக்கு மேல் வரவில்லை. ரிவியூவில் மட்டும்தான் அதனை உறுதி செய்ய முடியும், ஆனால் வங்கதேசம் அப்போது ரிவியூவை இழந்து விட்டிருந்தது.

இந்த தீர்ப்பை அடுத்து 90 ரன்னிலிருந்து ரோஹித் சர்மா 137 ரன்களை விரைவு கதியில் விளாசினார். அது ஒருவிதத்தில் ஆட்டத்தை மாற்றியது என்று வங்கதேச அணி நம்புகிறது.

மேலும் சில உள்ளூர் பத்திரிகைகளில் ஐ.சி.சி. என்பது இந்திய கிரிக்கெட் கவுன்சில் ஆகிவிட்டது என்று சாடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x