Published : 12 Mar 2015 10:48 AM
Last Updated : 12 Mar 2015 10:48 AM

ஐந்து ஆண்டுகளில் ரயில்வே துறையில் எல்.ஐ.சி. ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு

பொதுத்துறை காப்பீட்டு நிறுவன மான எல்.ஐ.சி. இந்திய ரயில்வேயில் 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறது. எல்.ஐ.சி மற்றும் இந்திய ரயில்வே ஆகிய நிறுவனங்களிடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்தாண்டுகளில் படிப்படியாக இந்த முதலீடு மேற்கொள்ளப்படும். இது ஒரு வர்த்தக ஒப்பந்தம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

கடன் பத்திரங்கள் வழியாக இந்த முதலீடு செய்யப்படும். இந்தியன் ரயில்வேஸ் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலமாக வெளியிடப்படும் கடன் பத்திரங்களில் எல்.ஐ.சி. முதலீடு செய்யும். அடுத்த நிதி ஆண்டின் தொடக்கத்தில் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிகிறது.

சராசரியாக ஒரு ஆண்டுக்கு 30,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படும் என்று எல்.ஐ.சி. நிறுவனத்தின் தலைவர் எஸ்.கே.ராய் தெரிவித்தார். முதலீட்டின் மீது எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, இதற்கான வட்டி விகிதம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது ஒரு வர்த்தக முடிவு.

இந்த முதலீடு காரணமாக இருவருக்கும் பயன் கிடைக்கும் என்று எஸ்.கே. ராய் தெரிவித்தார். இந்த கடன் பத்திரங்களின் முதலீட்டு காலம் 30 வருடங்கள் ஆகும். ஆனால் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் முதலீட்டின் மீதான வருமானம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையை லாபமீட்ட வைக்கும் முதல் படி இது என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். அடுத்த ஐந்தாண்டுகளில் 8.5 லட்சம் கோடி ரூபாய் ரயில்வேயில் முதலீடு செய்யப்படும் என்று தன்னுடைய பட்ஜெட் உரையில் சுரேஷ் பிரபு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

முதலீடுகள் இல்லாமல் ரயில்வே இயங்க முடியாது. நிதி அமைச்சகம் ஒதுக்கும் பட்ஜெட்டை நம்பி மட்டுமே ரயில்வே துறையை மேம்படுத்த முடியாது என்றார். மேலும் இந்த முதலீடு மூலம் இந்திய ரயில்வே துறையின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என்றார்.

வெறும் கவர்ச்சி திட்டங்களை அறிவிக்காமல், ரயில்வே துறையை மேம்படுத்துவதில் சுரேஷ் பிரபு செயல்பட்டிருக்கிறார் என்று சுரேஷ் பிரபுவை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பாராட்டினார். அவருக்கென்று தெளிவான பாதையை வகுத்துகொண்டு செயல்படுகிறார். இது அவருக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x