Published : 07 Feb 2015 15:32 pm

Updated : 07 Feb 2015 16:02 pm

 

Published : 07 Feb 2015 03:32 PM
Last Updated : 07 Feb 2015 04:02 PM

நல்ல நடிகனை உணர்ந்த தருணம் எது?- லிங்குசாமி கேள்விக்கு கமல்ஹாசன் பதில்

யூ-டியுப் இணையத்தில் உலக நாயகன் டியூப் (Ulaganayagan Tube) என்ற பெயரில் சேனல் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் கமல்ஹாசன். அதில் திரையுலகினர் கேட்கும் கேள்விகளுக்கு வீடியோ வடிவில் பதிலளித்து வருகிறார் கமல்ஹாசன்.

அந்த வகையில், இயக்குநர் லிங்குசாமியின் கேள்விகளுக்கு கமல் அளித்த பதில்கள் வெளியாகி இருக்கிறது. அதன் எழுத்து வடிவம்:


இயக்குநர் லிங்குசாமி: "நிறைய பேர் நல்ல நடிகன் என்று பாராட்டி இருப்பார்கள். ஆனால் உங்களுக்கே நீங்களே 'நல்ல நடிகன்தான்பா' என்று டிக் பண்ணிய தருணம் எது?

நடிகர் கமல்ஹாசன்: அரங்கத்தில் வரும் கைதட்டலும், பாராட்டும், ஆரவாரமும் எனக்காகதான் வருகிறது என்று ஊர்ஜிதமான தருணத்தில்தான். முதலில் போய் திரையரங்கில் உட்கார்ந்த உடன் கமல்ஹாசன் என்ற தலைப்பை பார்த்தவுடனே எனக்கு கன்னத்தில் சூடாகிவிடும், அழுகை வந்துவிடும். இதற்காக தானே நம்ம அலைந்தோம் அதான் வந்துவிட்டதே போது, எழுந்து போய்விடலாம் என்று தோணும்.

அதையும் மீறி இன்னொருத்தர் என்னம்மா நடிக்கிறாரு நாடகத்தில் எஸ்.வி. சுப்பையா, பிரமிளா பின்னிட்டாளே என்று சொல்லுவார்கள். ஆமாம் இல்ல என்று வழிமொழிவதை தவிர எனக்கு வேறு வழியில்லை. ஏனென்றால் எனக்கு அவ்வளவு தான் வேஷம். பிற்பாடு, யாருக்காவது வாய்க்குமா இந்த மாதிரியான காட்சி பாலசந்தர் எப்படி இயக்கி இருக்கிறார் என்று சொல்வார்கள். அது அவருக்கு மட்டுமே சொந்தமாகும். அந்த நடனம் நல்லாயிருக்கு யார் நடன இயக்குநர் என்று கேட்பார்கள் ஒரு கேள்வி. அது நடன இயக்குநருக்கு மட்டுமே உரித்தானது.

கடைசியாக உன்னை விட்டால் யாரும் செய்ய முடியாது என்று சொல்வார்கள். அது மட்டும்தான் என்னை நடிகனாக உணர்ந்த தருணம். அது நடக்க ரொம்ப நாளானது. பாலசந்தர் எல்லாருக்கும் முன்னாடியே சொன்னார் என்பது தான் அவருடைய பெருமை. ஆனால், எனக்கு மக்கள் அதை சொல்லுவதற்கு 4, 5 வருடங்கள் காத்திருந்தேன். நானே கண்ணாடியில் சொல்லிக் கொள்வேன்... நீ நடிகன் ஆயிட்டே, கவலைப்படாதே, கவலைப்படாதே என்று. ஆனால், அது போதவில்லை. மக்கள் சொல்ல வேண்டும், அவ்வாறு சொல்லுவதற்கு 4 வருடங்கள் ஆனது. அதை உணர்ந்த தருணமே இருக்கிறது.

பாலசந்தர் அவர்கள் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். '16 வயதினிலே' பாராட்டப்பட்டபோதுதான் அவர் நிம்மதி அடைந்தார். ஏனென்றால் நான்தான் பண்ணினேன், நீ ஒன்றுமே பண்ணவில்லை என்று சொல்லுவாங்கடா என்றார். அந்த பெருந்தன்மைக்கு இன்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.

இயக்குநர் லிங்குசாமி: நிறைய கதாபாத்திரங்கள் பண்ணிட்டீர்கள். எந்த கதாபாத்திரம் பண்ணும்போது, அல்லது பண்ணி முடிந்த பின்பு வெளியே வர முடியாமல் ஒரு தவிப்பு இருக்கும். அந்த தவிப்பு எந்த கதாபாத்திரத்தில் இருந்தது?

நடிகர் கமல்ஹாசன்: என்னுடைய நிஜ கேரக்டர். கமல்ஹாசனாக நடிக்க வேண்டிய தேவை இல்லாமல் போனாமலும் கூட தொடர்ச்சியாக நடிக்க வேண்டியதிருக்கிறது. காரணம் அதுவாகவே மற்றவர் மனதில் பதிந்துவிட்டேன். நிஜமாகவே நான் யார்? என்ற கேள்விக்கான பதிலைத் தேடி தான் பாக்கியுள்ள வாழ்நாளை கழிக்கலாம் என்று இருக்கிறேன்.

இயக்குநர் லிங்குசாமி: உங்களிடம் மட்டுமே இந்தக் கேள்வியை கேட்க முடியும். ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்காக ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்திருக்கிறார், சச்சின் கிரிக்கெட்டிற்காக ஒரு விஷயம் பண்ணுகிறார். அதே மாதிரி சின்ன வயதில் இருந்தே நடிக்கிறீர்கள். எப்படி இதனை நீங்கள் அடுத்து வரும் தலைமுறையினருக்கு கடத்தலாம் அல்லது கற்றுக் கொடுக்கலாம் என்ற ஐடியா இருக்கிறதா?

நடிகர் கமல்ஹாசன்: கண்டிப்பாக இருக்கிறது. 25 வருடத்திற்கு முன்பே யோசித்தது, அரசியல் குறுக்கீடு காரணமாக பயந்து ஒதுங்கிவிட்டேன். இப்போது அரசியல் சம்பந்தப்பட்டவர்களே திறன் மேம்பாடு (Skills and Development) அப்படிங்கிற ஓர் அடிப்படை தேவையை உணர்ந்து கொண்டு, அதை மேம்படுத்திச் செய்யும் ஓர் அமைப்புக்குத் தலைவராக நியமித்து இருக்கிறார்கள். ஊடக மற்றும் பொழுதுபோக்குக்கான திறன் மேம்பாடு (Skills at developmet for media and entertainment) அதை ஒரு தளமாகவும், படிக்கட்டாவும் வைத்துக் கொண்டு அடுத்த கட்ட முயற்சியில் இறங்கிக் கொண்டிருக்கிறேன்.

சினிமா துறை என்பது அதிர்ஷ்டத்தை நம்பியே மட்டும் அல்ல. இது ஒரு கலை. மகாபலிபுரத்தில் இருக்கும் சிற்பங்கள் எல்லாம் யாரோ ஒருவர் உளி எடுத்துக் கொண்டு போய் பாறையில் செதுக்கினார்கள் என்று சொல்ல முடியாது. பல கலை நுட்பங்கள், தொழில்நுட்பங்கள் கற்றுக் கொண்டு பல மாணவர்கள் கற்ற இடமாக இருந்திருக்க வேண்டும். அப்படித்தான் கோடம்பாக்கமும் இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

இந்தியாவில் இருக்கிற 5 ஸ்டார் ஹோட்டல்கள் எண்ணிப் பாருங்கள், கேட்டரிங் இன்ஸ்டிட்யூட் எத்தனை இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அதே மாதிரி சினிமா திரையரங்கையும் என்ணிப் பாருங்கள், இன்ஸ்டிட்யூட் எத்தனை இருக்கிறது என்று எண்ணிப் பாருங்கள். அப்போது தான் தெரியும் கண்டிப்பாக தேவை என்று. அது உலகத் தரத்தில் இருக்க வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ப்ரான்ஸ், சிங்கப்பூர் நாடுகளில் உள்ளவர்களிடம் இருந்து பேசிக் கொண்டிருக்கிறேன். நல்ல ஒரு முடிவு என்னால் சொல்ல முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன்.

லிங்குசாமிகமல்ஹாசன்நடிகனாக உணர்ந்த தருணம்

You May Like

More From This Category

More From this Author