Published : 09 Feb 2015 08:28 PM
Last Updated : 09 Feb 2015 08:28 PM

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: அதிமுக மீது விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிமுக மேற்கொள்ளும் தொடர் செயல்பாடுகள் திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.

ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்கு வரும் 13-ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், இடைத்தேர்தலில் போட்டியிடும் பல்வேறு கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள், வாக்கு சேகரிக்க செல்லும் மற்ற கட்சியினரைத் தாக்குகிறார்கள் என அதிமுக மீது சராமாரியான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எம்.சுப்ரமணியம் அவரது கட்சி நிர்வாகிகளுடனும், தொண்டர்களுடன் வீதி வீதியாக வாக்கு சேகரிக்க சென்ற போது, ஆளும் அதிமுக கட்சியை சேர்ந்த சிலர் வாக்குவாதம் செய்தனர். பின்னர், இரு தரப்பிலும் தாக்குதல் நடந்தது.

அதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அண்ணாதுரை வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதிமுகவுக்கும் மோதல் ஏற்பட்டது.

விஜயகாந்த் கண்டனம்

ஸ்ரீரங்கத்தில் பாஜக, மார்க்சிஸ்ட் கட்சியினர் அதிமுகவினரால் தாக்கப்பட்டதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜயகாந்த், ''அதிமுகவினர் தாக்குதல் நடத்தியது சட்டவிரோத செயல். தேர்தல் நியாயமாக நடக்க வன்முறையாளர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' தெரிவித்தார்.

இடைத்தேர்தலை ஒத்தி வைக்க தமிழிசை வலியுறுத்தல்

இந்நிலையில், இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் வலியுறுத்தி உள்ளார்.

''பாஜக தொண்டர்களை தாக்கிய அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் வழக்கில் சிறை சென்றதால் நடக்கும் இடைத்தேர்தலிலும் முறைகேடு நடக்கிறது.'' என்று சக்சேனாவிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் மனு அளித்துள்ளார்.

சந்தீப் சக்சேனா உத்தரவு

அரசியல் கட்சிகள் தரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சந்தீப் சக்சேனா தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். புகார்களை வாங்க மறுக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சக்சேனா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x