Published : 11 Feb 2015 11:09 AM
Last Updated : 11 Feb 2015 11:09 AM

ரூ.1,000 கோடி திரட்ட பிஎன்பி திட்டம்

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) ரூ.1,000 கோடி நிதி திரட்ட உள்ளதாக அறிவித்துள்ளது. நீண்ட கால பத்தி ரங்கள் மூலம் இந்த தொகையை திரட்ட திட்டமிட்டுள்ளது.

தொழில் வளர்ச்சி மற்றும் மூலதன தேவை விதிகளுக்கு ஏற்ப இந்த தொகையை திரட்டுகிறது. தனிநபர்களிடமிருந்து இந்த தொகையை திரட்ட உள்ளது.

மும்பை பங்குச் சந்தைக்கு குறிப்பிட்டுள்ள விண்ணப்பத்தில் இந்த விவரங்களை பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. வங்கி ரூ.1,000 கோடி திரட்ட உள்ளதாகவும், இது தனியாரிட மிருந்து திரட்ட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் தகுதி வாய்ந்த ஐந்து நபர்கள் வழி திரட்ட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 2.5 சதவீதம் அதிகரித்து ரூ.774.56 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.755.41 கோடியாக இருந்தது.

வங்கியின் மொத்த வாராக்கடன் மதிப்பு 5.97 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் 4.96 சதவீதமாக இருந்தது. நிகர வாராக்கடன் மதிப்பு 3.82 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 20.80 சதவீதமாக இருந்தது.

டிசம்பர் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் அதிகரித்து ரூ.12,904.85 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.11,922.30 கோடியாக இருந்தது. வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.2,751 கோடியாக உள்ளது. இது கடந்த வருடம் இதே காலகட்டத்தில் ரூ.2,702 கோடியாக இருந்தது.

இதற்கிடையே பொதுத்துறை வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்க மத்திய அரசு ரூ.11,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஏற்கனவே அறிவித்திருந்தது. அதில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.870 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகள் சர்வதேச வங்கி தரத்துக்கு உயர (பேசல் 3) தங்களது மூலதனத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. அதனடிப்படையில் இந்த தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது.

2018ல் பேசல் 3 என்கிற நிலையை நமது வங்கிகள் எட்டுவதற்கு ரூ. 2,40,000 கோடி மூலதனம் தேவை என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையை எட்ட வங்கிகள் வேறு வழிகளில் தங்களது மூலதன திரட்டலுக்கு வழி காண வேண்டும் என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

நேற்றைய வர்த்தகத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் ரூ.172 வரை வர்த்தகம் கண்டது. வர்த்தக நேர முடிவில் ரூ.166 என்கிற விலையில் முடிவடைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x