Published : 13 Feb 2015 13:55 pm

Updated : 13 Feb 2015 13:55 pm

 

Published : 13 Feb 2015 01:55 PM
Last Updated : 13 Feb 2015 01:55 PM

திருமணமா, திருவிழாவா?

தெர்மகோல் அலங்கார எழுத்துகள், ஃபிளெக்ஸ் பேனரில் சிரிக்கும் முகங்கள், கலர்கலராக பிளாஸ்டிக் அலங்காரத் தோரணங்கள், பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர், பிளாஸ்டிக் கப் - தட்டு... கல்யாணம் என்றவுடன் இதெல்லாம்தான் நம் ஞாபகத்துக்கு வரும்.

இது எதுவும் அவசியமில்லை, நினைத்தால் முழுக்க முழுக்க சுற்றுச்சூழலுக்கு நட்பான பசுமைத் திருமணத்தை நடத்த முடியும் என்று செய்து காட்டியிருக்கிறார்கள், மதுரை நாணல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த தமிழ்தாசன் - துர்காதேவி தம்பதி.

திருமணத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் நமது மண் மணம் கமழ்ந்தது. தென்னங்கீ்ற்றுகளும் தேங்காய் குலைகளும் பின்னணியாக வேயப்பட்ட மேடை. அதில் விழா விவரங்களுடன், “மரம் அழைக்கிறது, மரத்தடியில் கூடுகிறவர்கள் தோழராகிறார்கள்” என்று அனைவரையும் கைப்பிடித்து வரவேற்றது துணிப் பதாகையில் எழுதப்பட்டிருந்த வாசகம்.

வந்திருந்தவர்கள் அறிவை விரிவாக்கச் சுற்றுச்சூழல் புத்தகங்கள், குழந்தைகளை மகிழ்விக்கப் பனை ஒலை கிலுகிலுப்பை, திரும்பிச் செல்பவர்களின் வீடுகளில் பசுமையைப் பரப்பும் நம் நாட்டுத் தாவர - காய்கறி விதைகள் எனத் திரும்பிய பக்கமெல்லாம் பசுமை மயம்.

புதுவித உற்சாகம்

நமது திருமணங்களின் ஒவ்வொரு அம்சத்திலும் படிந்து போயுள்ள வழக்கமான தன்மையைத் தள்ளி வைத்துவிட்டு, நமது பண்பாட்டு அடையாளங்களை மகிழ்ச்சியாக ஞாபகப்படுத்துவதுபோல இருந்தது அந்த விழா. தப்பாட்டம், ஒயிலாட்டம், சிறுவர்-சிறுமிகளின் சிலம்பக் கலை, துணிப்பை இயக்கம் தொடங்குதல், விவசாயத்தைப் பாதுகாக்கக் கையெழுத்து இயக்கம் என நமது மண்ணின் கலை, சுற்றுச்சூழல் அம்சங்கள் விருந்தாளிகளுக்குப் புது அனுபவத்தைத் தந்தன.

பகட்டான நமது திருமணங்களின் ஆழத்தில் ஒருவித இறுக்கம் இருக்கும். ஒவ்வொரு நிகழ்விலும் பரபரப்பும் பதற்றமும் தென்படும். அதெல்லாம் காணாமல் போய், உற்சாகம் கரைபுரண்டது. “இது ஒரு திருமணம் மாதிரியே இல்ல. திருவிழா மாதிரி இருந்துச்சு” என்கிறார் திருமணத்தில் பங்கேற்ற ‘வானகம்' வெற்றிமாறன். இதற்கான அச்சாரத்தை மாறுபட்ட அழகுடன் திகழ்ந்த அழைப்பிதழிலேயே காட்டிவிட்டார்கள்.

இயற்கையை நேசிப்போம்

திருக்குறளும் அகநானூற்றுப் பாடல்களும் ஒலிக்கத் திருமணம் நடந்தது. புலவர் குப்புசாமி முன்னிலையில், ஆயிரக்கணக்கான மரங்கள் செழித்து வளரப் பாடுபட்ட ‘மரம் தாத்தா’ நாகராஜனின் வாழ்த்துக்களுடன் தமிழ் முறைப்படி திருமணம் நிகழ்ந்தது.

“இயற்கையை நேசிப்போம், இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்வோம்” என மணமகனும் மணமகளும் மேடையிலேயே உறுதியெடுத்துக் கொண்டனர். கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, இயற்கை விவசாய வல்லுநரும் எழுத்தாளருமான பாமயன், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுந்தரி உள்ளிட்ட சமூகச் செயல்பாட்டாளர்கள்தான் சிறப்பு விருந்தினர்கள். அதேநேரம், யாரும் மேடையேறி வாழ்த்தவில்லை. புதுமணத் தம்பதிகளே வந்திருந்தவர்களைத் தேடிச் சென்று வாழ்த்துப் பெற்றனர்.

இப்படி மொத்தத் திருமண நிகழ்வும் நமது மண்ணின் பெருமைகளை தூக்கிப் பிடிப்பதாகவும், வழக்கமான முறைகளில் இருந்து மாறுபட்டும் இருந்தது எங்கும் காணாத புதுமை.

அதிக மாசுபடுத்தும் குடும்ப விழாக்களாக நம் வீட்டுத் திருமணங்கள் இருப்பதை, நாள்தோறும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நினைத்தால் அதைத் தலைகீழாக மாற்றிக் காட்ட முடியும் என்பதை இந்தத் திருமணத்தைப் பார்த்தபோது உணர முடிந்தது. ‘நாமும் ஏன் இப்படிச் செய்யக் கூடாது?' என்ற கேள்வியை, நிச்சயம் நாலு பேர் மனதிலாவது இந்தத் திருமணம் ஏற்படுத்தியிருக்கும்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

இது புதுமைதிருமண நிகழ்வுதிருவிழா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author