Last Updated : 05 Feb, 2015 05:26 PM

 

Published : 05 Feb 2015 05:26 PM
Last Updated : 05 Feb 2015 05:26 PM

பந்தை ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வீசுங்கள்: இந்திய பவுலர்களுக்கு வெங்கடேஷ் பிரசாத் அறிவுரை

உலகக்கோப்பை போட்டிகளில் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடாமல் பந்துகளை ஸ்டம்ப் டு ஸ்டம்ப் இந்திய பவுலர்கள் வீசுவதே நல்லது என்று முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான வெங்கடேஷ் பிரசாத் அறிவுரை வழங்கியுள்ளார்.

அடிலெய்டில் பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியா தன் முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் வெங்கடேஷ் பிரசாத் கூறியதாவது:

அதிகம் சோதனைகள் மேற்கொள்ளாமல் ஸ்டம்புக்கு நேராக வீச வேண்டும். அசாதாரண முயற்சிகள் தேவையில்லை. குறுகிய ஓவர் போட்டிகளில் பேட்ஸ்மென்களுக்கு பந்துகளை அடிக்க இடம் கொடுக்கக்கூடாது, சிக்கனமாக வீசினாலே போதும்.

இப்படியான சீரான பந்துவீச்சை இந்திய பவுலர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்திய பந்துவீச்சு கவலையளிப்பதாகவே உள்ளது. ஆனால், இதனைக் கூறும்போது இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். இரண்டு வாரங்கள் இடைவெளி உள்ளது, தவறுகளைச் சரி செய்து கொள்ள கால அவகாசம் உள்ளது. இதுவரை பவுலர்கள் சரியாக வீசவில்லை என்பது உண்மைதான், ஆனால் உலகக்கோப்பை என்பது புதிய தொடக்கம்.

பாகிஸ்தானுக்கு எதிரான அதி அழுத்த போட்டி ஒன்றில் வென்று விட்டால் போதும், அது அணியின் உணர்வுகளை தட்டி எழுப்பும்.

பாகிஸ்தானுக்கு எதிரான என்னுடைய பந்துவீச்சு தற்செயல்தான். ஆனால், ஒவ்வொரு முறை இந்தியா-பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடும் போதும் எனது பெயர் குறிப்பிடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

இன்னும் சில வீரர்கள் நம் அணியில் இருக்கிறார்கள், வரலாறு படைப்பார்கள்.

இந்திய-பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அந்தப் போட்டி ஒரு பெரிய விருந்தாக அமையும். 20 நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்த்துள்ளன என்று கேள்விப்பட்டேன். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கிணங்க ஆடுவதில் இருநாட்டு வீரர்களுக்கும் நெருக்கடி அதிகமாக இருக்கும். இந்தியா, பாகிஸ்தானுக்கு வெளியே இரு அணிகளுக்கும் அழுத்தம் பெரிய அளவுக்கு இருக்காது என்றே நான் கருதுகிறேன்.”

என்றார் பிரசாத். இவர் 161 ஒருநாள் போட்டிகளில் 196 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x