Published : 23 Feb 2015 12:22 PM
Last Updated : 23 Feb 2015 12:22 PM

கைவிட்ட தொழிலில் கரையேறினேன்- அங்கீகாரம்

சொந்த தொழில் செய்ய யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. இன்னொரு இடத்தில் வேலை செய்து வருமானத்துக்கு வழி செய்வதை விடவும், சொந்த தொழிலில் கிடைக்கும் சுதந்திரம் எல்லோரையும் ஈர்க்கத்தான் செய்யும்.

ஆனால் ரிஸ்க் அதிகம் என்பதை உணர்ந்து கொள்வதால் அந்த முடிவை மேற்கொள்வதில்லை. அப்படி ரிஸ்க் எடுத்து வெற்றிகரமாக நிற்பவர்களை அறிமுகப்படுத்தும் சின்ன அங்கீகாரம்தான் இந்த பகுதி.

ஸ்ரீரோத்கர். பூர்வீகம் திருநெல்வேலி வசிப்பது கோயம்புத்தூர். படித்தது சென்னை. பொறியியல் பட்டம் படித்து முடித்ததும் சொந்த தொழிலா? வேலையா? என்கிற நிலைமையில் சொந்த தொழில் என முடிவு செய்கிறார்.

சொந்த தொழில் என்றால் எந்த மாதிரியான தொழில் என தேடுகிறபோது டிஸ்யூ பேப்பர் தொழிலுக்கான சந்தையை புரிந்து கொண்டு அதை தேர்ந்தெடுக் கிறார்.

கோயம்புத்தூர் சார்ந்த தொழிலும் இல்லாமல், திருப்பூரை மையமாகக் கொண்ட பின்னலாடை சார்ந்த தொழிலையும் தேர்ந்தெடுக்காமல் இந்த தொழிலை தேர்ந்தெடுக்க காரணம் கேட்டோம். “நான் சொந்த தொழில் செய்யலாம் என தேடுகிறபோது, எனது நண்பரின் அப்பா இந்த தொழிலை செய்து வந்தார். ஆனால் அவரால் இதை தொடர முடியவில்லை. அவரது முதன்மை தொழிலாக ஓட்டல் தொழில் இருந்தது.

அதன் தேவைகளுக்கு ஏற்ப இந்த தொழிலை நடத்தி வந்ததால் இதில் நஷ்டத்தை சந்தித்து வந்தார்.அதை விற்பதற்கு முன் வந்ததால் இந்த தொழிலை வாங்கி சந்தையை விரிவுபடுத்தினால் லாபகரமாக இயக் கலாம் என அதை வாங்க முடிவு செய்தேன். ஆனால் உடனே வாங்காமல் அந்த தொழில் குறித்த ஆய்வுகளில் இறங்கினேன்.

தமிழ்நாட்டில் டிஸ்யூ பேப்பர் உற்பத்தியாளர்கள் குறைவு. வட மாநிலங்களில் இருந்துதான் அதிகமாக வருகின்றன. சில உற்பத்தியாளர்கள் சென்னையை மையமாகக் கொண்டு இருந்து வருகின்றனர்.

எனவே கோயம்புத்தூர் மற்றும் மேற்கு மாவட்டங்கள், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் சந்தை வாய்ப்பு இருந்தது. எனவே முதலில் சந்தையை விரிவுபடுத்தும் வேலைகளில் இறங்கினேன்.

ஒன்றரை வருடங்கள் இந்த தொழிலைக் கற்றுக் கொண்டு, ஓரள வுக்கு சந்தையை புரிந்து கொண்ட பிறகு இந்த யூனிட்டை வாங்கினேன்.

அந்த உற்பத்தி யூனிட் வாங்குவதற்கான முதலீடு 7 லட்சம் ஆனது. அதற்கு பிறகு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் தொழில்கடன் மூலம் உற்பத்தியை ஆரம்பித்தேன் என்று தனது தொழில் தொடங்கிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

தற்போது ஆண்டு வர்த்தகம் 70 லட்சம் வரை வர்த்தகம் செய்து வருகிறார். அடுத்த இரண்டு வருடங்களில் ஆண்டுக்கு ஒரு கோடி வர்த்தகம் என்கிற இலக்கு வைத்திருக்கிறார். இந்த தொழில் உடன் ஒரு முறை பயன்படுத்தும்

‘நான் ஓவன்' பொருட்கள் உள்ளிட்ட பொருட்களுக்கான வர்த்தகமும் செய்கிறார்.

உற்பத்தி தவிர மூலப்பொருட்கள் வாங்குவதிலும், சந்தையை தக்க வைத்துக் கொள்வதிலும் கவனமான இருந்தால்தான் இந்த தொழிலில் நிற்க முடியும். நான் எனது அனுபவத்தில் கற்றுத் தெரிந்து கொண்டது இது என்று குறிப்பிடும் ஸ்ரீரோத்கர் எனது பெற்றோர்களின் ஊக்கமும் வெற்றிக்கு காரணம் என்கிறார்.

தமிழ்நாட்டை விட கேரளாவில் டிஸ்யூ பொருட்களின் பயன்பாடு அதிகம். அங்கு வீடுகளில்கூட டிஸ்யூ பேப்பர்கள் பயன்படுத்துகின்றனர்.

எனவே தற்போது கேரள சந்தையில் சில்லறை விற்பனையில் கவனம் செலுத்துகிறேன் என்று தனது தொழிலின் அடுத்த கட்ட நகர்வு குறித்து நம்பிக்கை பொங்க பேசுகிறார்.

maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x