Last Updated : 01 Feb, 2015 05:10 PM

 

Published : 01 Feb 2015 05:10 PM
Last Updated : 01 Feb 2015 05:10 PM

நாக்குக்கும் வயித்துக்கும் சண்டை

“சொன்னாங்க சொன்னாங்க சுரக்காய்க்கு உப்பில்லைன்னு” - இப்படி ஒரு வாய்மொழி இருக்குங்கிறது பல பேருக்குத் தெரியும், ஆனா அதோட பொருள் இன்னதுங்கிறது எனக்கு இன்னைக்குத்தாம் தெரிஞ்சது, ராமலிங்கத்தின் மூலம்.

ராமலிங்கத்தோடு சீலத்தூர் பரமாத்மாவும் வந்திருந்தார் (சீலத்தூர்ங்கிறது சீவில்லிபுத்தூர், பரமாத்மாங்கிறது அவரோட அம்மா அப்பா அவருக்கு வச்ச பேரு)

ராமலிங்கத்தோட நாற்காலித் தொழில் டாக்டர்களுக்கு மருந்து மாத்திரைகள் ஊசி மருந்து இவை எல்லாத்தையும் ‘சப்ளை’ பண்ணுகிறது.

அதோடு, அவர் எனக்கு மட்டும் விதவிதமான பேனாக்கள், லெட்டர் பேடுகள் கொண்டு வந்து தருகிறார். என்னைப் போல எழுதுகிற நாற்காலிக்காரர்களுக்குப் “பொக்கு வாய்க்குப் பொரி மாவு” என்பது போல.

அதோடு, என்னிடம் கேட்க அவர்களுக்கு விஷயங்களும் அவர்களிடமிருந்து கேட்க எனக்கு விஷயங்களும் கிடைக்கும்.

***

வீட்டுப்பந்தியில் ரசிகமணியோடு ராஜாஜி, நீதிபதி மகராஜபிள்ளையும் மற்றவர்களும் இலையின் முன் அமர்ந்திருந்தார்கள்.

தவசுப் பிள்ளைகள் பரிமாறத் தொடங்கினார்கள். இலையில் முதலில் உப்பு வைக்கப்பட்டது.

நல்லவேளை அங்கே சங்கர் ராயர் இல்லை. இருந்திருந்தால், “முதல்லெ உப்பைக் கொண்டாந்து வைக்காம் பாரு” என்று கோபப்பட்டிருப்பார்.

சாதம் முதலில். அதன் பிறகு சாம்பார், பிறகு தொடுகறி வகைகள், இப்படி வந்து கடேசியில்தான் உப்பை ஒரு ஓரத்தில் வைக்க வேண்டும். இது சங்கர் ராயர் முறை!

இங்கே உப்பைக் கொண்டுவந்து முதலில் வைத்ததும் ராஜாஜி அவர்கள் கேட்டார். உப்புக்கு ஏன் முதல் ஸ்தானம்? யாரும் இதற்கு பதில் சொல்லவில்லை. ரசிகமணியின் மீசைக்குள் மட்டும் ஒரு புன்னகை மலர்ந்தது.

திரும்பவும் ராஜாஜியே கேட்டார்: “உப்பில் சத்து நிறைந்து உள்ளதா நாம் உண்ணும் பதார்த்தங்களைவிட?”

யாரையும் பார்த்துக் கேட்காத கேள்விக்கு யார் பதில் சொல்லுவது? யாரும் வாய் திறக்கவில்லை.

மகராஜபிள்ளை பதில் சொன்னார்:

“ருசிக்காகத்தான் நாம் உப்பைச் சேர்த்துக்கொள்கிறோம். அதனால்தான் அதன் இருப்பு ஒரு ஓரம் ஆனது”

மகராஜனின் தீர்ப்பே சரி என்றார் ராஜாஜி அவர்கள்.

***

இங்கே ராமலிங்கத்தின் பேச்சும் உப்பைச் சுற்றியே அமைந்தது.

குறிப்பிட்ட வயசுக்கு மேல நம்முடைய இந்தியர்களுக்குக் கால் வலி, கை போன்ற எலும்பு மூட்டுகளில் வலி வருவதற்குக் காரணமே நாம் சாப்பிடும் மாத்திரைகளில் உள்ள உப்பே காரணம், அதோடு நம் உணவுகளில் உள்ள உப்பும் சேர்ந்துகொள்கிறது.

மாத்திரைகளின் அடிப்படையே உப்புதான் என்கிறார் ராமலிங்கம்.

நம்முடைய வயிறு, “மாத்திரைகள் கால், சாப்பாடு முக்கால்” என்று ஆகிவிட்டது என்றார்.

மாத்திரை பாதி சாப்பாடு பாதி என்றும்கூட ஆகிவிடும்! ஆக, “சாப்பாட்டில் விஞ்சி நிற்பது உணவின் உப்பா மாத்திரையின் உப்பா” என்று பேச்சுப் போட்டி வைக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

சரி. இந்தப் பாராத்தியத்துக்கு ஒரு தீர்வு கிடையாதா என்று கேட்டதுக்கு அவர் சொன்னது: ஒரு காய் இருக்கு புழக்கடைப்பச் சிலை போல என்றார் ராமலிங்கம்.

காயா, என்ன காய்?

சுரைக்காய்தான் என்றார்.

காய்கறிச் சந்தையிலேயே மலிவாகக் கிடைக்கும் காய்.

பூசணிக்காய் பற்றி ஒரு சொல் உண்டு. “எனக்கு வேண்டாம் பூசணிக்காய் ஒனக்கு வேண்டாம் பூசணிக்காய்” என்று. அது மனசு வைத்துக் காய்க்க ஆரம்பித்துவிட்டால் வண்டி வண்டியாய்க் காய்த்துத் தள்ளும்.

சுரைக்காயில் வட்டம், நீளம் என்று இருவகை உண்டு. இவர் சொல்லுவதைப் பார்த்தால் ரெண்டும் கறிக்குப் பயன்படும்.

கணவதி சொன்னாள்: சுரைக்காய் வடை அருமையாக இருக்கும் என்று சொல்லி, செய் பக்குவத்தையும் சொன்னாள்.

ஊரில் இருக்கும்போது செய்து தந்திருக்கிறாள். தொடர்ந்து சாப்பிட்டாலும் முகத்திலடிக்காது. காய்கறிகளிலும் கீரை வகைகளிலும் வேண்டிய அளவு உப்பு இருப்பதாக ரசிகமணி அவர்கள் ஒரு தடவை சொல்லக் கேட்டிருக்கிறேன். என்றாலும் நம்முடைய மக்கள் வெள்ளரிப் பிஞ்சு சாப்பிடும்போதுகூட உப்பைத் தொட்டுக்கொள்கிறார்கள்.

சுரைக்காயின் சமாச்சாரமே தனி. நமது உடம்பில் சேர்ந்துள்ள உப்பை கொஞ்சங் கொஞ்சமாக நீக்கிவிடுகிறது.

எப்படி?

மற்றக் காய்களில் உப்பு இருக்கிறது. சுரைக்காயில் உப்பில்லை. இது ஒரு செய்தி அல்லவா. இதைத்தான் நமது பெரியவர்கள், “என்ன சொல்றான் அவன்?”

“சுரைக்காய்க்கு உப்பில்லை என்கிறான்” என்று ஆக்கிவிட்டார்கள்.

புரியலையே.

சமையலுக்கு சுரைக்காயைப் பயன்படுத்தும்போது அதில் உப்புப் போடணுமா வேண்டாமா? அட இவனே, நாக்கு என்பது வேறே வயிறு என்பது வேறடா. நாக்குக்கும் வயித்துக்கும் எப்பவும் சண்டை (பகை) உண்டு என்பதைத் தெரிஞ்சுக்கோ.

வயிறு என்பது உடம்பு;

நாக்கு என்பது நமது செல்லம்!

- கி.ராஜநாராயணன், மூத்த எழுத்தாளர், சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x