Last Updated : 13 Feb, 2015 12:31 PM

 

Published : 13 Feb 2015 12:31 PM
Last Updated : 13 Feb 2015 12:31 PM

இந்தியர் மீது கொடூர தாக்குதல்: அமெரிக்க போலீஸிடம் விசாரணை தீவிரம்

அமெரிக்காவில் இந்திய முதியவரை கண்மூடித்தனமாக தாக்கிய மேடிசான் போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்திய அரசின் வலியுறுத்தலை அடுத்து, இது தொடர்பாக புலனாய்வு விசாரணை நடத்த அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

மேலும், தாக்குதல் நடத்தப்பட்ட காட்சிகள் கொண்ட வீடியோவைக் கொண்டு, இந்த வழக்கை மனித உரிமை மீறலாக விசாரிக்கவும் ஆலோசிக்கப்படுகிறது.

குஜராத்தை சேர்ந்த சுரேஷ் பாய் படேல் (57). இவருடைய மனைவி சகுந்தலா படேல். இவர்களுடைய மகன் சிராக் படேல், அமெரிக்காவின் வடக்கு அலபாமா பகுதியில் பணிபுரிந்து வருகிறார். மகனை பார்க்க சுரேஷ்பாய் அலபாமா சென்றுள்ளார். கடந்த வாரத்தில் ஒரு நாள் காலை நடை பயிற்சிக்காக வெளியே அவர் சென்றபோது, சுரேஷ்பாயின் மீது சந்தேகத்தை எழுப்பி 'கறுப்பு இன நபர்' இங்கு உலவிக் கொண்டிருக்கிறார் என்று புகார் வந்தது.

உடனடியாக அங்கு வந்த மோடிசான் போலீஸார் சுரேஷ் பாய் படேலை கீழே தள்ளி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி, அவர் குற்றமற்றவர் என்று தெரிந்ததும் அப்படியே விட்டுச் சென்றனர். முதுகெலும்பு முறிவு, சுவாசக் கோளாறு மற்றும் ரத்த கசிவு போன்ற பலப் பிரச்சினைகளால் முற்றிலும் செயலிழந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவை இந்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது. இதனிடையே முதியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட காட்சி வெளியாகி இருப்பதால் இந்தச் சம்பவம் மனித உரிமை மீறலாக பாவிக்கப்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை கோரியுள்ளது.

புகார் அளிக்கப்பட்ட தொலைப்பேசி உரையாடல் மற்றும் போலீஸாரின் நடவடிக்கைகளின் மூலம் இது இனவெறித்தனமான தாக்குதலாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையே, தாக்குதலில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்ட மேடிசான் போலீஸாரும் தவறை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அட்லான்டாவில் உள்ள அமெரிக்காவுக்கான இந்திய தூதரக அதிகாரி அஜித் குமார் தி இந்து-விடம் கூறும்போது, "இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினருடன் தூதரக அதிகாரிகள் உதவிகளை செய்து வருகின்றனர்.

தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து இந்த வழக்கை மனித உரிமை மீறலாக எடுத்த செல்ல ஆலோசிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபரின் வழக்கறிஞருக்கு நாங்கள் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x