Published : 05 Jan 2015 08:57 am

Updated : 05 Jan 2015 15:31 pm

 

Published : 05 Jan 2015 08:57 AM
Last Updated : 05 Jan 2015 03:31 PM

பொதுச் செயலாளர் போட்டியிலிருந்து அன்பழகன் ஒதுங்க மறுப்பு?- ஸ்டாலின் ராஜினாமா வதந்தியின் பின்னணி தகவல்கள்

‘பொதுச் செயலாளர் பதவிக்கு நான் மீண்டும் போட்டியிடுவேன்’ என்று அன்பழகன் திட்டவட்டமாக கூறியதன் பின்னணியிலேயே ஸ்டாலின் ராஜினாமா செய்துவிட்டதாக வதந்தி பரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தனக்கு பொதுச் செயலாளர் பதவி மறுக்கப்படுவதால் மு.க.ஸ்டாலின் திமுக பொருளாளர் பதவியிலிருந்து ராஜினாமா, அவர் திமுக-விலிருந்தே விலக முடிவு - நேற்றைய தினம் வெளியான இந்தச் செய்திகளால் திமுக வட்டாரம் பரபரப்பானது.

செய்திகள் வெளியான சற்று நேரத்தில், ‘அத்தனையும் திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்தி, தலைவர் பதவிக்கு கலைஞரும் பொதுச் செயலாளர் பதவிக்கு பேராசிரியரும் பொருளாளர் பதவிக்கு நானும் வேட்புமனு தாக்கல் செய்கிறோம்’ என்று சொன்னார் ஸ்டாலின்.

சூழ்நிலை கருதி அவர் வெளிப்படையாக இப்படிச் சொன்னாலும் உள்ளுக்குள் புகைச்சல் அதிகரித்துக் கொண்டிருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய திமுக தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தனது ஆதரவாளர்கள் ஒருசிலரது விருப்பத்தின்படி ஸ்டாலின் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட நினைத்தது உண்மை. ஆனால், தன்னிடம்கூட ஆலோசிக்காமல் திடீரென ஸ்டாலின் தரப்பு இப்படி முடிவெடுத்ததை அன்பழகனால் ஜீரணிக்க முடியவில்லை.

‘அப்படியானால் நானும் வேட்பு மனு தாக்கல் செய்கிறேன்’ என்று அவர் சொல்லி இருக்கிறார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஸ்டாலின், ‘நீங்களே தாராளமாக போட்டியிடுங்கள்; நான் எந்தப் பதவிக்கும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை’ என்று சொல்லி இருக்கிறார். இதுதான் வெளியில், ‘ஸ்டாலின் ராஜினாமா’ செய்தியாக திரிக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு அந்த நிர்வாகி தெரிவித்தார்

மு.க.அழகிரி தரப்பில் பேசியவர்களோ, அழகிரியை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்பதில் கனிமொழி ஆர்வமாய் இருக்கிறார். தலைவருக்கும் இதில் உடன்பாடுதான். ஆனால், அவரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவதை ஸ்டாலின் கடுமையாக எதிர்க்கிறார். அதுமட்டுமில்லாமல் கட்சிக்குள் கனிமொழி முக்கியத்துவம் பெறுவதையும் அவர் விரும்பவில்லை.

கனிமொழிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என்பது தலைவர் உள்ளிட்டவர்களின் விருப்பம். ஆனால், ‘நீங்கள் தலைவர், நான் பொருளாளர், கனிமொழி துணைப் பொதுச் செயலாளர் என வரிசை கட்டி உட்கார்ந்தால் கட்சிக்குள் விமர்சனங்கள் வெடிக்காதா?’ என்று தலைவரிடம் கேட்கிறார் ஸ்டாலின். அவர் மட்டுமல்லாது அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் கனிமொழியை முன்னி லைப்படுத்துவதை விரும்ப வில்லை.

அதிகாரத்துக்கு வருவது தொடர்பாக வீட்டுக்குள் நடக்கும் சில விஷயங்களை வெளியில் சொல்லி விவாதிக்க முடியாத நிலையில் தலைவர் இருக்கிறார். 3-ம் தேதி இரவு, வழக்கம்போல சி.ஐ.டி. காலனி இல்லத்தில் தங்கி இருந்த அவர் நள்ளிரவு 2 மணிக்கு அங்கிருந்து கிளம்பி கோபாலபுரம் இல்லத்துக்கு வந்ததாகவும் சொல்கிறார்கள். மொத்தத்தில், யாரிடம் சொல்வது என்று புரியாமல் நிம்மதியைத் தொலைத்துவிட்டு நிற்கிறார் தலைவர்’’ என்கிறார்கள்.

இதனிடையே, 4-ம் தேதி காலையில் ஸ்டாலினைப் பற்றி வெளியான செய்திகளை கேள்விப்பட்டு மதுரையிலிருந்து சென்னைக்கு கிளம்பிவிட்டார் அழகிரி. அவரது நகர்வுகள் மதுரையிலுள்ள ஸ்டாலின் ஆதரவாளர்கள் மூலம் உடனுக்குடன் ஸ்டாலினுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்தே கருணாநிதியை ஸ்டாலின் அவசரமாகச் சந்திக்க வந்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், ‘தலைவர் வரச் சொன்னதாலேயே சென்னைக்கு வந்தேன்’ என தனக்கு நெருக்கமான சென்னை நண்பர்களிடம் கூறியிருக்கிறார் அழகிரி.

கனிமொழி ஆதரவாளர்களைக் கேட்டால், ‘ஜனவரி 5-ம் தேதி கனிமொழி பிறந்த நாள். கடந்த ஆண்டு கனிமொழி பிறந்த நாளில் திண்டுக்கல்லில் இளைஞரணி மாநாட்டை வைத்தார் ஸ்டாலின். இந்த ஆண்டு அதே தேதியில் திமுக பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டார்கள். தலைவர் தலையிட்டு அதை 9-ம் தேதியாக மாற்றினார்.

இந்த நிலையில் பிறந்த நாளுக்கு முதல் நாள் ‘ராஜினாமா’ செய்தியை பரப்பி சலசலப்பை உண்டாக்கி இருக்கிறார்கள்’’ என்று சொல்கிறார்கள்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

ஸ்டாலின் ராஜினாமாவதந்தஸ்டாலின்திமுகஅன்பழகன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author