Last Updated : 10 Jan, 2015 08:52 PM

 

Published : 10 Jan 2015 08:52 PM
Last Updated : 10 Jan 2015 08:52 PM

இந்திய அணிக்கு முற்றிலும் புதிய பந்துவீச்சாளர்கள் தேவை: சுனில் கவாஸ்கர்

பார்டர்-கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் இழந்த இந்திய அணிக்கு முற்றிலும் புதிய பந்துவீச்சாளர்கள் தேவை என்று சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

என்.டி.டி.வி.-க்கு கவாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

2-வது டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியா அணி இந்திய பந்து வீச்சை ஒன்றுமில்லாமல் அடித்துள்ளது. 2011-12-இல் பவுலர்கள் எப்படி செயல்பட்டனரோ அப்படித்தான் இந்தத் தொடரிலும் செயல்பட்டனர். 20 விக்கெட்டுகளை வீழ்த்த விருப்பம் இருப்பதாக அவர்களிடத்தில் நான் எதையும் காணவில்லை. எனவே தற்போதுள்ள பவுலிங் யூனிட்டை அணியில் வைத்திருப்பது கூடாது. உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்றலாம், ஆனால், அயல்நாடுகளில் கடந்த 3 ஆண்டுகளாக இந்த பவுலர்கள் எதனையும் குறிப்பாகச் சாதிக்கவில்லை.

ஆகவே பேட்டிங்கில் எப்படி புதிய வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்தோமோ அப்படி பந்துவீச்சிலும் புதிய வீச்சாளர்களை எடுப்பது பற்றியும் பரிசீலிக்க வேண்டும். கடந்த தொடரில் ராகுல் திராவிட், சேவாக், சச்சின் டெண்டுல்கர், லஷ்மண், இருந்தனர். ஆனாலும் அவர்களாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை (4-0 தோல்வி) இந்தத் தொடரில் கோலியத் தவிர மற்ற பேட்ஸ்மென்கள் ஆஸ்திரேலிய மண்ணுக்கு புதியவர்களே. இவர்கள் பரிமளிக்கும் போது புதிய வீச்சாளர்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்வது அவசியம்.

பிட்ச்கள் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருந்தது என்றாலும் இந்தியப் பந்துவீச்சில் ஊடுருவும் தன்மை இல்லை, 20 விக்கெட்டுகளை வீழ்த்த விரும்புபவர்கள் போல் தெரியவில்லை.

ஆனால் பேட்டிங்கில் இந்த அணி இன்னும் வரும் காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும் உச்சத்தை அடையும் என்று கூறுவேன். கோலியின் பேட்டிங் இந்தத் தொடரில் அசாதாரணமானது. அயல்நாட்டு தொடர்களில் 4 டெஸ்ட் போட்டிகளில் 700 ரன்களை எடுப்பதெல்லாம் சாதாரணமானதல்ல. ஒவ்வொரு முறை கோலி களமிறங்கும்போதும் அவர் சதமெடுப்பார் என்று நினைக்க வைத்தது. முதல் பந்திலிருந்தே தன்னம்பிக்கையுடன் அவர் விளையாடுகிறார்.

கேப்டன்சியை பொறுத்தவரையில் அடிலெய்ட் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டார். அடிலெய்டில் விருத்திமான் சாஹா விக்கெட் விழுந்த பிறகு டிராவுக்கு ஆடியிருக்க வேண்டும், ஆனால் வெற்றிபெறப் போய் தோல்வியில் முடிந்தோம். வெற்றியை நோக்கி ஆடவேண்டும், முடியவில்லையேல் ஆட்டத்தை தோல்வியிலிருந்து காக்க வேண்டும், இதனை சிட்னியில் செய்தனர். அந்த வகையில் கோலி பாடம் கற்றுக் கொண்டார்.

அடிலெய்டில் வெற்றிக்காக போராடி தோற்றோம் என்று மிகை உணர்ச்சிக்காரர்கள் கூறலாம். ஆனால் தோல்வி தோல்விதான். இதே போன்ற ஒரு அணுகுமுறையைக் கையாண்டிருந்தால் சிட்னி டெஸ்டிற்கு வரும்போது 1-0 என்ற நிலையில் வந்திருப்போம், அப்படி வந்திருந்தால் இன்று வெற்றிக்காகக் கூட ஆடி முயற்சி செய்து வெற்றியும் பெற்றால் தொடர் சமன் ஆகியிருக்கும்.”

இவ்வாறு கூறினார் சுனில் கவாஸ்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x