Published : 28 Jan 2015 09:44 AM
Last Updated : 28 Jan 2015 09:44 AM

48 நாட்கள் நலவாழ்வு முகாம் நிறைவு: பிரியா விடைபெற்ற கோயில் யானைகள்

தமிழக அரசு சார்பில் 48 நாட்களாக நடந்து வந்த கோயில் யானைகள் நலவாழ்வு முகாம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. உணவு, மற்றும் இந்து சமய அறநிலையத் துறை (கூடுதல் பொறுப்பு) அமைச்சர் காமராஜ் பங்கேற்று, முகாமை நிறைவு செய்து யானைகளை கோயில்களுக்கு அனுப்பி வைத்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வனப் பகுதியில் பவானி ஆற்றின் கரையோரம் தமிழகம் முழுவதும் உள்ள கோயில் யானைகளுக்கான முகாம் கடந்த 48 நாட்களாக நடந்துவந்தது. இந்த முகாமில் 30 யானைகள் பங்கேற்றன. இவற்றுக்கு ஓய்வும், சத்துணவும், ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டன. இந்த முகாம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.

முகாமில் அமைக்கப்பட்டிருந்த சிறிய விநாயகர் கோயில் முன்பு 30 யானைகளும் வரிசையாக நிறுத்தப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. அனைத்து யானைகளுக்கும் மாலை அணிவிக்கப்பட்டு, பல்வேறு வகையான பழங்கள் மற்றும் கரும்புகள் வழங்கப்பட்டன. பின்னர், மூன்று மூன்று யானைகளாக நிறுத்தப்பட்டு வெளியே அழைத்துச் செல்லப்பட்டு மூன்று லாரிகளில் ஏற்றப்பட்டன. இப்படியே மூன்று லாரிகள் புறப்பட்டுச் சென்ற பிறகு, அடுத்தடுத்து வந்த மூன்று லாரிகளில் மூன்று யானைகள்வீதம் ஏற்றிச் செல்லப்பட்டன. லாரிகளைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு, செல்லும் வழியில் யானைகளுக்கு கொடுப்பதற்கான உணவு மற்றும் மருந்து வகைகள் வைக்கப்பட்டிருந்தன.

நிறைவு விழாவில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், மாநிலங்களவை எம்.பி ஏ.கே.செல்வராஜ், எம்.எல்.ஏக்கள் ஓ.கே.சின்னராஜ் (மேட்டுப்பாளையம்), சேலஞ்சர் துரை (கோவை தெற்கு) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு சில யானைகள் லாரியில் ஏறும்போது முகாமில் தன்னுடன் பழகிய பிற யானைகளைப் பார்த்து துதிக்கையை தூக்கி பிளிறி பிரியா விடை பெற்றது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x