Published : 30 Jan 2015 09:04 AM
Last Updated : 30 Jan 2015 09:04 AM

மாற்றுத் திறனாளிகள் நலன்: மாநில ஒருங்கிணைப்புக் குழுவை ஒரு மாதத்தில் அமைக்கவேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான மாநில ஒருங்கிணைப்புக் குழுவை ஒரு மாதத்துக்குள் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் ஆர்.முகமது நஸ்ருல்லா கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு கடிதம் அனுப்பி யிருந்தார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:

மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பார்வையற்ற மாணவர்கள் போராட்டம் நடத்தி னர். அமைதியான முறையில் போராட்டம் நடத்திய அவர்களிடம் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்டனர். அவர்களின் இயலாமையைப் பயன்படுத்தி ஒருமுறை சென்னைக்கு வெளியே 80 கிலோ மீட்டர் தொலைவில் அவர்களை கொண்டுபோய் விட்டுள்ளனர். மற்றொரு நாள் இரவு நேரத்தில் சுடுகாடு அருகே விட்டுச் சென்றுள்ளனர். இப்பிரச்சினையில் உயர்நீதிமன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும். பார்வையற்ற மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்த நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த கடிதத்தை உயர்நீதிமன்றம் பொதுநல மனுவாக எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சென்னை பெருநகர காவல் ஆணையர் சார்பில், கிழக்கு மண்டல இணை ஆணையர் ஆர்.தினகரன், பதில் மனு தாக்கல் செய்தார். அதில், மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த வழக்கு தொடர்பாக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ள வழிமுறைகள் முழுவதும் அப்படியே நடைமுறைப்படுத்தப்படுமா, சென்னையைத் தவிர்த்து தமிழகத்தின் இதர பகுதிகளுக்கும் இது பொருந்துமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகள் சட்டம் 1955-ன் படி மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைப்பதற்காக எந்தக் குழுவும் அமைக்கப்படவில்லை. அதனால், அவர்களது நலனுக்காக மாநில ஒருங்கிணைப்புக் குழுவை ஒரு மாதத்துக்குள் அரசு அமைக்க வேண்டும். இவ்வழக்கில் வேறு உத்தரவுகள் பிறப்பிக்க தேவையில்லை என்பதால் வழக்கு முடித்து வைக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x