Published : 18 Jan 2015 04:48 PM
Last Updated : 18 Jan 2015 04:48 PM

இந்தியாவை தடுமாறி வீழ்த்தியது ஆஸ்திரேலியா

முத்தரப்பு ஒருநாள் தொடரின் 2-வது போட்டியில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. வெற்றி இலக்கான 268 ரன்களை அந்த அணி 49 ஓவர்களில் சற்று தடுமாறியே எட்டியது.

துவக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர் - ஃபின்ச் ஜோடி சிறப்பான துவக்கத்தைத் தந்தனர். 9-வது ஓவரிலேயே ஆஸி. 50 ரன்களை எட்டியது. ஆனால் 10-வது ஓவரில் வார்னர் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வாட்சனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வேகமாக ரன் குவித்து வந்த வாட்சன் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த ஃபின்ச் 80 பந்துகளில் அரை சதம் எட்டினார்.

தொடர்ந்து ஆடிய ஸ்மித் - ஃபின்ச் ஜோடி பார்ட்னர்ஷிப்பில் 101 ரன்களைக் குவித்தது. ஆஸி. அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்து கொண்டே வந்தது. 40-வது ஓவரில் ஷமியின் பந்தில் ஸ்மித் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ஃபின்ச் 96 ரன்களுக்கு உமேஷ் யாதவ்வின் வேகத்தில் வீழ்ந்து சதத்தை தவறவிட்டார்.

அஸ்வினின் சுழலில,் வந்த வேகத்திலேயே 5 ரன்கள் மட்டுமே எடுத்து பெய்லி பெவிலியன் திரும்ப, ஆஸி. 230 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து களத்தில் இணைந்த ஹாட்டின், மேக்ஸ்வெல் ஜோடியே ஆஸி. வெற்றி வழிவகுக்க வேண்டும் என்ற நிலையில், மேக்ஸ்வெல் அஸ்வின் வீசிய ஓவரில் 11 ரன்கள் குவித்தார்.

36 பந்துகளில் 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் உமேஷ் யாதவ் வீசிய 45-வது ஓவரில் 1 ரன் மட்டுமே வந்தது. அடுத்த அக்சர் படேல் ஓவரில் 6 ரன்கள் வர புவனேஸ்வர் குமார் வீசிய 47-வது ஓவரில் முதல் 2 பந்துகளில் ரன் எடுக்க முடியாமல் போன மேக்ஸ்வெல், 3-வது பந்தில் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு அந்த ஓவரில் ரன் ஏதும் வராமல் போக 18 பந்துகளில் 20 ரன்கள் தேவை என்று நிலை மாறியது

அக்சர் படேல் வீசிய 48-வது ஓவரிலும் ஆஸி. வீரர்கள் ரன் சேர்க்க திணறினர். மேலும் 5 ரன்கள் மட்டுமே வர 2 ஓவர்களில் 15 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. 6 பந்துகளை சந்தித்தும் ரன் ஏதும் எடுக்காமல் இருந்த ஃபால்க்னர், 49-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். முக்கியமான 4 ரன்களை ஃபால்க்னர் சேர்க்க, அடுத்த இரண்டு பந்துகளில் ஹாட்டின் ஒரு பவுண்டரி எடுத்தார். 8 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட, ஆஸ்திரேலியா வெற்றிக்கு அருகில் சென்றது.

49-வது ஓவரின் கடைசி பந்தில் ஃபால்க்னர், பந்தை மீண்டும் பவுண்டரிக்கு விரட்ட, ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கைக் தாண்டியது. இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸி. எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்ற நிலையில் இருந்து, கடைசி ஓவர்களில் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு உருவானது. ஆனால் இந்திய அணியால் அதை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போனது. கடைசி ஓவர்களில் இருந்த சிறப்பான பந்துவீச்சு ஆரம்பத்திலேயே இருந்திருந்தால் கண்டிப்பாக இந்தியா இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கலாம் என்பது கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்து.

இந்த முத்தரப்புத் தொடரின் அடுத்த ஆட்டத்தில் இந்திய இங்கிலாந்தை ஜனவரி 20-ஆம் தேதி சந்திக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x