Published : 04 Jan 2015 14:47 pm

Updated : 04 Jan 2015 14:47 pm

 

Published : 04 Jan 2015 02:47 PM
Last Updated : 04 Jan 2015 02:47 PM

அழிவின் விளிம்பில் 33% மண் வளம்: 2015-ஐ மண் வள ஆண்டாக ஐ.நா. அறிவிப்பு

33-2015

மண் வள அழிவை தடுத்தால் மட்டுமே, 2050-ம் ஆண்டு 69 சதவீதம் கூடுதலாக உணவு உற்பத்தி செய்ய முடியும். இதனால் நடப்பாண்டை மண்வள ஆண்டாக ஐக்கிய நாட்டு சபை அறிவித்துள்ளது.

அனைத்தையும் மக்க வைக்கும் மண், விதையை மட்டும் உயிர்ப்பிக்க வைத்து உலகை காக்கிறது. மண்ணுக்கு மரணம் ஏற்பட்டால், அதில் வாழும் உயிர்களுக்கும் உத்தரவாதம் இல்லை.


உலகில் வாழ்ந்து வரும் 7 பில்லியன் (700 கோடி) மக்கள் தொகை, வரும் 2050-ம் ஆண்டு 9.6 பில்லியனாக (960 கோடி) அதிகரிக்கும். தற்போது, 850 மில்லியன் (85 கோடி) மக்கள் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் வாடுகின்றனர். 2050-ம் ஆண்டு மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப உணவு உற்பத்தியை 69 சதவீதம் கூடுதலாக அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

உலகில் 33 சதவீத மண்வளம் அழியும் தருவாயில் உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே 2015-ம் ஆண்டை உலக மண் வள ஆண்டாக ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை கழக இயக்குநர் ஜோஸ் சிரேசியானோ டாசில்வா அறிவித்துள்ளார்.

ஒரு செ.மீ. மண் உருவாக ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும் நிலையில், வரும் 2050-ம் ஆண்டு 69 சதவீWதம் கூடுதலாக உணவு உற்பத்தியைப் பெருக்க, மண் மேலாண்மை அவசியம். இந்தியாவில் வண்டல் மண், கருப்பு மண், செம்மண், சரளை மண், பாலை மண், உவர்ப்பு மண், மக்கிய மண், வன மண் என 8 வகை மண் வளங்கள் உள்ளன. இதில், பாஸ்பரஸ், ஆர்சனிக், என்டோசல்ஃபான், காரியம், கேட்னியம், அலுமினியம், குரோமியம் உள்ளிட்ட உலோக கலப்புகள் மண்ணை விரைவில் மரணமடைய வைக்கும்.

எனவே, மண் வளத்தை காத்திட உலக நாடுகள் கைகோர்த்துள்ள இந்த நேரத்தில் அரசுடன் சேர்ந்து மக்களும் மண்ணுக்கு தீமை விளைவிக்கும் பல்வேறு தொழிற்சாலை கழிவுகள், கனிம சுரங்கங்களிலிருந்து வெளியேறும் உலக நச்சுக் கழிவுகள், விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, ரசாயன உரங்கள், நகரக்

கழிவுகள், மழை பெய்தால் நீர் உட்புகுவதைத் தடுக்கும் பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

மண் வளத்தை காக்க ஆராய்ச்சி

இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழக சுற்றுசூழல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் பி.தங்கவேல் கூறியது: இந்திய அறிவியல் கழகம், மண்வள மேம்பாட்டை காத்திட “விஷன் இந்தியா 2050” என்ற திட்டத்தின் மூலம் உணவு ஊட்டச்சத்து மேம்பாடு, கழிவு மறுசுழற்சி மூலம் சத்தான பாதுகாக்கப்பட்ட மண் வளம், நீடித்த வேளாண்மைக்கு மண் வளத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட ஆறு இலக்குகளை முன் வைத்து செயலாற்றி வருகிறது.

பெரியார் பல்கலைக்கழக சுற்றுச் சூழல் அறிவியல் துறை மற்றும் நுண்ணுயிரியல் துறை மூலம் மண் வள மேம்பாடு தொடர்பான ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதில் தாவரங்களில் இருந்து மண்ணில் கலந்துள்ள உலோக கலப்புக்கு தீர்வு காண்பது குறித்தும், நுண்ணுயிரிகள் மூலம் மண் வளத்தை மேம்படுத்தல் சம்பந்தமான ஆரம்பக்கட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

கண்டுபிடிக்க முடியாத 99% மண் வாழ் நுண்ணுயிரிகள்

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுவாமிநாதன் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள மண் வகையில் மட்டும் 82 சதவீதம் துத்தநாக பற்றாக்குறை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சேலம், அரியலூர், நீலகிரி தவிர்த்து 96 சதவீதம் மண்ணில் நைட்ரஜன் பற்றாக்குறை உள்ளது. பல்லுயிர் பன்மயத்தில் 17 உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

மண் வளத்தை பேணிட பாதுகாப்பான உழவு முறை, பரந்த படுக்கை பாத்தி முறை, உயிரியில் சார்ந்த வேளாண்மை முறை, இயற்கை உரம், பஞ்சகாவ்ய, பசும்பால் உரம், மண் புழு உரம், வேர் பூஞ்சான் உயிர் உரங்கள் மண்ணில் வாழும் நுண்ணியிரிகளுக்கு உகந்தது. அரசுடன் சேர்ந்து உலக மக்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயத்தில் இயற்கையைப் பேணி காக்க வேண்டும் என்றார்.

மண் வளம்விவசாயம்வேளாண்மை

You May Like

More From This Category

More From this Author