Last Updated : 30 Jan, 2015 03:07 PM

 

Published : 30 Jan 2015 03:07 PM
Last Updated : 30 Jan 2015 03:07 PM

பிரம்மாண்டம் ‘ஐ’யா

இயக்குநர் மங்கரின் கை படத்தை ரொம்ப எதிர்பார்த்திருந்தான் வெகுளி வெள்ளைச்சாமி. வெள்ளைக்கு மங்கரோட எல்லாப் படமும் ரொம்பப் பிடிக்கும். வெள்ளை காலேஜில் படிச்சபோது அவரோட முதல் படம் மெண்டல்மேன் வந்துச்சு. அப்பவே அது ரொம்ப பிரம்மாண்டமான தயாரிப்புன்னு சொன்னாங்க.

அந்தப் படத்துல ஒரு குள்ள மனிதர் கதாபாத்திரம் இருந்துச்சு. அதுக்குக்கூட ஆறு அடி குள்ளரத்தான் போடணும்னு மங்கர் பிடிவாதம் பிடிச்சாராம். அந்த அளவுக்கு பிரம்மாண்டத்தின் மீது விருப்பம் கொண்டவர் அவர். ஏனெனில் ஏழை பிச்சைக்காரர் கூட ஜாகுவார் காரில் போய்ப் பிச்சை எடுத்தால்தான் அது ரிச்சா இருக்கும், ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள்னு மங்கர் ஃபீல் பண்ணுவாராம்.

மெண்டல்மேன் படத்துல கிளைமாக்ஸ் பாடல் ஒரு மலை மேல நடக்குற மாதிரி இருந்துச்சு. ஆல்ப்ஸ் மலையில தொடங்கி இமயமலை, கழுகுமலைன்னு எல்லா மலைகளையும் பார்த்தாங்க. ஆனா மங்கருக்கு எதுலயும் திருப்தி இல்ல. கடைசியா ஒரு மலையையே செட் போட்டாங்க. ‘மலை மலை மங்காத்தா போல மலை… சிலை சிலை எங்காத்தா போலச் சிலை…’ ங்கிற பாட்ட அங்கதான் எடுத்தாங்க.

மெண்டல்மேன் படத்துல இட ஒதுக்கீட மங்கர் கிண்டல் அடிச்சிருப்பாரு. நல்லா படிக்குற உயர் வகுப்பு பையன் ஒருத்தன் இட ஒதுக்கீடு இல்லாததால் டாக்டராக முடியாது. அந்த வருத்தத்துல அவனுக்குப் பைத்தியம் பிடிச்சிரும். அவனோட நண்பனுக்கு இட ஒதுக்கீட்டுல டாக்டர் சீட்டு கிடைக்கும், ஆனா அவன் நண்பனுக்காக டாக்டர் படிப்ப தியாகம் பண்ணிட்டுக் கொள்ளை அடிக்க ஆரம்பிச்சிருவான்.

கொள்ளை அடிச்ச பணத்துல காலேஜ் கட்டி இட ஒதுக்கீடு கிடைக்காதவங்க அங்க டாக்டர் படிப்பு படிக்க வழி செய்வான். அந்தப் படம் பார்த்தபோது வெள்ளைக்கு இட ஒதுக்கீடு எவ்வளவு மோசமானதுன்னு புரிஞ்சுது. இந்த மாதிரி நல்ல கருத்துகள மங்கர் சொன்னாலும், அதுலயும் பாடல் காட்சிகளில் வணிகத்துக்காகக் குட்டைப் பாவாடையுடன் ஹீரோயின குளு குளுன்னு காட்டுவார். அதனால படம் பார்க்குறவங்களுக்குச் சந்தோஷமா இருக்கும், நல்ல கருத்தும் போய்ச்சேரும்னு அவருக்கு நம்பிக்கை.

மங்கரோட புதல்வன் படத்துல அரசியல விட்டுக் கிழி கிழின்னு கிழிச்சிருப்பார். அதுல தந்திர கேடிங்கிற பிரதமர செம போடு போடு போட்டிருப்பார். கலர் கலரா ஜிகு ஜிகுன்னு ஆடைகளை மாத்திகிட்டு தந்திர கேடி ஆடிப்பாடும் பாடல் காட்சிகளை மொத்தம் 16 நாட்டுல ஷூட் பண்ணினாராம் மங்கர். தந்திர கேடி சாதாரண பால் வியாபாரி. பாலில் போதைப் பொருளக் கலந்து அதை அரசியல்வாதிகளுக்குக் கொடுப்பான்.

அந்தப் போதைக்கு அடிமையான அரசியல்வாதிகள் உதவியால கொஞ்சம் கொஞ்சமா பெரிய ஆளாகி கடைசியில் நாட்டோட பிரதமராவே ஆயிருவார். அவரோட மொள்ளமாரித்தனத்தைத் தோலுரிச்சிருப்பார் மங்கர். கடைசிக் காட்சியை வெள்ளை மாளிகையில் ஷூட் பண்ணினாங்க. பேரிக்கா அதிபரோட தந்திர கேடி பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு இருக்கும்போது ஹீரோ அங்க போய் தந்திர கேடியை ஒரு கேள்வி கேட்பார்.

அப்போ கோபப்படும் தந்திரகேடி பிரதமராவுறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா, ஒரு நாள் பிரதமரா இருந்து பாரு அப்ப தெரியும்னு சொல்லுவான். உடனே ஹீரோ நான் தயார்னு சொல்லி, அடுத்த காட்சியில பிரதமராயிருவான். தந்திர கேடியைவிட தந்திரமா ஹீரோ பிரதமராகுற காட்சியில தியேட்டர்ல அப்ளாஸ் சும்மா பின்னுச்சு. வெள்ளை தன்னோட வேட்டியை அவுத்து ஆட்டம் போட்டான். அந்த ஒரு நாளில் ஹீரோ தன்னோட புத்திசாலித் தனமான நடவடிக்கையால தந்திர கேடியை மீண்டும் பால் கேனைத் தூக்க வச்சுருவான். வெள்ளை அந்தப் படத்த 40 தடவை பார்த்தான்.

மங்கரோட பன்னியன் படத்துல சின்ன சின்ன தவறாலே எவ்வளவு பெரிய இழப்பு வருதுங்கித புரிய வச்சிருப்பாரு. அந்தப் படத்துல நடிச்ச வாங்ரம் வெறும் சில்லரை மட்டும் போதும்னு சொல்லிட்டாராம். அதனால அவரோட சம்பளப் பணத்தை சில்லரையாவே கொடுத்திருக்காங்க. ஒரு கோடீஸ்வரன் விக்கிக்கிட்டு சாவக் கிடக்கும்போது அந்த வழியா ஒரு தண்ணி பாக்கெட் வியாபாரி போவான்.

அவன்ட்ட அந்த கோடீஸ்வரர் ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு வாட்டர் பாக்கெட் கேப்பான். ஆனா ஒரு ரூபா வாட்டர் பாக்கெட் போக 999 ரூபாய் கொடுக்க சில்லரை இல்லன்னு சொல்லிட்டு வியாபாரி போயிருவான். இதனால அந்தக் கோடீஸ்வரன் இறந்துபோயிருவான்.

அவனோட பையனான ஹீரோ பழிக்குப் பழி வாங்குவான். கிளைமாக்ஸ்ல தண்ணி பாக்கெட் வித்தவன் மேல ஆயிரக்கணக்கான பன்னிகளை ஓட விட்டு கொல்வான் ஹீரோ. அந்தப் படத்துல நடிப்பதற்காகப் பன்றிகளுடன் பதினோரு நாள் இருந்து அதுகளோட லைப்ஸ்டைல க்ளோஸா வாட்ச் பண்ணினார் நடிகர் வாங்ரம்.

அப்படிப்பட்ட அர்ப்பணிப்பு உள்ள வாங்ரமும் மங்கரும் மீண்டும் இணைஞ்சிருந்த படம் கை. அதனால அத எப்படியும் மொத நாளிலேயே பார்த்திரணுங்கிறது வெள்ளையோட ஆசை. அதுவும் பிரம்மாண்ட இயக்குநர் மங்கர் மட்டும் பத்தாதுங்கிறதால அவர மாதிரியே ஒரு மங்கர க்ளோனிங் செஞ்சு வச்சிருக்காராம். இந்தப் படத்த ரெண்டு மங்கரும் சேர்ந்து இயக்கிருக்காங்களாம்னு நியூஸ் படிச்சதிலயிருந்து வெள்ள தலைகால தெரியாம ஆடுறான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x