Last Updated : 03 Jan, 2015 10:58 AM

 

Published : 03 Jan 2015 10:58 AM
Last Updated : 03 Jan 2015 10:58 AM

சிலிர்த்து நிற்கும் சிங்கப்பூர் - 3

சிங்கப்பூரைத் தன் வசம் கொண்டிருந்த பிரிட்டன் ஜப்பானிடம் சரணடைந்தது. ‘தாக்குதலை நிறுத்த வேண்டுமா? அப்படியானால் இதோ என் நிபந்தனைகள்’ என்று பட்டியல் போட்டது ஜப்பான். அதில் முக்கியமானது இது.

சிங்கப்பூரிலுள்ள தனது அத்தனை ராணுவத்தினரையும் ராணுவத் தளவாடங்களையும் பிரிட்டன் தங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். கப்பல்கள், விமானங்கள், ரகசிய ஆவணங்கள் எல்லாமே இவற்றில் அடக்கம். வேறு வழியின்றி பிரிட்டன் ஒத்துக் கொண்டது.

ஜப்பானியர்கள் ஆக்கிரமித்தவு டன் சிங்கப்பூர் பெயர் மாற்றம் பெற்றது. புதிய பெயர் ஷோநான்டோ. சிங்கப்பூரை ‘யோனன்’ என்று செல்லமாகவும் ஜப்பானியர்கள் அழைத்தார்கள். தெற்கின் ஜோதி என்று இதற்குப் பெயர். சிங்கப் பூரின் மகத்துவத்தை ஜப்பானி யர்கள் உணர்ந்தனர். ஆனால் அவர்கள் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகத்தான் இருந்தது. சிங்கப்பூரில் வசித்த ஆயிரக்கணக்கான சீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பிரிட்டனுக்கும் ஜப்பானுக்கும் 1945-ல் மீண்டும் ஒரு போர். இநத முறை ஜப்பான் சரணடைந்தது. பிரிட்டிஷ் ராணுவம் அந்த ஆண்டு செப்டம்பர் 5 அன்று சிங்கப்பூரில் நுழைந்தது.

அதற்குப் பிறகு சுதந்திரத்தை நோக்கி சிங்கப்பூர் முன்னேறியது!

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பிரிட்டனின் பலம் குறைந்து விட்டதாக சிங்கப்பூர்வாசிகள் கருதினார்கள். எனவே சுயாட்சி வேண்டுமென்று வலுத்துக் குரல் கொடுக்கத் தொடங்கினர். சுயாட்சி (சுதந்திரம் அல்ல) கிடைத்தது. 1946-ல் மலேயா பகுதியிலிருந்து சிங்கப்பூர் பிரிக்கப்பட்டு பிரிட்டனால் ஆட்சி செய்யப்பட்டது.

(இந்த இடத்தில் மலேயா, மலேசியா ஆகியவற்றுக்கிடையே உள்ள வித்தியாசத்தைச் சற்று தெளிவுபடுத்திக் கொள்வோம். 1963 செப்டம்பர் 16 வரை பிரிட்டன்வசம் இருந்த மலாய் தீபகற்பம் மலேயா என்று அழைக்கப்பட்டது. 1963-ல் பிரிட்டனின் பிடியிலிருந்து விடுபட்டதும் அது மலேசியா என்று பெயர் சூட்டிக் கொண்டது. அப்போது சிங்கப்பூரும் அதன் ஒரு பகுதி).

1954-ல் சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சி (People’s Action Party) உருவானது. அன்றிலிருந்து இன்றுவரை சிங்கப்பூர் அரசியலில் அது ஒரு தவிர்க்க முடியாத சக்தி. 1955-ல் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவானது. தொடர்ந்து இரு வருடங்களில் நடைபெற்ற தேர்தலில் 51 தொகுதிகளில் 43-ல் மக்கள் செயல் கட்சி வென்றது. இதை வழி நடத்திய லீ குவான் யூ அந்த நாட்டின் தலைவரானார்.

1963 செப்டம்பர் 16 அன்று பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட் டவுடன் மலேசியாவுடன் மீண்டும் சேர்ந்து கொண்டது சிங்கப்பூர். அப்போது மலேயா, சபா, சரவக், சிங்கப்பூர் ஆகிய நான்கும் இணைந்து மலேசியா என்ற பொதுப் பெயரில் புதிய எல்லைகள் கொண்ட நாடாக உருவானது. ஆனால் அந்த இணைப்பு குறைந்த ஆயுள் கொண்டதாக இருந்தது. மீண்டும் தனி நாடாக வேண்டிய கட்டாயம் சிங்கப்பூருக்கு ஏற்பட்டது.

ஒரு நாடு சுதந்திரம் பெற்றது என்றால் அங்கு அதற்குமுன் என்ன நடந்திருக்கும்? அடக்குமுறை, அதைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வலிமை பெற்று வந்த சுதந்திர இயக்கங்கள், தனக்குக் கீழ்தான் இருக்க வேண்டுமென்று ஆட்சியில் உள்ளவர்களின் அதிகாரம், சுதந்திரமெல்லாம் கொடுக்கமாட்டேன் ஆனதைப் பார்த்துக் கொள் என்ற ஆட்சியாளர்களின் திமிர், பிறகு வேறுவழியில்லாமல் ஒரு கட்டத்தில் வேண்டாவெறுப்பாக சுதந்திரம் அளித்தல் - இவைதானே நமக்குத் தெரிந்த செயல்முறை? ஆனால் மலேசியா - சிங்கப்பூர் விஷயத்தில் நடந்ததே வேறு.

‘‘நீ தனியாகப் போ’’ என்று மலேசியா குரல் கொடுக்க, ‘‘ஐயோ எங்களை உங்களோடு இருக்க விடுங்கள்’’என்று சிங்கப்பூர் கெஞ்ச, நடந்தது பிரிவினை அல்ல. வெளியேற்றம்.

பின்னணி இதுதான். சிங்கப்பூர் இணைந்தபிறகு மலேசியா அதைக் கொஞ்சம் ஓரவஞ்சனையாகவே நடத்தியது. இணைப்பு காரணமாக பல இன மக்கள் வசித்த நாடாக மலேசியா மாறியது. ஆனால் மலாய் இன மக்களுக்கு பலவற்றிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. சிங்கப்பூரில் அதிகமாக வசித்த சீனர்கள் தாங்களும் பிறரோடு சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கொடிபிடித்தனர்.

தவிர சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குச் செல்லும் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டது. இதை சிங்கப்பூர் எதிர்க்கத் தொடங்கியது.

1964-ல் இனக் கலவரங்கள் நடைபெற்றன. முகமது நபிகளின் பிறந்த நாளன்று சிங்கப்பூரிலுள்ள பதாங் என்ற பகுதியிலிருந்து கோலாங் என்ற பகுதியை நோக்கி ஓர் ஊர்வலம் சென்று கொண்டு இருந்தது. அதிலிருந்து ஒரு குழு தனியாகப் பிரிந்து செல்ல, காவல் துறையினர் அவர்களை ஒழுங்குபடுத்த முயற்சித்தனர். இதற்கு ஒத்துழைக்காததோடு, பிரிந்து சென்றவர்கள் காவல் துறை யினரைத் தாக்கவும் செய்தார்கள். இந்தத் தாக்குதலில், சாலையில் நடந்து கொண்டு இருந்த சீன இனத்தவர் மீதும் அடிகள் விழ, வெடித்தது கலவரம். சட்டம், ஒழுங்குப் பிரச்னை இன, மதக் கலவரமாகப் பரிணாமம் பெற்றது.

அவசர அவசரமாக நல்லெண்ணக் குழுக்கள் உருவாக் கப்பட்டன. பலனில்லை. மூன்றே மாதங்களில் மீண்டும் கலவரம். பின்னணியில் தூண்டிவிடும் சக்திகள் இந்தோனேஷியாவும், கம்யூனிஸ்ட்களும்தான் என்று கருதினார் மலேசிய துணைப் பிரதமர் டுன் அப்துல் ரஸாக். தவிர, ஏற்கனவே ஆட்சியாளர்களிடையே வேறு சில சந்தேக விதைகளும் முளைவிட்டிருந்தன.

(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x