Published : 08 Jan 2015 01:08 PM
Last Updated : 08 Jan 2015 01:08 PM

தகவல் கேட்ட ஆர்.டி.ஐ. ஆர்வலரை சிறையில் அடைத்த ஆணையர் மீது நடவடிக்கை தேவை: ராமதாஸ்

அரசின் செலவுகள் குறித்து தகவல் கேட்டவரை சிறையில் அடைத்த தகவல் ஆணையர் ஸ்ரீபதி மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி அரசின் செலவுகள் குறித்த விவரங்களை கேட்டதற்காக சட்டப் பஞ்சாயத்து என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவர் சிவ. இளங்கோ என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஜனநாயகத்துக்கு எதிரான இச்செயல் கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசின் விளம்பரங்களுக்காக செய்யப்பட்ட செலவுகள் குறித்த விவரங்களைத் தருமாறு சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ. இளங்கோ விண்ணப்பித்து பல மாதங்களாகியும் அது வழங்கப்படவில்லை. இதுகுறித்த மனுவின் விசாரணைக்காக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தகவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு நடந்த விசாரணையின் போது இருக்கையில் அவர் அமர்ந்ததால் ஆத்திரமடைந்த தலைமைத் தகவல் ஆணையர் ஸ்ரீபதி, தம்மை பணி செய்யவிடாமல் தடுத்ததாக காவல்துறையிடம் பொய் புகார் அளித்து கைது செய்ய வைத்திருக்கிறார். காவல்துறையும் நடந்த உண்மை என்ன? என்பதை விசாரிக்காமலேயே சிவ. இளங்கோவை கைது செய்திருக்கிறது.

தகவல் ஆணையம் என்பது குற்றவியல் நீதிமன்றம் அல்ல; அங்கு விசாரணைக்காக சென்ற சிவ. இளங்கோ குற்றவாளியும் அல்ல. மக்களின் வரிப்பணம் வீணாக செலவிடப்பட்டதா? என்பதை அறிய வேண்டும் என்ற பொதுநல நோக்குடன் சென்ற அவரை குற்றம் இழைத்தவரைப் போல நிற்கவைத்து விசாரிக்க தகவல் ஆணையர் முயன்றது அவரது ஆதிக்க மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறது.

இப்போக்கு அனுமதிக்கப்படும் பட்சத்தில், அரசு அலுவலகங்களுக்கு பொதுநல நோக்குடன் செல்லும் யாரையும் அங்குள்ள அதிகாரி நினைத்தால் கைது செய்ய வைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிடும்.

தமிழ்நாடு தகவல் ஆணையம் தான் இந்தியாவிலேயே மிக மோசமாக செயல்படும் ஆணையமாகும். தகவல் பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை ஒருமுறை கூட ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

முந்தைய ஆட்சியில் தலைமைச் செயலராக இருந்த போது ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக செயல்பட்டதற்கான பரிசாக இந்த பதவியை பெற்ற ஸ்ரீபதி, அ.தி.மு.க. அரசுக்கு எதிரான தகவல்கள் வெளியில் செல்லாமல் தடுப்பதன் மூலம் இப்போதைய ஆட்சியாளர்களின் கரிசனப் பார்வையை துடிக்கிறார்.

இது தற்போதைய ஆட்சியாளர்களின் ஊழல்களை மூடி மறைக்க துணை போகும் செயல். இதை அனுமதிக்கக் கூடாது.

எனவே, பொய்யான குற்றச்சாற்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள சிவ. இளங்கோவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் நோக்குடன் செயல்படும் தகவல் ஆணையர் ஸ்ரீபதி மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x