Published : 29 Jan 2015 10:41 am

Updated : 29 Jan 2015 10:41 am

 

Published : 29 Jan 2015 10:41 AM
Last Updated : 29 Jan 2015 10:41 AM

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் 11

11

1981ல் பிரான்ஸின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஃபிரான்சுவா மிட்டர்ரன்ட். தொடர்ந்து பதினான்கு வருடங்கள் (அதாவது 1995 வரை) இந்தப் பதவியை வகித்தார். பிரான்ஸ் சரித்திரத்தில் இவ்வளவு காலம் தொடர்ந்து அதிபராக இருந்தவர் இவர்தான்.

இரண்டாம் உலகப்போரின் போது ராணுவத்தில் பணியாற்றி யவர். தொடக்கத்தில் டி காலேவின் தாற்காலிக அரசில் இடம் பெற்ற பின் ஒரு காலகட்டத்தில் அவருக்கு நேர் எதிர் நிலையை எடுத்தார் மிட்டர்ரன்ட். 1965ல் அதிபர் தேர்தலில் டி காலோவுக்கு எதிராகப் போட்டியிட்டார், தோற்றார்.

மிட்டர்ரன்டின் ஓய்வுக் காலத் தில் அவர் குறித்த பல விஷயங்கள் வெளியாகி அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தின. நாஜிக்களின் ஆதரவோடு பிரான்ஸில் நடைபெற்ற பொம்மை ஆட்சியாளர்களோடு இவர் கொண்டிருந்த தொடர் நட்பு வெளியானது. ஊழல் சங்கதிகளும் அடிபட்டன. திருமண வட்டத்துக்கு வெளியே இவர் சில பெண்களுடன் கொண் டிருந்த தொடர்பு வெளியானது.

1991ல் இவர் எடித் கிரேஸ்ஸன் என்பவரை பிரதமராக்கினார். 1996-ல் மிட்டர்ரன்ட் இறந்தார்.

எடித் கிரேஸ்ஸன் பிரான்ஸின் முதல் பெண் பிரதமர். முன்னாள் பிரதமர். இன்று அவர் ஐரோப்பிய யூனியனில் பொறுப்பு மிக்க அதிகாரி. அவர்மீது சமீபத்தில் கடுமையான சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. அவை நிரூபிக்கப்பட்டுவிட்டால் அவர் தன் பதவியை இழக்க வேண்டியதுதான். மேலும் வருடத்துக்கு 26,000 டாலர் என தீர்மானிக்கப்பட்டுள்ள ஓய்வூதியத்தையும் அவர் கைகழுவ வேண்டியதுதான். தவிர ஐந்து வருட சிறைத் தண்டனையையும் அனுபவிக்க நேரலாம். இதனால் பிரான்ஸ் சங்கடப்படுகிறது. இப்போதே அதற்கு தலைகுனிவு ஏற்பட்டுவிட்டது.

என்னதான் செய்துவிட்டாராம் எடித்? ஏமாற்று, போலிக் கையொப்பம், நம்பிக்கைச் சிதைவு என்று பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

1995-லிருந்து 1999-வரை ஐரோப்பிய யூனியனின் ஆராய்ச்சி மற்றும் கல்வி அதிகாரியாக விளங்கியபோது எடித் பல ஒப்பந்தங்களில் தில்லுமுல்லு செய்ததாகக் குற்றச்சாட்டுகள். தனிப்பட்ட ஆதாயத்துக்காக ஐரோப்பிய யூனியனின் நிதியைக் கையாடல் செய்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு. அவருடைய நண்பரான பல் டாக்டர் ஒருவரை ஐரோப்பிய யூனியனின் எய்ட்ஸ் பிரிவு ஆலோசகராக அவர் நியமித்ததும் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. அந்த டாக்டருக்கு எய்ட்ஸ் குறித்த எந்த ஆழ்ந்த அறிவும் இல்லையாம். தனது இரண்டு வருடப் பணிக்காக அந்தப் பல் டாக்டர் 85,000 டாலரை ஊதியமாகப் பெற்றுக் கொண்டு வெறும் 24 பக்க ஆராய்ச்சியை சமர்ப்பித்திருக்கிறார். அதில் உருப்படியாக எதுவும் இல்லை என்று கருத்து கூறியிருக்கிறார்கள் பிற மருத்துவர்கள்.

வழக்கு நடைபெறுகிறது. “பிரான்ஸை அவமானப்படுத்த சில ஐரோப்பிய நாடுகள் செய்யும் சதி” என்கிறார் எடித். இந்த நாடுகளில் ஜெர்மனியும் உண்டு என்பது வெளிப்படை. ஆனால் குற்றச்சாட்டுகளும், ஆதாரங்களும் வலிமையாகவே உள்ளன.

பிரான்ஸ் நாட்டின் அதிபராக ஜாக்கஸ் சிராக் இருந்தபோது செயல்படுத்தப்பட்ட ஒரு முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெர்லின் நகரில் குழுமிய 12,000 இளைஞர்கள் அங்குள்ள பிரான்ஸ் தூதரகத்தின்மீது அழுகிய முட்டைகளை வீசி தங்கள் மனக்கொதிப்பை வெளிப் படுத்தினார்கள். சிட்னியில் பிரெஞ் சுக் கொடி எரிக்கப்பட்டது. சிலி நாட்டில் ஆயிரக்கணக்கானவர்கள் மனிதச் சங்கிலியாக உருவாகி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினார்கள். நியூசிலாந்தும், சிலியும் தங்கள் தூதர்களை பிரான்ஸிலிருந்து வாபஸ் பெற்றன.

காரணம் பிரான்ஸ் நடத்திய அணு ஆயுதச் சோதனை.

மூன்று முக்கியக் காரணங்களுக்காகத்தான் பிரான்ஸ் இந்த அணு ஆயுத சோதனைகளை நடத்தியது. தங்களது புதிதான போர்க் (நீர்மூழ்கிக்) கப்பலின் திறமையை உறுதி செய்து கொள்வது, தங்களது பழைய அணு ஆயுதங்களின் தற்போதைய செயல்திறனை அறிவது, கம்ப்யூட்டர் உத்திகளை எந்த அளவு போர் ஆயுதங்களில் பயன்படுத்த முடியும் என்பதற்கான நேரடிப் புள்ளிவிவரங்களை அறிந்து கொள்வது ஆகிய மூன்றும்தான் அந்தக் காரணங்கள். அதே சமயம் பிரான்ஸ் தன்னை ஒரு வலிமை மிகுந்த பேரரசாக உலகுக்குக் காட்டிக் கொள்ளும் முயற்சி என்றும் இதைச் சொல்லலாம்.

பிரான்ஸ் நாட்டின் விஞ்ஞானிகள் கூறிய சமாதானம் இதுதான். ‘’எங்களது சோதனைகளால் எந்தவிதக் கதிர்வீச்சும் உண்டாகவில்லை. இதனால் எந்தவித உயிரினங்களின் வாழ்க்கை முறையும் பெரும் மாறுதலுக்கு உள்ளாகிவிடவில்லை. அப்படி இருக்க ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?’’.

இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கும் முயற்சியாக பிரான்ஸ் அரசு பல பத்திரிகை நிருபர்களை, அணு சோதனை நடத்த தென் பசிபிக் பகுதிக்கு அழைத்துச் சென்று வெவ்வேறு கருவிகளைப் பயன்படுத்தச் செய்து அந்தப் பகுதி எந்தவிதக் கதிர்வீச்சுக்கும் உள்ளாகிவிடவில்லை என்பதை நிரூபித்தது. அணுகுண்டு வெடித்த இடத்திற்கு மிக நெருக்கமான தீவே 120 கிலோமீட்டர் தள்ளித்தான் இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டியது பிரான்ஸ் அரசு.

(இன்னும் வரும்)

வரலாற்றுத் தொடர்ஆவணத் தொடர்ஜி.எஸ்.எஸ்பிரான்ஸ் வரலாறு

You May Like

More From This Category

More From this Author