Published : 19 Sep 2014 12:54 pm

Updated : 19 Sep 2014 12:54 pm

 

Published : 19 Sep 2014 12:54 PM
Last Updated : 19 Sep 2014 12:54 PM

றெக்கைகட்டி பறக்கும் சைக்கிள்

இளைஞர்களை எப்படியாவது கவர்ந்துவிட வேண்டும் என்று வாரத்துக்கு ஒரு புது பைக், மாதத்துக்கு ஒரு புது கார் மார்கெட்டில் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன. இருந்தாலும் காலங்காலமாக 'நம்ம ஊரு வண்டி'யாக இருக்கும் சைக்கள் மீதான மோகம் அடிவாங்கி விடவில்லை.

இந்திய நகரங்களில் சென்னைவாசிகளிடம்தான் அதிக சைக்கிள்கள் இருக்கின்றன என்று தி எனர்ஜி அண்ட் ரிசோர்ஸ் இன்ஸ்டிடியூட் (TERI) சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது. சென்னையில் 37 சதவீத வீடுகளில் சைக்கிள் இருப்பதாக அந்த அறிக்கை சொல்கிறது. சென்னை இளைஞர்களில் ஒரு பிரிவினர் சைக்கிளைப் பயன்படுத்துவதையே விரும்புவதாக அடித்துச் சொல்கிறார்கள்.


சைக்கிளிங் சுதந்திரம்

சைக்கிள் எப்போதும் யூத் சிம்பலாகவே இருக்கிறது. நாம் அனைவரும் முதன்முதலில் கீழே விழுந்து, முட்டி உடைந்து, புவியீர்ப்பு விசையை பேலன்ஸ் செய்து ஓட்டும் முதல் வாகனம் சைக்கிள்தான்.

இது எல்லாவற்றையும் தாண்டி சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட பிறகு, கரையைத் தொட ஓடி வருமே கடல் அலை அதைப் போல மனதில் ஒரு சுதந்திரக் காற்று வீசும். அது மனதில் தைரியத்தையும் வரவழைக்கும்.

அதற்குப் பிறகு, பெற்றோர் துணையில்லாமல் பள்ளிக்குச் செல்லவும் வெளியே நண்பர்களுடன் ஊர்சுற்றவும் தொடங்கியிருப்போம். எல்லா இடங்களுக்கும் நம்மை சுமந்து செல்லும் 'செல்லத் தேராக' சைக்கிள் மாறியிருக்கும். டீன் ஏஜில், ஒரு நண்பனைப் போன்ற மனதுக்கு நெருக்கமான வாகனமாக சைக்கிள் மாறியிருக்கும்.

இதை ஆமோதிப்பதைப்

போல, “சைக்கிள் கற்றுக் கொள்ளும்வரை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் போக பெரியவங்க எப்ப வருவாங்கன்னு காத்திருப்பேன். இப்போ நான் ஃபிரீ பேர்டு. சைக்கிள்தான் என் பெஸ்ட் பிரண்ட்”, என்கிறார் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் கண்மணி.

பாதுகாக்குமா?

இப்படி அன் அப்போஸ்டாக சைக்கிள் மனங்களை வென்று விட்டாலும், இளம்பெண்களின் பாதுகாப்புக்கு ஏற்ற பிரத்யேக சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டால், அதற்கு கூடுதல் அங்கீகாரம் கிடைக்கும் என்ற யோசனையும் முன்வைக்கப்படுகிறது. “பசங்களுக்கு பிடிச்ச மாதிரி,

அவங் களுக்கு ஏற்ற டிசைன்களில்தான் பெரும்பாலான சைக்கிள்களைத் தயாரிக்குறாங்க. பொண்ணுங்க சைக்கிள்ல போகும்போது வழியில் ஆபத்து வந்தா, பெற்றோருக்கும் போலீசுக்கும் தெரிவிக்கிற மாதிரி சைக்கிள்ல கருவிகளைப் பொருத்தணும். ஒரு பட்டனை அழுத்துனா தகவல் போற மாதிரி. எதிர்காலத்தில் அப்படி வந்தா நல்லாருக்கும்”, என்று சைக்கிள் தயாரிப்புக்கு முற்றிலும் புதிய ஐடியா தருகிறார் கண்மணி.

ஆரோக்கியம் நிரந்தரம்

சைக்கிளில் கல்லூரிக்குச் செல்வதால் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தனியாக ஃபிட்னெஸ் வகுப்புகளுக்கோ, ஜிம்முக்கோ போக வேண்டியதில்லை. சைக்கிள் ஓட்டுவதை சிறு வயதிலிருந்தே பழக்கமாகத் தொடர்ந்துவருவதாகக் கூறும் அண்ணா பல்கலைக்கழக மாணவர் திருமூர்த்தி, “ என் அண்ணன் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்துதான் எனக்கும் சைக்கிள் ஓட்டணும்னு ஆசை வந்தது.

இப்போது சைக்கிள்லதான் கிளாஸுக்குப் போறேன். பஸ்ஸில் போனா டிராஃபிக்னால ஒரு மணி நேரம் ஆகிற இடத்துக்கு, சைக்கிளில் முப்பது நிமிஷத்துல பறந்துடுவேன்”, என்கிறார்.

சூழல் நண்பன்

தனிப்பட்ட விருப்பம், ஆரோக்கியம் என எல்லாவற்றையும் தாண்டி, சூழலை மாசுபடுத்தக் கூடாது என்று நினைக்கும் இளைஞர்கள், வேகமாக சைக்கிளுக்கு மாறிவருகின்றனர். “இன்டர்ன்ஷிப்புக்காக நான் பெங்களூருக்கு போயிருந்தேன்.

அங்கே பலரும் வேலைக்கு சைக்கிள்ல வர்றதைப் பார்த்த எனக்கு. ஒரே ஆச்சிரியம். அதற்குப் பிறகு ஏன் காலேஜுக்கு சைக்கிள்ல போகக்கூடாதுன்னுதான், மெரிடா ஹைப்ரிட் சைக்கிளை வாங்கினேன். என் வீட்டிலிருந்து காலேஜுக்கு நாற்பது கிலோமீட்டர். அப்படியிருந்தும் தினமும் சைக்கிள்லதான் போறேன்”, என்கிறார் பி.ஆர்க். படிக்கும் முகமது ஃபசிஹுன்.

கல்மண்டபத்திலிருந்து சிறுசேரியில் இருக்கும் முகமது சதக் கல்லூரிக்கு சைக்கிளில் வருவதற்காக நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி வாங்கி தினமும் சைக்கிளில் சென்றுவருகிறார் முகமது. “என்னைப் பார்த்து என் நண்பர்கள் சிலரும் காலேஜுக்கு சைக்கிள்ல வர்றாங்க. சுற்றுச் சூழலை எந்த வகையிலும் பாதிக்காதபடி நான் பயணம் செய்வது, பெருமிதம் தருகிறது" என்கிறார் முகமது.

தனி டிராக்

சீனா, நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் கணிசமான மக்கள் சைக்கிளைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதற்குக் காரணம், அங்கே சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு என்று தனி டிராக் இருக்கிறது. “இங்கே சைக்கிள் ஓட்றவங்களுக்கு வசதியா தனி பாதை இல்லாததால் பைக், கார், ஆட்டோ, பஸ் போன்ற பெரிய வாகனங்களோட நெருக்கடிலயும், விபத்துலயும் சிக்கி சைக்கிள்ல போறவங்க பாதிக்கப்படுறாங்க. இந்த நிலைமை மாறுவதற்கு சைக்கிள் டிராக் அவசியம்”, என்கிறார் கண்மணி.

சென்னையில் சைக்கிள் டிராக் போடும் பணி நடைபெற்றுவருகிறது. தற்போது அடையாரில் இருந்து ஓ.எம்.ஆர். வரை சைக்கிளிங் டிராக் போடப்பட்டிருக்கிறது. “இதை சைக்கிள் ஓட்டுபவர்கள் பயன் படுத்துவதில்லை. பெரும்பாலும் பார்கிங்குக்கு மட்டுமே பயன்படுகிறது. அதுவும் இல்லாமல், அந்த டிராக்கில் சைக்கிள் ஓட்டுவது கடினமாக இருப்பதால், அதை யாரும் பயன்படுத்துவதில்லை”, என்கிறார் முகமது.

சுற்றுச்சூழலை சீரழிக்காத சைக்கிளுக்கு, அரசின் கடைக்கண் பார்வை புது வாழ்வு தரும். அந்தப் பார்வை எப்போது படும் என்பதுதான் சைக்கிள் ரைடர்களின் கேள்வி.


இளைஞர்கள்சைக்கிள்பயணம்யூத்சூழலைமாசுபாதுகாப்புபெரிய வாகனங்கள்சைக்கிள் பயணம்

You May Like

More From This Category

More From this Author