Published : 18 Sep 2014 10:19 am

Updated : 18 Sep 2014 10:19 am

 

Published : 18 Sep 2014 10:19 AM
Last Updated : 18 Sep 2014 10:19 AM

ஆழ்கடல் சூரர்களும் ஊர்க் காதலர்களும்

நீர்ப் பயணத்தில் பார்த்த இரு ஆச்சரிய ஊர்கள் இவை. ஒன்று, சர்வதேச அளவில் ஆழ்கடல் மீன்பிடியில் சவால் விடும் சூரர்களைக் கொண்ட ஊர். சுறா வேட்டையில் எவ்வளவு ஈடுபாடோ, அதே அளவுக்குக் கால்பந்தாட்டத்திலும் வேட்கை கொண்டவர்கள். ஊரில் சந்தோஷ் டிராபி வீரர்களின் எண்ணிக்கை மட்டும் 19. இன்னொன்று, தனக்கெனத் தனிக் கலாச்சாரத்தையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்கும் ஊர். பெண்களுக்குத் திருமணச் சீராகத் தனி வீடு கட்டிக்கொடுக்கும் ஊர். இங்கே காவல் நிலையமும் கிடையாது, மதுக்கடைகளும் கிடையாது. முக்கியமாக, இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவ மத நல்லிணக்கத்துக்கு வழிகாட்டி.

தூத்தூர். தமிழகக் கடல் எல்லையான நீரோடியிலிருந்து இறையுமண்துறை வரை உள்ளடக்கிய தீவு ஊர். சுறா வேட்டையர்கள் நிரம்பிய ஊர் என்கிற ஒரு வரித் தகவல்தான் தூத்தூர் கடலோடிகளிடம் என்னைக் கொண்டுசென்றது. ஆனால், தமிழகத்துக்கு வழிகாட்ட தூத்தூர்காரர்களிடம் இரு விஷயங்கள் இருக்கின்றன என்பதை அங்கே சென்ற பின்னர் உணர்ந்தேன்.

ஆழ்கடல் சூரர்கள்

“எல்லாக் கடலோடிங்களுக்குமே ஒரு கனா இருக்கும். என்னிக்காச்சும், நாம சுறா வேட்டையாடிடணும்னுட்டு. எங்க ஊருல ஒவ்வொருத்தனும் சுறா வேட்டக்காரந்தான். அதுவும் நெதம் நெதம் பொழப்பே சுறா வேட்டதான். ஜப்பான்காரன், தாய்வான்காரன், வியட்நாம்காரனெல்லாம் வெச்சிருக்குற கப்பலுங்க எல்லா வசதியும் கொண்டதுங்க. நம்ம ஆளுங்க வெச்சிருக்கிறது சாதாரண படகுங்க. ஆனாக்க, நம்மாளுங்ககிட்ட போட்டி போட முடியாது. ரொம்ப நுட்பமான ஆளுங்க. நடுக்கடல்ல இவங்க அமைக்கிற ஆயிரங்கால் தூண்டிலப் பாத்தா, எந்த நாட்டுக்காரனும் மலச்சுப்போவான். நீளவாக்குல ஒரு தூண்டி. அதுல குறுக்கமறுக்கன்னு பல தூண்டி. அப்பிடி ஒரு நுணுக்கம். இந்தப் பல தூண்டில எந்த ஒரு தூண்டி யாவது புடிச்சு சுறா எதாச்சும் சேட்டயாடினாகூட, மத்த தூண்டி பாதிக்காது. அப்பிடி ஒரு அமைப்பு. இதெல்லாமும் படக ஓட்டிக்கிட்டே போறபோக்குல கையாளுவாங்க” - ஊர்க்காரர்கள் பேசும்போதே புல்லரிக்கிறார்கள்.

சுறா வேட்டை எப்படி?

ஊரில் சுறா வேட்டையில் கில்லாடி யார்? பலருடைய விரல்களும் பெரியவர் சர்டைனை நோக்கியே நீள் கின்றன. ஆழ்கடல் சென்று அன்றைக்குத்தான் ஊர் திரும்பியிருந்தார்.

“கரக்கடல்லயே தொழில் செய்யிறவங்களுக்குச் சுறா வேட்ட பெரிய சாகசம். ஆழ்கடல் பழகுனா அதுவும் சாதாரணமாயிரும். வேற யாரயும்வுட நாங்க சின்னச் சின்ன நுணுக்கங்கள் சிலதைப் பயன்படுத்துறோம். உதாரணமா, வெளிநாட்டுக்காரன் கரயிலேந்து எடுத்துட்டு வந்த செத்த மீன் துண்ட முள்ளு வாயில சொருவுவாம். நாம அப்பிடிச் செய்யிறதில்ல. கடலுக்குள்ள அப்பக்கைக்கப்ப புதுசா மீனப் புடிச்சு, உசுரோட முள்ளு வாயில சொருவுவோம். எப்பவுமே பெரும்புடி மீனுங்க வேட்டயாடித் திங்கத்தாம் விரும்பும். அதனால, உயிரோட துள்ளுற மீனப் பாத்து வந்து நம்ம தூண்டில்ல சிக்கும். அவ்ளோதாம். இப்பிடிச் சில நுணுக்கங்க.

கடலுக்குள்ள வரிப்புலியன் சுறாவப் பாக்குறது, காட்டுக்குள்ள புலியப் பாக்குற மாரின்னு சொல்லுவாங்க. அந்தக் கடலே அவனுதுங்கிற மாரி சீறுவான். அதுவும் பெரும்பாலும் ஜோடி போட்டுதாம் வருவான். ஒரு வரிப்புலியனப் புடிக்கிறதுக்குள்ள அவனோட ஜோடி வந்துட்டா, ரெண்டு பேரயும் சேத்து நாம போராடணும். அப்பிடியே வெறியோட படகயே கடிச்சு முழுங்குற மாரி கடிப்பாம். சமயம் பாத்து ஈட்டிய வீசி அடிப்பம். ஜோடி வந்துட்டா ரெண்டு குழுவா பிரிஞ்சு அடிப்பம். அடி வுழுந்த வேகத்துல படகுக்குள்ள கொண்டுவரணும். இல்லன்னா, சுறாலேந்து கசியிற ரத்த வாடைக்கு மத்த பெருமீனுங்க சூழ்ந்துரும்...”

- ஒரு சுறா வேட்டை கண் முன்னே வார்த்தைகளால் அரங்கேறுகிறது.

ஆழ்கடல் எனும் அற்புத உலகம்

தூத்தூரைச் சுற்றிலும் எங்கும் குடிசைகளுக்கு இடம் இல்லை. “நாங்க நல்லா வசதியா இருக்கம். ஆழ்கடல் தொழில் தந்த வசதி இது. நம்மாளுங்க பல எடங்கள்ல தொழில் இல்லன்னு பொலம்பி உக்காரப் பெரும்புடியான காரணங்கள்ல ஒண்ணு, கரக்கடல்லயே தொழில் செய்யிறது. கட்டுமரமும் நாட்டுப்படகுங்களும் ஓடுற எடத்துலயே விசைப்படகுங்களயும் டிராலரயும் ஓட்டுனா என்னாறது? நம்ம நாட்டு ஆழ்கடல் வளத்துல பெரும் பகுதி பயன்படுத்தாமலே கெடக்குது.

ஒரு மொற ஆழ்கடல் போனா, ஒரு மாசத்துலேந்து ஒண்ணர மாசம் வரைக்கும் ஆவும் ஊர் திரும்ப. படகுக்கு டீசல் மட்டுமே பதினஞ்சாயிரம் லிட்டர் வரைக்கும் பிடிப்பம்னா, எவ்ளோ அரிசி, மளிகைச் சாமான், தண்ணீ பாட்டில் எடுத்துட்டுப் போவோம் பாத்துக்கங்க. ஆழ்கடல் தொழில் ஒரு தனி ஒலகம். கடலுல ஒரு எல்லயத் தாண்டிட்டா அது வேற ஒலகம். திடீர்னு ஒரு நா முழுசா பகலே இருட்டி ராத்திரியாவும்; கொஞ்ச நேரத்துலயே பகலு திரும்பும். ராத்திரில பெருவெளிச்சம் வரும். புலுவைங்க (திமிங்கிலங்கள்) பாட்டு பாடும். படகு உசரத்துக்கு மேல மாசா வரும், சலும்பலே இல்லாமலும் கட்டாந்தரையாட்டம் கடல் கெடக்கும். அது ஒரு தனி ஒலகம்...”

கால்பந்துக் காதல்

தூத்தூர்க்காரர்கள் ஆழ்கடலைத் தாண்டிக் காதலிக்கும் இன்னொரு விஷயம் கால்பந்து. தெருவுக்கு நான்கு மைதானங்கள் இருக்கின்றன. ஊர்க்காரர்கள் எல்லோருமே கால்பந்து ஆடுகிறார்கள், தாத்தா, அப்பா, பேரன் என்று வயது வித்தியாசம் இல்லாமல். “ஒண்ணு கடல்ல கெடப்பம். இல்ல, தெடல்ல கெடப்பம். தெருக்குத் தெரு வெளயாடிக்கிட்டு இருக்குறதால, இங்கெ ஒரு புள்ள பால் குடிக்கிற வயசிலயே பந்தடிக்கிறத வேடிக்க பாக்க ஆரமிச்சுரும். நடக்குறதுக்கு முன்னயே ஒதைக்க ஆரம்பிச்சுரும்” என்கிறார்கள்.

ஊர்க்காரர்களின் இந்த விளையாட்டு ஆர்வத்தை நல்லமுறையில் வளர்த்தெடுத்திருக்கிறார்கள் கடந்த தலைமுறையினர். அறுபது ஆண்டுகளுக்கு முன் ‘கென்னடி கிராமப்புற இளைஞர்கள் குழு’என்ற பெயரில் தொடங்கிய கால்பந்தாட்டக் குழு, கிராமத்தில் இன்று மகத்தான மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது. “மொதல்ல கடக்கர மக்கள்கிட்ட இருக்குற உடல் வலுவுக்குச் சரியான தீனி வெளயாட்டு. பக்கத்து ஊருங்களோட அடிக்கடி வர்ற சண்டைங்களுக்கு முடிவுகட்டுச்சு. எல்லாத்துக்கும் மேல இன்னக்கிப் பலரக் கௌரவமா வெளியில தூக்கிட்டுப் போயிருக்கு. இங்கெயுள்ள பலரு மாநில அணியில, தேசிய அணியில இருக்காங்க. சந்தோஷ் டிராஃபி ஆட்டக்காரங்க மட்டும் 19 பேரு. ஐசிஎஃப், ஏஜிஎஸ், பிஎஸ்என்எல்னு பல நிறுவனங்கள்ல எங்க ஊர்க்காரங்கள வேலயில உக்காத்திவெச்சிருக்கு கால்பந்தாட்டம்” என்கிற தீர்தோஸ், தமிழகக் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்தவர். இப்போது குமரி மாவட்ட உடற்கல்வி அலுவலர்.

ஆழ்கடல் வளத்தைப் பயன்படுத்தவும் தெரிந்திருக்கிறது, கடலோர மக்களின் உடல் வளத்தைப் பயன்படுத்தவும் தெரிந்திருக்கிறது தூத்தூர்க்காரர்களுக்கு!

ஊர்க் காதலர்கள்

காயல்பட்டினத்தைப் பற்றிக் கேள்விப்பட கேள்விப்பட… ஆச்சரியம் அதிகமாகிக்கொண்டே போனது. சொந்த ஊர்க் காதல் நம்மூரில் விசேஷம் இல்லை. என்றாலும், காயல்பட்டினக்காரர்களின் ஊர்க் காதல் அசரடிக்கிறது.

காயல் கலாச்சாரம் தனிக் கலாச்சாரம்

“தமிழ்நாட்டுல உள்ள பாரம்பரிய முஸ்லிம்கள் ஊர்கள்ல ஒண்ணு காயல்பட்டினம். மத்தியக் கிழக்குலேர்ந்து கடல் வாணிபத்துக்காக வந்தவங்க மண உறவு கொண்டு தங்குன ஊருங்கள்ல ஒண்ணு இது. காயல்பட்டினத்துக்குன்டு தனிக் கலாச்சாரம் உண்டு. தமிழ்க் கலாச்சாரமும் அரபுக் கலாச்சாரமும், கடலோடிகளோட வாணிபக் கலாச்சாரமும் ஒண்ணுகூடி உருவான கலாச்சாரம் இது. கடக்கரையை அலைவாய்க்கரைன்டு சொல்லுவோம். காலைச் சாப்பாடு முடிஞ்சுட்டுதாங்கிறதைப் பசியாறிட்டீங்களான்டு கேப்பம். பழைய சோத்தைப் பழஞ்சோறும்பம். ரசத்தைப் புளியானம்பம். இப்பிடிச் சீர்ப்பணியம், போனவம், வெல்லளியாரம், சர்க்கரைப்புளிப்புன்டு எங்களோட சீர் பலகாரங்கள்ல ஆரமிச்சு, நாங்க அன்டாடம் பயன்படுத்துற பல சொல்லுங்க பழந்தமிழ்ச் சொல்லுங்க. இயல்பா எங்க மக்கள்கிட்ட இருக்கு. காலங்காலமா இங்கே காவல் நிலையம் கெடையாது. மதுக்கடை கெடையாது. வட்டி கெடையாது. வரதட்சிணையையும் ஒழிச்சுட்டோம். இங்கெ பொறந்தவங்களுக்கும் புகுந்தவங்களுக்கும் வேற எந்த ஊரும் ருசிக்காது” என்கிறார் கலாமி. ‘காயல்பட்டினம் வரலாறு’ நூலாசிரியர்.

“இது தாய்வழி சமூக மரப கடைப்பிடிக்குற ஊர். கல்யாணம் முடிச்சதும் மாப்பிள்ளதான் பெண் வீட்டுக்கு வாழப் போகணும். பெரும்பாலான ஆண்கள் கடல் தாண்டி வாணிபத்துல இருக்கிறவங்கங்கிறதால, இயல்பாவே எல்லா நிர்வாகமும் பெண்கள் கையிலதாம் இருக்கும். பெண்களுக்குச் சொத்துரிமையைப் பத்திப் பேசுற காலத்துக்கெல்லாம் முன்னாடியே, இங்கெ பெண் பிள்ளைங்களுக்குச் சொந்த வீட்டைச் சீதனமாக் கொடுக்குற வழக்கம் வந்துருச்சு. ஒவ்வொரு வீட்டையும் ஒட்டிப் பெண்கள் பயன்படுத்துறதுக்குன்னே ஒரு முடுக்கு இருக்கும். அது வழியாவே பூந்து ஊரோட எந்தப் பகுதிக்கும் போய்ட்டு வந்திரலாம். அந்தந்த வீட்டை ஒட்டியிருக்குற ஆண்களைத் தவிர, வேற ஆண்கள் இந்த முடுக்கைப் பயன்படுத்தக் கூடாது. ஆனா, பெண்கள் முடுக்கையும் பயன்படுத்தலாம்; வீதியையும் பயன்படுத்தலாம்” - காயல்பட்டினம் வீடுகளைப் பற்றிய சுவாரசியங்களை அடுக்குகிறார் ஷேக்ணா.

ரத்த உறவு நல்லிணக்கம்

“அந்தக் காலம் தொட்டே இங்கெ பொறந்த ஒவ்வொருத்தரும் தாயா, புள்ளயா பழகுற மரபைக் கடைப்பிடிச்சுக்கிட்டு இருக்கோம். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள்ங்கிற வேறுபாட்டுக்கெல்லாம் இங்கெ எடம் கொடுக்குறதில்ல. எங்களுக்குள்ள பால்குடி உறவு உண்டு. தாய்ப்பால் இல்லாத எத்தனையோ முஸ்லிம் பிள்ளைங்களுக்குத் தன்னோட பால் தந்து ஊட்டின தலித் பெண்கள் இங்கெ உண்டு. அவங்களை இன்னொரு தாயா பாவிச்சு, பராமரிக்குற பிள்ளைங்களும் உண்டு. மகாத்மா மேல எங்களுக்கு இருக்குற மரியாதையைக் காட்ட, அவருக்கு ஒரு வளைவு கட்டினம். கால்பந்துன்னா எங்க ஊர்க்காரங்களுக்கு உசுரு. எங்க பிள்ளைங்களுக்கு வெளயாட்டு கத்துக் கொடுத்த கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த பீட்டர் இறந்தப்போ, விளையாட்டரங்கம் கட்டி அதுக்கு அவரொட பேரையே வெச்சோம். இங்கெ இருக்குற சமய நல்லிணக்கத்துக்கு உயிரோட நிக்கிற சாட்சியம் அது” - சந்தோஷத் தகவல்களைப் பரிமாறுகிறார் தமிழன் முத்து இஸ்மாயில்.

“ஆர்எஸ்எஸ், பிஜேபிகாரங்ககூட இங்கெ எங்கெகூட ஒண்ணோட மண்ணாதாம் கெடப்பாங்க. நீங்க பண்டாரம் அண்ணனைக் கேட்டுப் பாருங்க. இந்த ஊர்ல இந்து அமைப்புங்களோட பெரிய பிரதிநிதி அவருதான்” என்கிறார்கள். பார்த்த மாத்திரத்தில் கட்டியணைத்து வரவேற் கும் பண்டாரம், டீ சொல்கிறார். “ஆயிரம் அரசியல் செய்யலாம், எல்லாமே சக மனுசன் நல்லா இருக்கணும்கிற அக்கறயிலதாம் முடியணும்.இங்கெ சாதி, மத வேத்துமைக் கெல்லாம் எடமே கொடுக்குறதில்ல சார்” என்கிறார் பண்டாரம். டீக்கடை சபாவில் அஞ்சல் துறை ஊழியர் சந்திர சேகரும் சேர்ந்துகொள்கிறார். “பெருமைக்குச் சொல்லல. சார், எங்க சமூகத்தைச் சேர்ந்தவங்க பலரை அவங்க தூக்கி விட்ருக்காங்க. பல கல்யாணங்களுக்குத் தாலி எடுத்துக் கொடுத்துருக்காங்க. பழக்கம் வழக்கமுன்னா சும்மா இல்ல, எங்கள்ல அவங்க ஒருத்தர், அவங்கள்ல நாங்க ஒருத்தர்...”

திசையெட்டும் ஒற்றுமைக் குரல்

காயல்பட்டினக்காரர்கள் உலகெங்கும் பரவிக் கிடக்கிறார்கள். எங்கெல்லாம் பத்துப் பேருக்கு மேல் சேர்கிறார்களோ, அங்கெல்லாம் உடனே உருவாகிவிடுகிறது காயல் நல மன்றம். இலங்கை, அரபு அமீரகம், ஹாங்காங், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், வட அமெரிக்கா என்று செல்லும் இடங்களிலும் மன்றங்கள் தொடங்கி, ஊர் உறவைப் பேணுகிறார்கள். ஊருக்கு உதவுகிறார்கள். “எந்த ஊர் போனாலும், எங்காளுங்களுக்கு ஊர் பாசம் போவாது. ஊருல என்ன நடக்குதுன்னு விடிஞ்ச உடனே தெரியணும். இந்தச் சின்ன ஊரோட சேதியைப் பரப்ப ஒன்பது இணையப் பத்திரிகைங்க இயங்குதுன்னு சொன்னா நம்புவீங்களா?” என்று வரிசையாகக் காயல்பட்டினம் இணையப் பத்திரி கைகளைப் பட்டியலிடும் சாலிஹ், காயல்பட்டினம் டாட் காம் இணையப் பத்திரிகையை நடத்துபவர்.

“ஊரவுட்டு எங்கெ போனாலும் ஊர் மேல அக்கற கொறயுறது இல்ல. நூறு வருஷத்துக்கு முன்னாடியே இங்கெ தங்களோட சொந்த காசப் போட்டு பள்ளிக்கூடம் கட்டிக் கற்பிச்சாங்க எங்க ஊர் முன்னோருங்க. அந்தப் பாரம்பரியம் இன்னைக்கும் தொடருது. கல்விக்கு, மருத்துவத்துக்கு, சுற்றுச்சூழலுக்கு, விளையாட்டுக்குன்னு ஒவ்வொரு விஷயத்துக்கும் உதவ ஒவ்வொரு சங்கம் இருக்கு. எந்த ஊருல இருந்தாலும் எங்க வருமானத்துல ஒரு பகுதியக் கொடுத்துருவோம். மத்தவங்க கஷ்டப்படுறத வேடிக்க பாக்குறதில்ல. மன வளர்ச்சி குறைவான குழந்தைங்களப் பராமரிக்கக்கூட இந்தச் சின்ன ஊர்ல ‘துளிர்’னு ஒரு சிறப்புப் பள்ளிக்கூடம் உண்டு. எல்லாமே சக மனுஷம் மேல உள்ள அக்கறதாம்” என்று சொல்லும் புஹாரி, இலங்கையில் வாணிபம் செய்பவர்.

சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷமும் அதுதானே?

(அலைகள் தழுவும்...)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in


நீர்நிலம்வானம்தூத்தூர்காயல்பட்டினம்சுறா வேட்டைமத நல்லிணக்கம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

mobile-apps

360: செயலிகளின் காலம்

கருத்துப் பேழை

More From this Author

mother-of-equality

சமத்துவத்தின் தாய்

கருத்துப் பேழை