Published : 24 Sep 2014 07:22 PM
Last Updated : 24 Sep 2014 07:22 PM

சமூக வலைதளங்களில் தழைத்தோங்கும் தேசப்பற்று!

அரசியல், சினிமா, விளையாட்டு முதலான செய்திகளையொட்டி, சமூக வலைதளங்களில் பதிவுகளும் பகிர்வுகளும் கொட்டப்படுவது வாடிக்கை. சர்வதேச கிரிக்கெட் சீசனில் இந்திய இணையவாசிகளின் தேசப்பற்றைப் பார்க்க முடியும். அரிதினும் அரிதாகவே விளையாட்டுத் தவிர்த்த துறைகளை முன்வைத்து தேசப்பற்றுப் பதிவுகள் இடம்பெறுவதைக் காண முடியும்.

ட்விட்டரில் இன்று (புதன்கிழமை) வலம் வந்தவர்கள் அப்படி ஓர் அரிய நிகழ்வைக் கண்டிருக்கலாம். மங்கள்யான் மூலம் இஸ்ரோ செய்த சாதனையை முன்வைத்து இன்று தேசப்பற்றை வெகுவாக வெளிப்படுத்தினார்கள் நெட்டிசன்கள்.

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் இணையும் நிகழ்வையொட்டி, கடந்த மூன்று நாட்களாகவே ட்விட்டரில் 'மங்கள்யான்' (#Mangalyaan) என்ற ஹேஷ்டேக் தொடர்ச்சியாக ட்ரெண்டிங்கில் இருந்தது.

தனது முதல் முயற்சியிலேயே இஸ்ரோ, செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட‌ப் பாதைக்குள் மங்கள்யான் விண்கலத்தை செலுத்திய சாதனையில் இந்தியர்கள் கொண்ட பெருமிதம் சமூக வலைத்தளங்களில் இன்று பெரிதும் பேசப்படுகிறது.

இந்தச் சாதனையை நிகழ்த்தி ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்த்ததற்காக இஸ்ரோவிற்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும் ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் குவிந்தவண்ணம் உள்ளன.

நிமிடத்துக்கு நூற்றுக்கணக்கான பதிவுகளைத் தாங்கிய ஹேஷ்டேக்-குகளே டிரெண்டிங்கில் வலம் வரும் என்ற சூழலில், இன்றைய தினம் இந்திய நெட்டிசன்கள் இட்ட பதிவுகள் லட்சக்கணக்கானவை என்பது கணிக்கத்தக்கதே.

மங்கள்யான் (#Mangalyaan), ஜெய் ஹிந்த் (#Jai Hind), இஸ்ரோ (#ISRO), இந்தியா அட் மார்ஸ் (#India at Mars) முதலான ஹேஷ்டேக்-குகள் இந்தியாவில் மட்டுமில்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் டிரெண்டாகியுள்ளது.

இந்தியர்களின் தேசப்பற்றை தழைத்தோங்கச் செய்யும் வகையில், இஸ்ரோவின் சாதனையைப் பதிவு செய்யும் களமான ட்விட்டரில் குவிந்த பதிவுகளில் சில:

"முழு உலகையும் 1.22 பில்லியன் இந்தியர்கள் மீது பொறாமைகொள்ள வைத்திருக்கிறது இந்த மங்கள்யான்... இது ஒரு விலைமதிப்பற்ற தருணம், இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்." - மோஹன் ரங்கதுரை

"மங்கள்யான் சாதனைக்காக எல்லா இந்தியர்களுக்கும் வாழ்த்துக்கள், நம் விஞ்ஞானிகளால் பெருமிதம் அடைகிறேன், இந்தியானாக இருப்பதில் பெருமை கொள்கிறேன், ஜெய் ஹிந்த்." - மோஹன் ரங்கதுரை

"மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. முதல் முயற்சியே வெற்றிகரமானதால் இது இஸ்ரோவிற்கும் இந்தியர்களுக்கும் ஓர் உணர்ச்சிப் பொங்கும் பெருமிதம் நிறைந்த நேரம். ஜெய் ஹிந்த்." - மதுர் பந்தர்கர்

"இந்தியனாக இருப்பது ஒரு பெருமிதமான உணர்வு. இதுபோன்ற தருணங்கள்தான் தேசத்தையே இணைக்கிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை அளித்ததற்கு நன்றி இஸ்ரோ!" - மிகேல் வஸ்வனி

"54 வருடங்களில் 5 நாடுகளால் 43 தோல்வி கண்ட முயற்சிகள். இந்தியாவின் மங்கள்யான் முதல் முறையிலேயே வெற்றிபெற்றது சாதனை. இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்." - ஆனந்த் பிள்ளை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x