Published : 13 Sep 2014 11:39 AM
Last Updated : 13 Sep 2014 11:39 AM

கல்லூரிகளில் இந்தியை கட்டாயப் பாடமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்

கல்லூரிகளில் இந்தியை கட்டாயப் பாடமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவல் மொழித் துறையின் சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.

அத்துறையின் சார்பு செயலாளர் குல்விந்தர் குமார் அனுப்பியுள்ள அந்த சுற்றறிக்கையின் மூலமாக மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல்கள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்புகளில் இந்தியும், ஆங்கிலமும் முதன்மைப் பாடமாக கற்றுத்தர வேண்டும்; அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்புகளில் சட்டம், வணிகவியல் ஆகிய பாடங்களை இந்தி வழியில் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தான் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் ஆகும்.

தமிழ்நாட்டை பொருத்தவரை மத்திய பல்கலைக்கழகம், காந்தி கிராமப் பல்கலைக்கழகம் போன்ற சில பல்கலைக்கழகங்களத் தவிர மாநிலப் பல்கலைக்கழங்களில் இளநிலைப் பட்டப்படிப்புகள் கற்பிக்கப்படுவதில்லை. இத்தகைய சூழலில் பல்கலைக்கழகங்களில் கட்டுப்பாட்டில் செயல்படும் கல்லூரிகளில் இந்திப் பாடத்தையும், இந்தி வழிக் கல்வியையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றே இச்சுற்றறிக்கைக்கு பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. இதுகுறித்த தெளிவான விளக்கம் எதுவும் சுற்றறிக்கையில் இடம் பெறவில்லை.

மத்திய இந்திக் குழுவின் 30-வது கூட்டம் கடந்த 28.07.2011 அன்று அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி கல்லூரிகளில் இந்தியை கொண்டுவர முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடர் நடவடிக்கை குறித்து விவாதிக்க மத்திய இந்திக் குழுவின் கூட்டம் விரைவில் நடைபெறவிருப்பதாகவும், அதற்கு முன்பாக இந்திப் பாடம் மற்றும் இந்தி வழிக் கல்வியை அறிமுகப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை வரும் 20ஆம் தேதிக்குள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழித் துறைக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கும்படியும் பல்கலைக்கழக நிர்வாகங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த சுற்றறிக்கை மிக மோசமான இந்தித் திணிப்பு என்பதில் எந்த ஐயமும் இல்லை. பட்டப்படிப்புகளில் இந்தியை திணிக்கும் நோக்குடன் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் இந்திக்கு தனித்துறையை ஏற்படுத்தவும், அதற்கான நிதியை பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் தாராளமாக வழங்குவதற்கும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மத்திய அரசுத் துறைகளுக்கு சொந்தமான சமூக ஊடகக் கணக்குகளில் இந்தியில் மட்டுமே கருத்துக்களை பதிவிட வேண்டும் என்று ஆணையிட்டதன் மூலம் இந்தியைத் திணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முயன்றது. அதன்பின் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் சமஸ்கிருத வாரத்தை கொண்டாட வேண்டும்; ஆசிரியர் நாளை குரு உத்சவ் ஆக கடைபிடிக்க வேண்டும் என்பன போன்ற உத்தரவுகளின் மூலம் சமஸ்கிருதத்தை திணிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

அதன் தொடர்ச்சியாக இப்போது பல்கலைக்கழகங்களின் மூலம் இந்தியை திணிக்கத் துடிப்பது, அதிலும் 2011ஆம் ஆண்டில் முந்தைய ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்த ஒரு முடிவை இப்போது நடைமுறைப்படுத்த முயல்வது மெச்சத்தகுந்ததல்ல.

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு மூலம் நிதி உதவி செய்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, அவற்றை இந்தித் திணிப்பு கருவிகளாக மத்திய அரசு பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபற்றி மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியதா? என்பதும் தெரியவில்லை. எது எப்படியாக இருந்தாலும் பல்கலைக்கழகங்களின் மூலமாக இந்தியை திணிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x