Published : 11 Sep 2014 01:18 PM
Last Updated : 11 Sep 2014 01:18 PM
இப்பூவுலகில் தோன்றி எவ்வளவோ அற்புதங்கள் செய்து கடவுளின் அவதாரமாக வணங்கப்பட்டவர்கள் உண்டு. அவர்களில் ஒருவர்தான் கர்ணி மாதா.
துர்க்கையின் அவதாரமான அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பீகானேர் மாவட்டத்தில் உள்ள தேஷ்நோக் கிராமத்தில் குடி கொண்டிருக்கிறார். பீகானேருக்கு வெளியே 30 கீ.மீ. தொலைவில் உள்ளது இந்தக் கிராமம்.
கோட்டை அரண்களால் சூழ்ந்த ஆலயம்கோட்டை அரண் போல் இருக்கும் மதில் சுவர்களால் சூழப்பட்டு இருக்கிறது கர்ணி மாதா திருக்கோயில். நுழைவாயில் பளிங்கினால் வேயப்பெற்று பளபளக்கிறது.
“ஜாக்கிரதை! மிதித்து விடாதீர்கள்” என்கிறார் வழிகாட்டி. கீழே சாம்பல் நிறத்தில் கறுப்பாக குறுகுறுவென்று கால்களின் மேல் ஏறி ஓடுகின்றன எலிகள். பெரிய பிரகாரம் எங்கும் எலிகள் அங்கும் இங்கும் ஓடுகின்றன. சுற்றாலையின் நடுவில் கருவறை இருக்கிறது.
சிறிய குகை போல் உள்ள அறையில் அம்மன் . வாயிற்கதவுகள் வெள்ளியிலானவை.
அதில் கர்ணியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றில் தேவி கையில் சூலத்துடனும் சுற்றி எலிகளுடனும் காட்சி தருகிறார்.
சிம்ம வாஹினி
மூலவர் சிலை ஜெய்சல்மர் மற்றும் ஜோத்பூரில் கிடைக்கும் சிவப்புக் கல்லில் செதுக்கப்பட்டிக்கிறது. .75 செ.மீ. உயரம். அம்மன் தலையில் மகுடத்துடனும் , வலது கையில் சூலத்துடனும் , இடது கையில் கபாலத்துடனும் சிம்ம வாஹினியாகக் காட்சி தருகிறார்.
விக்ரகம் முழுவதும் குங்குமத்தால் (சிந்தூர்) மூடப்பட்டிருக்கிறது. முன்னால் பெரிய தட்டு. அதில் லட்டுகள். பிரசாதத்தை எலிகள் கொறித்துக் கொண்டிருக்கின்றன.
வேறு ஒரு தட்டில் பால் . கோவிலில் வேறு இடங்களிலும் இதைப் போன்று தின்பண்டங்கள் எலிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இங்கே எலிகள் வணங்கப்படுகின்றன என்கிறார் பூசாரி. மாதாவின் கருணையினால் இங்கு உலவுகின்றன. அவருடைய சந்ததியினராக எலிகள் இங்கே வணங்கப்படுகின்றன.
கர்ணி மாதாவின் கதை
கர்ணிமாதா, சரண் என்னும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இவர் 1387-ம் ஆண்டு ஜோத்பூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். வரிசையாக ஐந்து பெண் குழந்தைகளுக்குப் பின்னர் ஆறாவதாகப் பிறந்தார்.
இவருக்கு 29 வயதில் திருமணமும் நடந்தது. மணமகனை இவரே அடையாளம் காட்டினார். கணவர் பெயர் தேபா. திருமண ஊர்வலம் திரும்பிக் கொண்டிருந்தபோது நீர் அருந்துவதற்காக ஊர்வலம் சற்று நிறுத்தப்பட்டது.
அப்போது மாப்பிள்ளையானவன் இவர் இருந்த பல்லக்கின் திரையை நீக்கி பார்த்தார். உள்ளே சிம்ம ஸ்வரூபிணியாக துர்க்கை உருவமாக கர்ணி மாதா அமர்ந்திருந்தார்.
பின் அந்த உருவம் மறைந்து கர்ணி தோன்றினார். கணவரிடம் தன் அவதார நோக்கத்தைக் கூறி தன்னுடைய தங்கையை அவருக்கு இல்லறத் துணையாக்கினார். பிறகு நாடோடியாகத் திரிந்து பல அற்புதங்களை நிகழ்த்தினார்.
மக்களுக்கு அருள்
தேஷ்நோக் என்ற அழகிய வனப் பகுதியை அடைந்தார். அங்கேயே குடியிருக்கவும் முடிவு செய்தார். ஒரு குகையில் எழுந்தருளி மக்களுக்கு அருள் புரிந்தார். ஜோத்பூரை ஆண்ட மூன்று மன்னர்கள் இவர் ஆசியுடன் ஆட்சி அமைத்தனர்.
அதில் ராவ் ஜோதா என்பவன் மற்றொரு ராஜபுத்திரனால் விரட்டப்பட்டு இவரிடம் தஞ்சம் புகுந்தான். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இவருக்கு சேவை புரிந்து பின்னர், கர்ணி மாதாவின் உத்தரவுப்படி, தகுந்த சமயத்தில் எதிரியைத் தாக்கி தன் ராஜ்யத்தை மீட்டான்.
அதுவே பின்னால் ஜோத்பூர் என்று பெயர் பெற்றது. அவருடைய மகன் ராவ் பீகா தந்தையிடமிருந்து பிரிந்து இவர் ஆலோசனைப்படி ஒரு அழகிய நகரை நிர்மாணித்தான்.அதுவே பீகாநேர் என்று ஆனது.
இந்து மத ஐதீகப்படி, ஒரு பிறவி முடிவது என்பது அடுத்த பிறவியின் தொடக்கம் ஆகும். ஆன்மா பல பிறவிகளை வாழ்ந்து பிரம்மத்துக்குள் ஐக்கியமாவதற்குப் பல பிறப்புகள் அவசியம். இதுதான் சம்சாரா என்று அழைக்கப்படுகிறது.
கர்ணி மாதாவின் கோவிலில் காணப்படும் எலிகளும் கர்ணி மாதாவின் சக குடிமக்களாகவே கருதப்படுகின்றன. அதனால்தான் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலிகளுக்கு இந்த ஆலயத்தில் ராஜமரியாதை அளிக்கப்படுகிறது.
பிரசாதத்தை உண்ணும் எலிகள்