Published : 08 Sep 2014 02:34 PM
Last Updated : 08 Sep 2014 02:34 PM

வாழ வேண்டுமென்று முடிவெடுத்த கணம்

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை. ஜனவரி 31,1993. எனது 18ஆவது பிறந்த நாளுக்குச் சில நாட்கள் இருந்தன. எங்கள் முகாமில் உள்ள ஒருவன் முந்தின நாள் இரவில் சுடப்பட்டான்.

பழிக்குப் பழி

என்னுடைய நண்பர்கள் இதற்கு முன்பு கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். எனினும், இறந்த மனிதனுடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது. அவனுடன் மட்டுமின்றி அவனைக் கொன்றவனுடனும் சேர்ந்தேதான் நான் வளர்ந்தேன். அந்த இரண்டு பேரும் எங்கள் பகுதியில் இரண்டு தரப்பினரின் பிரதிநிதிகள். நாங்கள் எல்லாரும் ஒன்றாகப் பள்ளிக்குப் போனோம். நாங்கள் எல்லாரும் ஏழாம் வகுப்பு முதலே ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளத் தொடங்கினோம்.

நான் மிகுந்த கோபம் கொண்டேன். எனது நண்பனின் கொலைக்குப் பழிதீர்க்க அவனது இறுதிச் சடங்கு வரை பொறுத்திருப்பது என்று நாங்கள் முடிவுசெய்தோம். எங்களது துப்பாக்கிகளுடன் தேவாலயத்துக்குச் சென்றோம். எதற்கும் தயாராக இருந்தோம்.

கொல்லப்பட்ட பையனின் அம்மா தனது சக்தியை எல்லாம் ஒன்றுதிரட்டி ஒரு மைக்ரோபோன் மூலம் எங்களிடம் பேசினாள். அவள் தன் மகன் உயிரோடு இருந்தபோது நடத்திய உரையாடலைப் பற்றி எங்களிடம் சொல்லத் தொடங்கினாள். உயிர் பிழைப்பதற்காக ஓடிக்கொண்டே இருப்பதில் களைப்பு ஏற்பட்டுவிட்டதாக அவன் கூறியிருக்கிறான். நேர்மையாக வாழ்வதற்குத் தயார் என்றும் கூறியிருக்கிறான். அத்துடன் தனது அம்மாவிடம் தனது துப்பாக்கியைக் கொடுத்து, இந்த முறை தான் சொன்னபடி உறுதியாக நடப்பேன் என்றும் வாக்குறுதி கொடுத்துள்ளான்.

தாயின் மன்னிப்பு

அவன் தாயின் கண்களில் கண்ணீரை நான் பார்த்தேன். அவள் அனுபவித்துக்கொண்டிருக்கும் வலியை உணர்ந்தேன். அதைவிட தனது மகனைக் கொன்ற அந்த வாலிபனை மன்னித்துவிட்டேன் என்று அவள் சொன்னபோது நான் மேலும் ஆச்சரியம் அடைந்தேன்.

எனக்கு திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டது! கொல்லப்பட்டவனின் சொந்தத் தாயே கொன்றவனை மன்னிக்கும்போது நண்பனுக்காகப் பழிவாங்கத் துடிக்கும் நான் யார் என்ற கேள்வி எழுந்தது.

அன்று இரவு நான் பாதிரியாரிடம் என் துப்பாக்கியைக் கொடுத்தேன். நான் இனிமேலும் அப்படியான வாழ்க்கையைத் தொடரப் போவதில்லை என்று கூறி உதவி கேட்டேன். மீண்டும் தெருக்களில் அலைந்து வம்பு வளர்க்காமல் இருப்பதற்கு எனக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது.

காதலில்…

அதற்கு அடுத்த நாளே எனது 18 ஆவது பிறந்த நாள் அன்று ஒரு இளம் பெண்ணைப் பார்த்தேன். அவள்தான் பல வருடங்கள் கழித்து எனக்கு மனைவியானாள். இந்தச் சிறு பெண்ணின் கள்ளமற்ற தன்மைக்கும் எனக்கும் நெடுந்தூரம். ஆனால் இருவரும் உடனடியாக ஈர்க்கப்பட்டோம். மிகக் குறுகிய காலத்தில் சிறந்த நண்பர்களாக மாறினோம். அவள் நடுத்தர வர்க்க மனிதர்கள் வாழும் பகுதியில் வாழ்ந்துவந்தாள். அவளுக்கு மிக அழகிய குடும்பம் இருந்தது.

நான் அவளைக் கவர விரும்பியதை நினைவுகூர்கிறேன். அதே நேரம் எனது இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் ஆபத்தான எதிர்காலத்திலிருந்து அவளைப் பாதுகாக்கவும் விரும்பினேன். அதனால் அவளுடன் இருக்கும் போதெல்லாம் வித்தியாசமாக நடக்கவும், பேசவும், உடை உடுத்தவும் தொடங்கினேன். நகரில் நாங்கள் வசிக்கும் பகுதிக்கு அவளை அழைத்துக்கொண்டு சென்றதே இல்லை. அவள் அபாயகரமான சூழநிலைக்குள் சிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்று அஞ்சினேன்.

எனது எதிர்காலம் குறித்து யோசிக்கத் தொடங்கினேன். நான் எங்கே செல்கிறேன்? இவளுடனான உறவு தீவிரம் அடைந்தால் இவளுக்கு என்னால் எதைத் தர இயலும்? எனது வாழ்க்கை முறையை மாற்றத் தொடங்கும் அளவுக்கு நான் அந்த உறவை மிகவும் மதித்தேன். வாழ்க்கையைக் கூடுதலாக விரும்புவதற்கான காரணத்தை அவள் எனக்குத் தந்தாள்.

என் வழியில் தடை

நான் எதிர்காலம் குறித்துச் சிந்தித்ததேயில்லை. உடனடியாக எனக்கு வியர்க்கத் தொடங்கியது. எனது இதயம் வேகமாகத் துடித்தது. அச்சம் என்னைப் பீடித்தது. பணம் சம்பாதித்து, ஒரு குடும்பத்தை அமைத்துக்கொள்வதைப் பற்றிய எண்ணம் வந்தபோதெல்லாம் நான் பீதியடைந்தேன். வாழ்க்கை போராட்டம் நிரம்பியது என்று குழந்தைப் பருவத்தில் எனக்கு ஏற்பட்ட முதல் பதிவை எதிர்காலத்தில் என் குழந்தைக்கு ஏற்படுத்த நான் விரும்பவில்லை. நான் வெற்றிகரமானவனாகத் திகழ வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

என்னிடம் புத்தம் புதிய மனப்பாங்கு உருவானது. நான் எனது இறந்த காலம் பற்றி இனியும் கவலைப்படப் போவதில்லை. எனது வழியில் யாரும் தடையாக நிற்க இனிமேல் அனுமதிக்கப்போவதில்லை. என் வழியில் இருந்து வெளியேற்ற வேண்டிய முதல் ஆள் நான்தான்!

கட்டுரையாளர் ஒரு அமெரிக்கர். அவர் எழுதியுள்ள from The Hood to doing Good எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. வெளியீடு: சக்சஸ் ஞான், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x