Published : 04 Mar 2015 10:13 AM
Last Updated : 04 Mar 2015 10:13 AM

மீன் பிடிப்பதில் இரு தரப்பினர் மோதல்: 500 மீனவர்கள் சாலை மறியல் - காசிமேட்டில் போக்குவரத்து பாதிப்பு

மீன் பிடிப்பதில் இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து, காசிமேட்டில் மீனவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை காசிமேட்டில் பல்வேறு மீனவ சங்கங்கள் உள்ளன. இதில், சென்னை விசைப் படகு மீனவர் நலச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அதிவேகம் மற்றும் அதிக நீளம் கொண்ட படகுகள் மூலம் மீன்பிடிக்கின்றனர். சென்னை - செங்கை சிங்காரவேலர் விசைப் படகு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்த வேகம் கொண்ட இயந்திரங்கள் பொருத்திய சிறிய ரக படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனர். பழவேற்காடு முதல் கோவளம் வரையிலான கடல் எல்லைப் பகுதியில் இவர்கள் மீன்பிடி தொழில் செய்கின்றனர்.

‘அண்மைக் கடல் பகுதியில் அதிவேகத் திறன் கொண்ட படகுகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது. இதனால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது’ என்று சிறிய ரக படகு உரிமையாளர்கள் நீண்ட காலமாக கூறிவருகின்றனர். இதை வலியுறுத்தும் வகையில் சென்னை சிங்காரவேலர் விசைப்படகு உரிமையாளர்கள் 3 மாதங்களுக்கு முன்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீன்வளத் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில், பதிவு செய்யப்படாத அதிவேக படகு ஒன்று 2 நாட்களுக்கு முன்பு அண்மைக் கடல் பகுதியில் மீன்பிடிக்க வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு, சிறியரக படகு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மீன்வளத் துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.

இதையடுத்து, மீன்வளத் துறை உதவி இயக்குநர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சென்னை - செங்கை சிங்காரவேலர் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம், சென்னை விசைப்படகு மீனவர் நலச் சங்கத்தைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது, சிங்காரவேலர் சங்க நிர்வாகிகளை சென்னை விசைப்படகு சங்க நிர்வாகிகள் சிலர் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதை கண்டித்து சிங்காரவேலர் விசைப்படகு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து போலீஸ் உயர் அதிகாரிகள் வந்தனர். மறியலில் ஈடுபட்ட மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, மறியல் போராட்டத்தைக் கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். மறியல் சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததால், காசிமேடு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x