Published : 28 Jan 2015 10:30 am

Updated : 28 Jan 2015 10:34 am

 

Published : 28 Jan 2015 10:30 AM
Last Updated : 28 Jan 2015 10:34 AM

1987: ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஆஸ்திரேலியா

1987

1987-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலிய மண்ணிலிருந்து புறப்பட்ட அணியே அதுவரை நடந்த உலகக் கோப்பை போட்டிகளுக்குத் தேர் வான அணிகளுள் மிக மோசமான அணி என்று அந்நாட்டுப் பத்திரிகைகளும், கிரிக் கெட் விமர்சகர்களும் வெளிப்படையா கவே விமர்சித்தனர். அனுபவமற்ற இளம் வீரர்களைக் கொண்டிருந்த அந்த அணி, கோப்பையை வெல்லும் என்று கனவிலும் பலர் நினைத்திருக்க மாட்டார்கள்.

அணிகளும் கணிப்புகளும்

1983 உலகக் கோப்பையை வென்ற பிறகு, 50 ஓவர் கிரிக்கெட்டில், இந்தியா ஒரு வலுவான அணியாக உருவாகியிருந்த தாலும், சொந்த மண்ணில் விளையாடுவதாலும், கோப்பையை வெல்வதற்கு இந்தியாவுக்கு அதிக வாய்ப்பிருப்பதாகக் கருதப்பட்டது. அதற்கடுத்தபடியாக இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கும், முந்தைய உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் இழந்ததை மீட்க, அதிரடி ஆட்டக்காரர் விவியன் ரிச்சர்ட்ஸ் தலைமையில் வந்திருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளதாகக் கணிக்கப்பட்டது.

ஆனால்,மேற்கிந்தியத் தீவுகள் அணி யில் சில பிரச்சினைகள் இருந்தன. மால்கம் மார்ஷல் நல்ல ஃபார்மில் இருந்தும் ஆட மறுத்துவிட்டார். ஜோயல் கார்னர் ஓய்வு பெற்றுவிட்டார். அதனால் கர்ட்னி வால்ஷ் போன்ற அனுபவமற்ற இளம் பவுலர்கள் இருந்ததால், பந்து வீச்சில் சற்று பலவீனமாகவே இருந்தது அந்த அணி.

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் வா, டீன் ஜோன்ஸ், டாம் மூடி போன்ற துடிப்பான வீரர்கள் முதல் முறையாக இடம்பிடித்திருந்தனர். பயிற்சியாளர் பாப் சிம்ஸன், கேப்டன் ஆலன் பார்டர் இணைந்து வகுத்த வியூகத்தினைப் பின்பற்றி, அந்த இளம் அணி, நெருக்கடி யான சமயங்களில் துணிச்சலாகச் செயல்பட்டு, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக ஆடினார்கள். நெருக்கடியான நேரங்களில் ஸ்டீவ் வா சிறப்பான பங்களிப்பினை அளித்தார். நெருக்கடியான நேரங்களில் அலட்டிக்கொள்ளாமல் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு ‘ஐஸ் மேன்’ என்ற செல்லப் பெயரும் கிடைத்தது.


இந்தியாவின் பயணம்

இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவிலும், பாகி்ஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம்பெற்றிருந்தன. இந்தியாவின் பிரிவில் ஆஸ்திரேலியாவைத் தவிர மற்ற இரு அணிகளின் பந்து வீச்சு பலவீனமானது என்பதால் பலமான பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்த இந்திய அணியின் அரையிறுதியை நோக்கிய பயணம் சற்று எளிதானதாகவே அமைந்துவிட்டது.

புள்ளிப் பட்டியலில் இந்தியா இரண்டாமிடத்தைப் பிடித்தால், அரை இறுதியில் வலுவான பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணான லாகூரில் எதிர்த்துக் களமிறங்க வேண்டும். அதைத் தவிர்க்க, நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற இந்தியா தீர்மானித்தது. வெற்றி இலக்கான 222-ஐ, 33.2 ஓவர்களிலேயே இந்தியா எட்டிப்பிடித்து, புள்ளிகள் கணக்கில் முதலிடத்தைப் பிடித்து, மும்பையில் இங்கிலாந்துடன் அரையிறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டது. இந்தப் போட்டியில் சுனில் கவாஸ்கர் ஒருநாள் போட்டிகளில் தன் ஒரே சதத்தை அடித்தார்.

ஆனால் அதுவரை நன்கு பரிமளித்துவந்த இந்திய பேட்டிங், அரை இறுதிப் போட்டியில் சொதப்பியது. இந்தியா தோற்றது.

அயராத ஆஸ்திரேலியா

மற்றொரு அரை இறுதியில், மெக்டெர் மாட்டின் (44 ரன்-5 விக்கெட்) அற்புதமான பந்து வீச்சினால் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிக்குத் தகுதி பெற்றது ஆஸ்திரேலியா. போட்டியைக் கூட்டாக நடத்தக் கடும் முயற்சி மேற்கொண்ட இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோதும் என்று இரு நாட்டவரும் ஆர்வமாய் எதிர்பார்த்திருக்க, மற்றொரு பரம வைரிகளான ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதும் போட்டியாக அமைந்துவிட்டது.

அரையிறுதியில் போட்டியின் கடைசி ஓவரில் 18 ரன்களை ஸ்டீவ் வா விளாசினார். 266 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்தது. அப்போதெல்லாம் அது பெரிய ஸ்கோர்.

நம்பிக்கையுடன் களம் கண்ட பாகிஸ்தானுக்கு மெக்டெர்மாட் வடிவில் ஆபத்து காத்திருந்தது. 38 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர், ஜாவித் மியாண்டட்டும் (70), இம்ரான் கானும் (58) நிலைத்து ஆடி சரிவிலிருந்து மீட்டனர். எனினும், மெக்டெர்மாட் மீண்டும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதால் தடுமாறி, 249 ரன்களை மட்டுமே எட்டி பாகிஸ்தான் தோற்றது. ஸ்டீவ் வாவின் கடைசி ஓவர் அதிரடி ஆஸ்திரலேயா வென்றதற்கான முக்கியக் காரணம் என கேப்டன் பார்டர் பின்னர் பாராட்டினார்.

இவ்வாறாக ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியை அடைந்தது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் பூன் (75) சிறப்பான அடித்தளம் அமைத்தார். அடுத்து வந்த வீரர்களின் பொறுப்பான ஆட்டம் காரணமாக 5 விக்கெட் இழப்புக்கு 252 ரன்களை எடுத்தது. அரையிறுதியில் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தியதால், ஈடன் கார்டனின் திரண்டிருந்த 95,000 ரசிகர்களும் ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவளித்தனர்.

அடுத்து ஆடிய இங்கிலாந்து தடுமாறினாலும், மைக் கேட்டிங்கின் அதிரடியால் வெற்றியை நெருங்கி வந்தது. ஆனால், தன்னை அலட்சியமாக எண்ணி கேட்டிங் அடித்து ஆட முற்படுவார் என கணித்த கேப்டன் பார்டர், அவரே பந்துவீச வந்தார். எதிர்பார்த்தபடியே முதல் பந்திலேயே ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ ஷாட் ஆடினார். பந்து கேட்டிங்கில் கையுறையில் பட்டு கீப்பரிடம் கேட்சாக மாறியது. அதுபோல் 45 பந்தில் 55 ரன் குவித்த லாம்பும் வீழ்ந்தார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டபோது, 10 ரன்களை மட்டும் எடுத்த இங்கிலாந்து, 7 ரன் வித்தியாசத்தில் கோப்பையை இழந்தது.

பிரம்மிக்க வைத்த ஸ்டீவ் வா

இந்தியாவுடனான முதல் லீக் போட்டியில், கடைசி ஓவரில் 19 ரன்களை அடித்தது மட்டுமின்றி, இந்தியா பேட் செய்தபோது கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் 4 ரன்களை மட்டுமே கொடுத்து, ஒரு ரன் வித்தியாசத்தில் ஆஸி வெற்றி பெறக் காரணமாய் அமைந்தார் வா.

நியூஸிலாந்து அணியுடனான ஆட்டத்தில், கடைசி ஒவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றிருந்தபோது, வெறும் 3 ரன்களை மட்டுமே கொடுத்தார். இங்கிலாந்தின் ஆலன் லாம்ப்பை இறுதிப் போட்டியில் 47-ஆவது ஓவரி்ல் அவுட்டாக்கி, ஆஸி வெற்றியை உறுதிப்படுத்தியவர் ஸ்டீவ் வா.

ஸ்டீவ் வா

புற்றுநோயை மறைத்து விளையாடியவர்

ஆஸ்திரேலிய அணி, கோப்பையை வென்று நாடு திரும்பிய பிறகு, அந்த அணியில் இடம்பெற்றிருந்த பந்து வீச்சாளர் சைமன் ஓ டோனலுக்கு, நிணநீர் புற்றுநோய் இருக்கும் தகவல் வெளியானது. இது ஆஸ்திரேலிய அணியினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது, உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு முன்பாகவே, சைமனுக்குத் தெரியும் என்பதையும், அவர் அதை மறைத்துவிட்டுத் துணிவுடன் விளையாடியதும் தெரியவந்ததும் ஆஸ்திரேலிய அணியினர் பேரதிர்ச்சியடைந்தனர்.

சைமன் பிறகு புற்றுநோயிலிருந்து மீண்டார். இது உலகக் கோப்பை வெற்றியை மேலும் இனிமையாக்கியது என்று ஒரு பேட்டியி்ல ஆலன் பார்டர் கூறியிருந்தார். தற்போது ஆரோக்கியமாக இருக்கும் சைமன் ஒ டோனல், தன் நாட்டில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பையைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்.

சைமன் ஒ டோனல்

இந்திய உலகக் கோப்பைசாதனைஇந்தியாஆஸ்திரேலியாவரலாறுகிரிக்கெட்

You May Like

More From This Category

More From this Author