Published : 22 Jan 2015 10:13 am

Updated : 22 Jan 2015 10:14 am

 

Published : 22 Jan 2015 10:13 AM
Last Updated : 22 Jan 2015 10:14 AM

உலக மசாலா - தத்ரூப சிலைகள்

உலக ஜப்பானிய கலைஞர் கஸுஹிரோ சுஜியின் சிற்பங்கள் நிஜ மனிதர்களை அப்படியே ஒத்திருக்கின்றன. இதுவரை இவர் அளவுக்கு தத்ரூபமான சிற்பங்களை உருவாக்கியவர்கள் யாருமில்லை என்கிறார்கள். கியோடோவில் பிறந்த சுஜி ஓவியங்கள், புகைப்படங்கள், தொழில்நுட்பம் போன்றவற்றில் அதிக ஆர்வத்தைச் செலுத்தி வந்தார்.

விதவிதமான பொருள்களைக் கொண்டு, விதவிதமான நுட்பங்களைப் பயன்படுத்தி மனித உருவங்களைச் செய்து பார்த்துக்கொண்டே இருந்தார். சிற்பக் கலையையும் மேக்அப் கலையையும் இணைத்துப் புதுமையான 3டி சிற்பங்களை உருவாக்கினார். 1976-ம் ஆண்டு வெளியான ஒரு தொலைக்காட்சி தொடரைப் பார்த்தவருக்கு ஆபிரகாம் லிங்கன் மீது ஆர்வம் வந்துவிட்டது. அவரைப் போல ஒரு 3டி சிற்பம் உருவாக்க முயன்றார்.

அப்பொழுது திரைப்படங்களில் ஸ்பெஷல் மேக் அப் ஆர்டிஸ்டாக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து கிடைத்த வருமானத்தைக்கொண்டு, பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, 3டி சிற்பத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இறுதியில் அவர் எதிர்பார்த்த, யாருமே எதிர்பார்க்காத அற்புதமான சிற்பம் உருவாகிவிட்டது!

அடடா! லிங்கனை நேரில் பார்ப்பது போலவே இருக்கே!

டாமியன் ப்ரெஸ்டன் பூத் தான் உலகிலேயே மிகவும் புத்திசாலியான, பணக்காரரான பிச்சைக்காரர். 37 வயதான பூத் ஒவ்வொரு வாரமும் லண்டனின் சில பகுதிகளுக்குச் சென்று பிச்சை எடுக்கிறார். அவர் பிச்சை கேட்பது சாதாரண மக்களிடம் இல்லை. வசதியான சுற்றுலாப் பயணிகளிடம் சென்று, சாதுரியமாகப் பேசி நிதி கேட்கிறார்.

பணம் இல்லை என்று சொன்னால், உடனே கிரெடிட் கார்ட் பயன்படுத்திக்கொள்ள, கையிலேயே மெஷின் வைத்திருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தத் தொழிலைச் செய்து வரும் பூத், தான் பெறும் நிதிக்கு ரசீதும் கொடுத்துவிடுகிறார். மாத வாடகையில் வசதியான குடியிருப்பில் வாழ்கிறார். ஆண்டுக்கு நான்கு, ஐந்து முறை வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்கிறார்.


பணக்காரர்கள் கூடும் இடங்களுக்குச் சென்று, கேமராக்களுக்கு முன்பு நிதி கேட்பதால், தவிர்க்க இயலாமல் எல்லோரும் பணம் கொடுத்துவிடுகிறார்கள். பல்வேறு மொழிகளைக் கொஞ்சம் கற்று வைத்திருப்பதால், யாரிடமும் எளிதில் பேசிவிடுகிறார் பூத். பிரிட்டனில் பிச்சை எடுப்பது சட்டப்படிக் குற்றம் என்பதால், நல்ல வேலைக்காகக் காத்திருப்பதாகவும் அதுவரை சின்னச் சின்ன வேலைகள் செய்து வருவதாகவும் சொல்லி, சமாளிக்கிறார். முன்னாள் நண்பர்கள் மூலம்தான் பூத் பற்றிய செய்தி வெளியே பரவியிருக்கிறது.

ஏமாத்துறவங்க ஒருநாள் சிக்கத்தான் செய்வாங்க…

ஜஸ்டின் ஜெட்லிகா உலகிலேயே அதிக முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட மனிதர் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இதுவரை 190 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு, நூறு சதவிகித பிளாஸ்டிக் மனிதராக மாறியிருக்கிறார் ஜஸ்டின்.

மிகவும் ஆபத்து நிறைந்தது தன்னுடைய பிளாஸ்டிக் சர்ஜரி முயற்சி என்று சொல்லும் ஜஸ்டின், இதுவரை 1 கோடியே 35 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார். பிளாஸ்டிக் சர்ஜரி மீது இருக்கும் ஆர்வம் இன்னும் கூட குறையவில்லை என்கிறார் அவர்.

ம்… பிளாஸ்டிக் சர்ஜரி அடிமை போலிருக்கு…

ட்ரெக் நாஷ் தான்யா வால்ஷ் தம்பதி பிரிட்டனில் வசிக்கிறார்கள். அவர்களுடைய ஐந்து வயது மகன் அலெக்ஸ், பள்ளியில் இருந்து வந்தபோது ஒரு கடிதத்தைக் கையில் வைத்திருந்தான். அது அலெக்ஸ் நண்பனின் அம்மா ஜுலியா லாரன்ஸ் எழுதிய கடிதம். தன்னுடைய மகனின் பிறந்தநாள் விழாவுக்கு அலெக்ஸ் வராததால், அவனுக்காக ஏற்பாடு செய்திருந்த விஷயங்கள் வீணாகிவிட்டதாகவும் நஷ்ட ஈடாக 1500 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

ட்ரெக்கும் தான்யாவும் அதிர்ந்து போனார்கள். முறையாக அழைப்பு கூட பெறப்படாத ஒரு விழாவுக்குச் செல்லவில்லை என்பதற்காக நஷ்ட ஈடு வழங்க இயலாது என்று அலெக்ஸின் பெற்றோர் கூறுகின்றனர். இணையதளங்களில் இரு தரப்பும் மாறி, மாறி குற்றம்சாட்டி வருகின்றன.

இப்படியெல்லாம் கூட நடக்குமா?

உலக மசாலாஉலகம்

You May Like

More From This Category

More From this Author