Published : 30 Oct 2014 01:24 PM
Last Updated : 30 Oct 2014 01:24 PM

கணக்கில் வராத ரூ.1 லட்சம் கோடி...

வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணம் தொடர்பான சர்ச்சைகள் நீடித்துவரும் நிலையில், கணக்கில் காட்டப்படாத ரூ. 90 ஆயிரத்து 390 கோடியை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

கருப்பு பணம் பதுக்கியது தொடர்பான வழக்கில், வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் அனைவருடைய பெயர்களையும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், சமீபத்திய அறிக்கை ஒன்றில், 2013 - 2014-ம் நிதியாண்டில், கணக்கில் காட்டப்படாத 90 ஆயிரத்து 390 கோடி ரூபாயை வருமான வரித் துறையினர் கண்டுபிடித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல இடங்களில் நடந்த சோதனைகளில் ரூ.10 ஆயிரத்து 791 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த 2012 2013-ம் நிதியாண்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனைகளில் கண்டுபிடித்ததைவிட 367 சதவீதம் அதிகமாக 2013 2014-ம் நிதியாண்டில் கணக்கில் காட்டப்படாத பணத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து, சர்வதேச நிதி ஒழுங்கமைப்பு (ஜிஎஃப்ஐ) என்ற தன்னார்வ ஆய்வு நிறுவனம், கடந்த ஆண்டு டிசம்பரில் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில், சட்டவிரோதமாக நிதி புழங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான நிதி என்பது வருமானவரி ஏய்ப்பு தவிர குற்றச் செயல்கள், ஊழல் மற்றும் இதர சட்டவிரோதமான நடவடிக்கைகளால் கிடைக்கும் பணமாகும்.

இந்நிலையில், வருவாய்த் துறை அதிகாரிகள், அமலாக்கத் துறை (ஈ.டி), சிபிடிடி போன்ற புலனாய்வு அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, நிதிப் புலனாய்வுப் பிரிவு (இந்தியா) அவ்வப்போது, சட்டவிரோதப் பணப் புழக்கத்தில் ஈடுபடுபவர்களின் தகவல்களை அளித்து வருகிறது. அந்தத் தகவல்களின் அடிப்படையில் சட்டவிரோதப் பண பரிவர்த்தனை தடுப்பு சட்டம் (பிஎம்எல்ஏ), அந்நிய செலாவணி சட்டம் (ஃபெமா) ஆகிய இரு சட்டங்கள் மூலம் வழக்குகளைப் பதிவு செய்து, பல பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பிஎம்எல்ஏ சட்டத்தின்படி, அமலாக்கத் துறை இதுவரை 1,437 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. 22 பேர் கைது செய்யப்பட்டு, ரூ. 1214 கோடி மதிப்புள்ள 131 சொத்துகளை முடக்குவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பிஎம்எல்ஏ சட்டம், 2005 ஜூலை 1 முதல் அமலில் உள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டு ஜூன் 1 முதல் அமலில் இருக்கும் அந்நிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் (ஃபெமா) 23 ஆயிரத்து 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் ரூ. 1,678 கோடிக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x