Published : 10 Feb 2014 00:00 am

Updated : 10 Feb 2014 14:45 pm

 

Published : 10 Feb 2014 12:00 AM
Last Updated : 10 Feb 2014 02:45 PM

பா.ஜ.க-வை விஜயகாந்த் புறக்கணிக்க வேண்டும்!- தொல். திருமாவளவன் நேர்காணல்

மற்ற கட்சித் தலைவர்கள் எல்லாம் இன்னும் கூட்டணிபற்றிய குழப்பத்திலிருந்து விடுபடாமல் கையைப் பிசைந்துகொண்டிருக்கும் சூழலில், அதிரடியாகக் களத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அவருடன் பேசியதிலிருந்து…

வருகிற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு மற்றும் தேர்தல் வியூகம் என்ன?

இந்தத் தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற கருத்தை விடுதலைச் சிறுத்தைகள் முன்மொழிகிறது. குறிப்பாக, சாதி, மதவெறியர்களை மக்களிடத்தில் அடையாளம் காட்ட வேண்டும்; அம்பலப்படுத்த வேண்டும்; தனிமைப்படுத்த வேண்டும். தேர்தல் களத்தில் அவர்கள் அதிகார வலிமை பெற்றுவிடக் கூடாது. அதன் அடிப்படையில் எங்கள் தேர்தல் வியூகம் அமையும்.

தி.மு.க-வுடன் தொடர்ந்து உறுதியான நட்புடன் கூட்டணியில் இருக்கிறீர்கள். உங்களுக்குள் முரண்பாடுகளே எழவில்லையா? அதுபோன்ற சமயங்களில் எவ்வாறு சமரசம் செய்துகொள்கிறீர்கள்?

தி.மு.க-வுடன் கருத்துரீதியாக சில முரண்பாடுகள் ஏற்பட்டன. குறிப்பாக, 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸுடன் கூட்டணியில் தொடர்வதாக எடுத்த முடிவு எங்களுக்குள் இடைவெளியை, முரண்பாட்டை ஏற்படுத்தியது. ஈழத் தமிழர் பிரச்சினையில் எங்களுக்குள் ஓர் ஆரோக்கியமான உறவு இல்லை; முரண்பாடு ஏற்பட்டது உண்மையே.

ஆனாலும், எங்களுடைய உறவு பாதிக்கப்படவில்லை. ஏனெனில், எங்களது தனித்தன்மை பாதிக்கப்படும் வகையில் தி.மு.க. ஒருபோதும் நடந்துகொண்டது இல்லை. நாங்கள் வெளிப்படையாக விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் ஆதரித்தோம். ஆனால், தி.மு.க. ஒருபோதும் ‘இது சரியில்லை; இது கூட்டணி தர்மத்துக்கு விரோதமானது’ என்று சொன்னதில்லை. தி.மு.க-வின் அந்த நாகரிகமான அணுகுமுறை மற்றும் ஜனநாயகம் நிறைந்த பெருந்தன்மையே எங்கள் வலுவான நட்புக்குக் காரணம்.

டாக்டர் ராமதாஸுக்கு அம்பேத்கர் சுடர் விருது கொடுத்தீர்கள். ஆனால், இன்று அந்தக் கட்சி தலித் மக்கள் விஷயத்தில் எடுத்துள்ள நிலைப்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பா.ம.க-வின் நிலைப்பாட்டால் அந்தக் கட்சிக்குத்தான் பாதிப்பு. தேர்தலுக்குத் தேர்தல் அணி தாவுவதையும், தோழமைக் கட்சிகளின் முதுகில் குத்துவதையும் ராஜதந்திரம் என்று அந்தக் கட்சி நினைக்கிறது. தி.மு.க.,

அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை உருட்டி மிரட்டித் தாங்கள் கேட்கிற அளவில் தொகுதிகளையும் ‘பொருளாதார’த்தையும் பெற முடியும் என்கிற அகந்தை அந்தக் கட்சிக்கு ஏற்பட்டது. ஆனால், வலுவான கூட்டணிகளில் இடம்பெற்றும் 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2011 சட்டசபைத் தேர்தலிலும் அந்தக் கட்சி படுதோல்வி அடைந்தது. அந்தக் கட்சியின் வாக்குவங்கி முற்றிலுமாகச் சரிந்ததே இதற்குக் காரணம்.

பா.ம.க. இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், போக்கிடம் இல்லாமல் விரக்தியின், வெறுப்பின் உச்சத்தில் ராமதாஸ் சாதி, மதவெறி அரசியலைக் கையில் எடுத்துள்ளார். சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதுபற்றி அவருக்குக் கவலையில்லை. தனது மகன் மந்திரி ஆக வேண்டும் என்பதுதான் அவரது குறிக்கோள்.

ஒருவேளை, வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க-வும் இணைய நேர்ந்தால் உங்களது நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைய வாய்ப்பே இல்லை. அது வெறும் யூகம். ஆனால், ஒன்று மட்டும் உறுதி. இனி, எக்காலமும் எந்தச் சூழலிலும் பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்டாயம் இடம்பெறாது.

கூட்டணிகுறித்து விஜயகாந்த் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

நண்பர் விஜயகாந்தை நேரில் சந்தித்துப் பேசியபோதும் சாதி, மத சக்திகளோடு அவர் சேர்ந்துவிடக் கூடாது என்று வலியுறுத்தினேன். அவர் கூட்டணிகுறித்து மாநாட்டில் அறிவிப்பேன் என்றார். ஆனால், அவர் மாநாட்டிலும் தெளிவாக எதையும் அறிவிக்கவில்லை. இந்த நிலையிலும் அவருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம். விஜயகாந்த் வகுப்புவாத சக்திகளோடு கைகோத்துத் தமிழகத்தில் பா.ஜ.க. வேர்பிடிக்கத் துணைநிற்கக் கூடாது. ஊழலை எதிர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் சாதி, மத வெறியை ஒழிப்பது. அதற்கு ஒரு வாய்ப்பாக இந்த நாடாளுமன்றத் தேர்தல் அமைகிறது. எனவே, விஜயகாந்த் பா.ஜ.க., பா.ம.க. போன்ற பிற்போக்குச் சக்திகளைப் புறக்கணிக்கும் வகையில் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்று சொல்லப்படுவதுபற்றி உங்கள் கருத்து என்ன?

மோடி அலை என்பது ஒரு மாயை. அது ஒரு கற்பனை. அது தமிழகத்தில் எடுபடாது. இந்தியாவிலும்கூட பா.ஜ.க. வலுவாக உள்ள மாநிலங்களில் மட்டுமே அந்தக் கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது. மற்ற மாநிலங்களில் செல்வாக்கும் இல்லை, அலையும் இல்லை. நிதீஷ் குமார் ஆளும் பிஹார், அகிலேஷ் ஆளும் உத்தரப் பிரதேசம் மற்றும் பல்வேறு வட மாநிலங்களில் வெவ்வேறு கட்சிகள் செல்வாக்குப் பெற்றுள்ளன. அங்கெல்லாம் மோடியின் தாக்கம் இல்லை. உண்மையில் மோடி அலை இருந்திருந்தால் டெல்லியில் அவர்கள் தனிப் பெரும்பான்மை பெற்றிருக்க வேண்டுமே.

தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான மூன்றாவது அணி உருவாக்கப்படுவதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

பா.ஜ.க-வுடன் கூட்டணி சேரும் கட்சிகள் பெரும்பாலும் முட்டுச்சந்தில் போய் முட்டும் கட்சிகளே. அவர்கள் இடது புறமும் வண்டியைத் திருப்ப முடியாது; வலது புறமும் திருப்ப முடியாது. அப்படியே வண்டியைத் திருப்பிக்கொண்டு பின்னாலும் செல்ல முடியாது. அந்தக் கட்சிகளுக்கு வேறு வழியில்லாமல் பா.ஜ.க-வுடன் செல்கின்றன என்பதே உண்மை. அந்த அணி வலிமையான அணியும் அல்ல. எழுத்தாளர் தமிழருவி மணியன் அந்த அணியை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுகிறார்.

எந்த ஓர் அரசியல் கட்சியையும் சாராத அவர், காங்கிரஸ் எதிர்ப்பு என்கிற ஒற்றைக் காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு இந்த முயற்சியில் ஈடுபடுவது முரண்பாடாக இருக்கிறது. காந்திய மக்கள் இயக்கம் என்கிற பெயரில் செயல்படும் அவர், காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவை மாவீரனாகக் கருதும் பா.ஜ.க-வுடன் சில கட்சிகளைத் தேடிப் பிடித்துக் கூட்டணி அமைக்க முயற்சிப்பதால், அவர் காந்தியவாதியா? கோட்சேவாதியா? என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. மோடியை அவர் ஆதரிக்கக் காரணம், உண்மையில் காங்கிரஸ் எதிர்ப்புதானா? அல்லது அவர் ஆழ்மனதில் ஊறியிருக்கும் இந்துத்துவா உணர்வா? அவர்தான் சொல்ல வேண்டும்.

வரும் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும்?

கூட்டணியைப் பொறுத்துதான் முடிவுகளும் அமையும். அகில இந்திய அளவில் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு அணிகளுமே ஒன்றை ஒன்று வெல்லும் அளவுக்கு வலிமை பெறவில்லை. எனவே, தேர்தல் முடிவுகளுக்குப் பின்னால் உருவாகும் கூட்டணிதான் வெற்றியை நிர்ணயிக்கும் என்று கருதுகிறேன்.

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. என மூன்று அணிகள் போட்டியிடுகின்றன.

அ.தி.மு.க-விடம் ஆளும் கட்சி என்கிற தகுதியைத் தவிர, அது ஒரு வலிமையான அணி என்று சொல்ல முடியாது. அங்கு இரு கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளனர். அங்கிருந்த புதிய தமிழகம் கட்சியும் மனிதநேய மக்கள் கட்சியும் வெளியேறிவிட்டன. அதனால், அந்த அணியின் வாக்குவங்கி சரிந்துவிட்டது. அதேசமயம், தி.மு.க. அணியில் ஏற்கெனவே இருந்த கட்சிகளுடன் புதிய தமிழகமும், ம.ம.க-வும் இணைந்துள்ளன. அதனால், அதன் வாக்குவங்கி அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தே.மு.தி.க., தி.மு.க. அணிக்கு வரப்போகிறதா? அல்லது பா.ஜ.க. அணிக்குச் செல்லப்போகிறதா என்பதைப் பொறுத்தும், காங்கிரஸ் எடுக்கும் நிலைப்பாட்டைப் பொறுத்தும்தான் தேர்தல் முடிவுகள் அமையும். அதேசமயம், பா.ஜ.க. அணியால் தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

நீண்ட காலமாக தலித் மக்களுக்கான அரசியலில் ஈடுபட்டுள்ளீர்கள்? அவர்களுக்காகச் செய்தது என்ன?

தலித் மக்களை அமைப்பாக்கியதே ஒரு சாதனைதான். காலம்காலமாகச் சிதறிக்கிடந்த சமூகத்தை அரசியல்படுத்தி, அமைப்பாக்குவது மிகக் கடினமான பணி. அதனைத் தோள்மீது சுமந்து விடுதலைச் சிறுத்தைகள் செய்திருக்கிறது. தலித் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறோம். அதிகாரம், அதிகாரப் பகிர்வு, சமூகநீதி குறித்த புரிதலை உருவாக்கியிருக்கிறோம். சாதி, மத வெறி சக்திகளால் தலித் மக்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் அவர்களுக்குப் பக்கபலமாக நிற்கிறோம். பண்பாடு, அரசியல், சமூகம் சார்ந்த உரிமைகளை வென்றெடுக்க அவர்களுக்காகப் போராடுகிறோம். தலித் மக்களுக்கு சமூக அளவில் மிகப் பெரிய எழுச்சியை விடுதலைச் சிறுத்தைகள் வழங்கியிருக்கிறது. இதுவே எங்களது சாதனை.

ராகுல் காந்தியுடனான உங்களது சந்திப்பு தற்போதைய அரசியல் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அவர் உங்களிடம் என்ன பேசினார்?

மொத்தம் 50 நிமிடங்கள் எங்களது உரையாடல் நடந்தது. அதில் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பொதுவான தமிழக அரசியல்குறித்துப் பேசினோம். 45 நிமிடங்களில் அவர் விடுதலைச் சிறுத்தைகள் என்கிற பெயரை எப்படி, ஏன் வைத்தீர்கள் என்று கேட்டார். ஆப்பிரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட கருஞ்சிறுத்தைகள் அமைப்புபற்றியும் அதன் அடிப்படையில் இங்கு விடுதலைச் சிறுத்தைகள் உருவானதுபற்றியும் விளக்கினேன். மேலும் அவரிடம், நாம் இந்துத்துவாவை எதிர்க்க வேண்டியது ஏன் என்பதுகுறித்தும் பெரியார், அம்பேத்கர் கருத்துகள் குறித்தும் விரிவாகப் பேசினேன்.

மேலும், நாடு முழுவதும் அவர்கள் அடிப்படையான காங்கிரஸ்-தலித் ஓட்டுகளைப் பிராந்தியக் கட்சிகளிடம் இழந்து வருவது குறித்தும் பேசினேன். ஜெனீவாவில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். ஜனார்தனன் திரிவேதி சாதிரீதியாக இடஒதுக்கீடு கூடாது என்று சொன்ன கருத்தையும் கண்டித்தேன். இதன் பலனாக மறுநாளே அந்தக் கருத்தை காங்கிரஸ் வாபஸ் பெற்றது.

தி.மு.க. கூட்டணிக்காகத்தான் நீங்கள் ராகுலைச் சந்தித்ததாகத் தகவல்கள் கிளம்பியுள்ளதே?

அவையெல்லாம் முழுக்க முழுக்க வதந்திதான்.தோழமைக் கட்சிகளைக் கூட்டணித் தூதுக்கு அனுப்புவது கூட்டணி அரசியல் தர்மம் ஆகாது. அப்படிச் செய்தால் அது அரசியல் அனுபவம் இல்லாதவர்களின் வேலை. அரசியல் மேதையான தி.மு.க. தலைவர் கருணாநிதி அப்படிச் செய்வாரா? அவ்வளவு ஏன்? ராகுலிடம் பேச தி.மு.க-வில் ஆட்களா இல்லை.

டி.எல்.சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@kslmedia.in

தி.மு.ககாங்கிரஸ்ராகுல் காந்திதொல். திருமாவளவன்நேர்காணல்அரசியல் சூழல்கருணநிதி

You May Like

More From This Category

More From this Author