Last Updated : 25 Aug, 2017 11:14 AM

 

Published : 25 Aug 2017 11:14 AM
Last Updated : 25 Aug 2017 11:14 AM

நான் பாலசந்தரின் மாணவன்! - ராமகிருஷ்ணன் பேட்டி

‘கு

ங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ராமகிருஷ்ணன். அதன் பிறகு ‘கோரிப்பாளையம்’, ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படங்களில் இயல்பான நடிப்புக்காக கவனம்பெற்றவர். விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஒரு கனவு போல’ படத்தின் மூலம் தன் இருப்பை உறுதிசெய்திருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து…

உதவி இயக்குநராகப் பயணத்தைத் தொடங்கி, கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிவிட்டீர்கள்.. இந்தப் பாதை மாறிய பயணம் எப்படி இருக்கிறது?

தமிழ் சினிமா என்கிற கடலில் வீசும் சூறைக்காற்றில் பயணிக்கும் சிறு தோணி போன்றவன் நான். காற்றின் இழுப்புக்கு ஏற்ப நகர்ந்தாலும் நிறையக் கற்றுக்கொண்டே என் பயணத்தைத் தொடர்ந்து வருகிறேன். இதுவும் ரசனையானதாகவே இருக்கிறது.

சினிமா பாடகனாகும் விருப்பத்துடன் சென்னை வந்தவன் நான். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல,என்பதை உணர்ந்தேன். சரி பாடகர்களை யார் தேர்வு செய்கிறார்கள் என்று பார்த்தபோது இசையமைப்பாளரைவிட இயக்குநருக்கு அதிக அதிகாரம் இருப்பது தெரிந்தது. அந்த நிமிடத்தில் நாம் இனி இயக்குநர் என்று முடிவு செய்துகொண்டு அதற்காக என்னைத் தயாரிக்கத் தொடங்கினேன். பாலகுமாரன் தொடங்கி எஸ்.ராமகிருஷ்ணன் வரை வாசித்தேன். இலக்கியக் கூட்டங்களுக்குப் போகாதது மட்டும்தான் பாக்கி. இந்த நேரத்தில் நடிகர் தாமு ஒரு அண்ணனைப் போல என்னிடம் பரிவு காட்டினார். அவர்தான் என்னை பாலசந்தர் சாரிடம் அழைத்துச்சென்று உதவி இயக்குநராகச் சேர்த்துவிட்டார். இயக்குநர் சிகரம் அப்போது மிகச் சிறந்த தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிக்கொண்டிருந்தார். அவரிடம் ‘ஜன்னல்’, ‘பிரேமி’, ‘காசளவு நேசம்’ ஆகிய மூன்று தொடர்களில் பணிபுரிந்தேன். அலுவலகத்தில் நுழையும்போதே “டேய் ராமகிருஷ்ணா..” என்று என் பெயரை அழைத்துக்கொண்டுதான் வருவார். “ சின்ன ரோல்தான்யா… கோவிச்சுக்காம பண்ணு” என்று கூறி ‘காசளவு நேசம்’ தொடரில் என்னை கொரியர் பாயாக நடிக்கவைத்தார். அதுவே பெரிய கொடுப்பினை. அவர் இயக்கவிருந்த அடுத்த தொடரில் எனக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கவிருந்த நிலையில், நான் சினிமா இயக்கப்போகிறேன் என்று சொல்லி ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன்.

பாலசந்தரின் உதவியாளர் என்ற அடையாளம் உங்களுக்கு உதவியதா?

இன்றுவரை எனக்கு எல்லா இடங்களிலும் மிகப் பெரிய துருப்புச் சீட்டாக இருந்துவருகிறது. சேரனிடம் என்னை உதவி இயக்குநராகச் சேர்த்துவிட்டவர் என் தந்தைக்கு இணையாக நான் மதித்துவரும் நடிகர் விஜயகுமார் ஐயா. சேரனிடம் ‘பாண்டவர் பூமி’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘தவமாய்த் தவமிருந்து’ தொடங்கி ‘ஆட்டோகிராஃப்’ வரை பணிபுரிந்தேன். பிறகு சேரன் நடிப்பதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்ததால் இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லியிடம் ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தில் பணிபுரிந்தேன். நடிகர்களுக்கு நான் வசனம் கற்றுக்கொடுக்கும் விதத்தைப் பார்த்து ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தில் கதாநாயகனின் நண்பனாக எனக்கு முழுநீள கதாபாத்திரம் கொடுத்தார். அதன் பிறகு படம் இயக்கும் வேலையில் இறங்கியபோதுதான், கதை சொல்லச் சென்ற என்னை ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தில் எஸ்.பி.பி.சரண் என்னைக் கதாநாயகன் ஆக்கினார். அவரைப் போல ரசனையான தயாரிப்பாளரைப் பார்ப்பது அரிது. இவன் சரியாக இருப்பான் என்று மீது அன்புகாட்டி தேர்வு செய்த அவரது பெயரையும் அந்தப் படத்தின் இயக்குநர் ராஜ்மோகன் என் மீது வைத்த நம்பிக்கையையும் படம் காப்பாற்றிவிட்டது. அடுத்த வந்த ‘கோரிப்பாளையம்’ படமும் எனக்கு நல்ல பெயர் பெற்றுக்கொடுத்தது. தற்போது எந்த அவசரமும் இல்லாமல், எங்கும் முண்டியடித்து முட்டி மோதாமல் நிதானமாக என்னைக் கவரும் கதைகளில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அதனால் சிக்கல் இல்லாமல் ஒரே சீராகச் சென்றுகொண்டிருக்கிறது எனது சினிமா பயணம்.

ஒரு கனவு போல’ படத்தைப் பற்றிக் கூறுங்கள்?

இது நட்பைக் கவுரப்படுத்தும் கமர்ஷியல் காவியம். குடும்ப உறவுக்குள் நட்பு குறுக்கிடும்போது அங்கே எல்லாமுமாக இருப்பது நம்பிக்கைதான் என்பதை ஒரு உளவியல் சினிமாவாகக் கொடுத்திருக்கிறார் அண்ணன் விஜய்சங்கர். பல முன்னணி இயக்குநர்களின் இணை இயக்குநராகப் பணியாற்றிய பரந்த அனுபவம் கொண்ட மிகச் சிறந்த கதை சொல்லி. மிகச் சிறந்த வசனகர்த்தா, உணர்வுகளை நுட்பமாகக் காட்சியாக்குவதில் தெளிவான பார்வை கொண்டவர். இந்தப் படத்தின் நாயகன் என்றால் படத்தை இயக்கியிருக்கும் வி.சி. விஜய்சங்கர் அண்ணன்தான். அதேபோல் இசையமைப்பாளர் இ.எஸ்.ராம், பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் அழகப்பன் ஆகியவர்களும் படத்தின் ஹீரோக்கள்தான். சௌந்தர்ராஜாவும் நானும் நண்பர்களாக நடித்திருக்கிறோம். புதுமுகம் அமலா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

தற்போது நடித்துவரும் படங்கள்?

ராமகிருஷ்ணன் என்றாலே கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் வருவார் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதை, ‘டீக்கடை பெஞ்சு’, ‘களம் புதிது’ உட்பட நான் நடித்துவரும் அடுத்த மூன்று படங்கள் மாற்றியமைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்தப் படங்கள் தவிர நான் நடிக்காமல் இயக்கத்தை மட்டும் கவனிக்கும் படத்துக்கான திரைக்கதை வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x