Last Updated : 14 Oct, 2013 01:35 PM

 

Published : 14 Oct 2013 01:35 PM
Last Updated : 14 Oct 2013 01:35 PM

சர்வதேச விருது பெறும் மாணவி

பள்ளிக்கூடம், படிப்பு, தொலைக்காட்சி, கதைப் புத்தகம், சினிமா, ஹோட்டல், பர்த் டே பார்ட்டி, ஃபேஸ்புக்...இந்தியாவில் பதின் பருவத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவ மாணவிகளின் காலம் இப்படித்தான் கழிகிறது. டீன் ஏஜ் பருவத்தில் ஒவ்வொருவரும் தத்தமது பின்னணிக்கு ஏற்ப வாழ்க்கையை முடிந்தவரையிலும் மகிழ்ச்சியாகக் கழிக்கவே விரும்புகிறார்கள். ஆனால் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரஸியா சுல்தான் விதிவிலக்கு. இவருக்கும் கல்வி முக்கியம்தான். ஆனால் தன்னுடைய கல்வியைப் போலவே பிறருடைய கல்வியைப் பற்றியும் கவலைப்படுகிறார் பிளஸ் டூ படிக்கும் இந்தப் பெண். கவலைப்படுவதோடு நின்றுவிடாமல் அதற்காக இவர் செய்துவரும் பணிகள் இவருக்கு மிகப் பெரிய விருதைப் பெற்றுத்தரும் அளவுக்குச் சிறப்பாக இருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

குழந்தைகள் தம் அடிப்படை உரிமையான கல்வியைக்கூடப் பெற முடியாத நிலைமை நம் நாட்டில் இன்னும் உள்ளது. இதற்காகப் போராடிவருகிறார் 15 வயது ரஸியா சுல்தான். இவரது சேவையைப் பாராட்டிய ஐக்கிய நாடுகள் சபை, இவரைத் தனது முதல் மலாலா விருதுக்காகத் தேர்ந்தெடுத்துள்ளது. இது இந்த அக்டோபர் மாதம் தில்லியில் அளிக்கப்பட்ட உள்ளது.

செயற்கரிய செயல்களைச் செய்த மலாலாவின் பெயரால் வழங்கப்படும் மலாலா விருதுக்காக (விவரத்திற்குக் காண்க: பெட்டிச் செய்தி) அறிவிக்கப்பட்டுள்ள ஏழு குழந்தைகளில் இரண்டு பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். பெங்களூருவைச் சேர்ந்த பார்வையற்ற மாணவன் அஸ்வின் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ரஸியா சுல்தான். மிகவும் பின் தங்கிய பகுதிகளில் வாழ்பவர்களும் முயன்றால் சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு பெரிய உதாரணம் ரஸியாவின் வாழ்க்கை.

உ.பி.யின் மேற்குப் பகுதியில் உள்ள மீரட் மாவட்டத்தின் பல கிராமங்கள் கால்பந்துகள் மற்றும் நைலான் கயிறுகள் தயாரிப்பிற்கு பெயர் போனவை. காரணம், அங்குதான் இந்தப் பணிக்காகக் குறைந்த கூலியில் குழந்தைத் தொழிலாளர்கள் எளிதாகக் கிடைப்பார்கள். இதனால் அவர்கள் பள்ளிக்குச் செல்லவும் நேரமிருக்காது. கல்வி இல்லாமலே இவர்கள் வளர்ந்துவருவது பல வருடங்களாக நடந்துவரும் வாடிக்கையான ஒரு வருத்தம்.

இதுபோன்ற கிராமங்களில் ஒன்றான நக்லா கும்பாவில் வாழும் பர்மான்-ஜாஹிதா தம்பதிகளுக்கு அக்டோபர் 10, 1998இல் பிறந்தவர் ரஸியா சுல்தான். வீட்டில் மரியம் எனச் செல்லமாக அழைக்கப்படுபவரின் தந்தை வியாபாரத்தில் நஷ்டமாகி செங்கல் சூளையில் கூலி வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அந்த நிலையிலும் தனது பெண்ணை எப்படியும் படிக்க வைக்க வேண்டும் என விரும்பியவர் நான்கு வயதில் அருகிலிருந்த ஒரு அரசுப் பள்ளியில் சேர்த்தார். ஆனால், மாலையில் வீட்டிற்கு வந்த பின் ரஸியாவிற்குக் கால்பந்து தோல்களை வெட்ட வேண்டிய கட்டாயம். இப்படியே இரண்டையும் தொடர்ந்தவருக்கு ஐந்தாம் வகுப்புப் பயிலும்போது, அந்தப் பகுதியில் நடந்த குழந்தைத் தொழிலாளர்கள் காக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அன்று முதல் குழந்தைப் பருவத்தில் கல்வி பயிலாமல் பணிக்கு செல்லும் சிறுவர், சிறுமிகளின் நிலையை உணரத் துவங்கி விட்டார் ரஸியா.

“இதற்குத் தூண்டுகோலாக இருந்து இன்றுவரை எனக்கு உதவி வருபவர் ‘பச்பன் பச்சாவ் அந்தோலன்’ எனும் குழந்தைகள் நல அமைப்பின் சமூக சேவகர் ஷேர்கான் . இவர், குழந்தைத் தொழிலாளர்களை மீட்க வேண்டி இந்தப் பகுதியின் பத்து கிராமங்களைத் தத்து எடுத்து 2005இல் குழந்தைகள் நலப் பஞ்சாயத்து ஒன்றை அமைத்தார். அதன் உறுப்பினராகச் சேர்ந்த எனக்கு, குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் பணியாற்றுவதன் விளைவை அதிகமாக உணர முடிந்தது. இதை எனது கிராமத்தில் இருந்த குழந்தைத் தொழிலாளர்களின் பெற்றோர்களுக்குப் பொறுமையாக எடுத்து கூறினேன். ஆரம்பத்தில் என்னைப் பொருட்படுத்தாதவர்கள், பிறகு தொடர்ந்து நான் பொறுமையாக அவர்களை அணுகியபோது கேட்கத் துவங்கினார்கள். பெற்ற குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியைக்கூடத் தரவில்லை என்பது பெற்றோர்கள் அவர்களுக்கு செய்யும் பெரிய துரோகம். இது கிடைத்தால்தான் எந்த குழந்தையும் அரசு சலுகைகளை முழுமையாக அனுபவிக்க முடியும். தங்கள் உரிமைகளை அரசிடம் கேட்டுப் பெற முடியும். இதை எடுத்துக் கூறியதன் பயன் எனக்கு சிறிது தாமதமாக கிடைத்தது” என்று சொல்லும் ரஸியா சுல்தானுக்கு ஒரு சகோதரி மற்றும் இரு சகோதரர்கள்.

இதன் பலனாக அந்த குழந்தைகள் நலப் பஞ்சாயத்து தலைவரின் தேர்தல் வந்தபோது போட்டியிட இவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்தப் பதவியின் பலன் என்ன என்று ரஸியாவுக்குச் சரியாகத் தெரியாது. மொத்தம் 242 வாக்குகள். போட்டியிட்டவர்கள் பத்துப் பேர். ரஸியா 102 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதன் பிறகு அவர் தனது கல்வியுடன் சேர்த்துக் குழந்தைத் தொழிலாளர்களைக் காக்கும் பணியில் முழுமூச்சுடன் இறங்கினார். விளைவு இதுவரை 48 குழந்தை தொழிலாளர்களை மீட்டுப் பள்ளிக்கு அனுப்பியுள்ளார். இந்தப் பணிகளுக்கிடையில் தன் கல்வியின் மீதான கவனத்தையும் அவர் இழந்துவிடவில்லை. இப்போது ப்ளஸ் டூ பயில்கிறார்.

இத்துடன் தன் கடமையை முடித்துக்கொள்ளாமல், போதுமான வகுப்பறை மற்றும் கழிவறை வசதிகள் இல்லாத பள்ளிகளில் அதைப் போராடிப் பெற்றுத் தந்திருக்கிறார். இதன் பிறகு பச்பன் பச்சாவ் அந்தோலனின் தேசிய உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அருகிலுள்ள மாவட்டங்கள் மட்டுமன்றி ராஜஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்களிலும் குழந்தைகள் கல்விக்காகப் போராடியுள்ளார். இவரது அயராத பணியைக் கண்டு அசந்துபோன அந்தச் சமூக சேவை அமைப்பு அவரை நேபாள எல்லையில் உள்ள மகேந்தரபூர் முதல் தலைநகரமான காட்மாண்டு வரையிலான 13 நாள் பாதயாத்திரைக்காகத் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளது. நேபாளத்தில் இருந்த இளம்பெண்கள், ‘பணிக்காக’ என்ற பெயரில் இந்தியாவில் விபச்சாரத்தில் இறக்கிவிடப்படுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் ரஸியா.

இந்த அமைப்பின் பணியைப் பற்றிக் கேள்விப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் கார்டன் பிரவுன் கடந்த வருடம் தில்லியிலுள்ள அதன் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார். அங்கு ரஸியாவின் பணிகளைப் பற்றி கேள்விப்பட்ட பிரவுன், அவரைச் சந்தித்துப் பேசினார். அப்போது ரஸியா ஒரு பெரிய அனுபவசாலிபோல பிரவுனிடம் வைத்த கோரிக்கை அவரை மேலும் மலைக்க வைத்துள்ளது.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்து உலகின் அனைத்துக் குழந்தைகளும் கட்டாயக் கல்வி பெறும் பொருட்டு உலக அளவில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும் எனவும், இதற்காக ஐக்கிய நாடுகள் சபை நிதி உதவி செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார். இதைக் கேட்டு வியந்த பிரவுன், ரஸியாவை மனமாரப் பாராட்டியதுடன் மலாலா பெயரிலான முதல் விருதிற்கும் பரிந்துரைத்தார்.

“நன்றாகப் படித்து மருத்துவராகி அன்னை தெரசாவைப் போல் சமூகப் பணி செய்ய வேண்டும் என்பதே என் குறிக்கோள்” என்று சொல்லும் ரஸியா, இதற்கு முன் 2011இல் ‘சிட்டிசன் ஜர்னலிஸ்ட்’ விருதை அமிதாப்பச்சன் கைகளால் வாங்கினார். இந்த விருதிற்கான அறிவிப்பு வந்தபோது ஜெய்பூரில் இருந்த அவர் உடனடியாகத் தன் கிராமத்துக்கு வந்து தன் பெற்றோரைச் சந்தித்து ஆசி வாங்கிக்கொண்டார். “இதுபோன்ற ஒவ்வொரு மகிழ்ச்சியிலும் என் பெற்றோரை அணைத்துக் கொண்டாடுவேன்” என்கிறார் பரவசத்துடன்.

தன் கல்வியிலும் பணிகளிலும் வழக்கம்போல் மூழ்கியிருக்கும் இந்த டீன் ஏஜ் பெண், விருது பெறும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.

மலாலா விருது: பின்னணி என்ன?

தாலிபான்களுக்கு எதிராக மலாலா எழுத்துக்களால் போராடியது பாகிஸ்தானின் இளைய சமுதாயத்தைத் தட்டி எழுப்பியது. இதனால் மூன்று வருடங்களாக பாகிஸ்தானின் புகழ் பெற்ற சிறுமியாக இருந்தார் மலாலா. அவர் வசிக்கும் ஸ்வாத் பள்ளத்தாக்கின் பெண் குழந்தைகள் படிப்பிற்காக ‘மலாலா எஜுகேஷனல் பவுண்டேஷன்’ என ஒரு அமைப்பைத் துவக்கி சமூக சேவையும் ஆற்றிவந்தார் மலாலா. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் சிறப்பு பிரதிநிதி பாகிஸ்தானுக்கு வந்தபோது அவரிடம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுமாறு தைரியமாகக் கோரிக்கை விடுத்தார். இவ்வாறு பெண் கல்வியை பாகிஸ்தானில் நிலை நாட்ட முயன்ற மலாலா யூசூப்ஜாய், கடந்த வருடம் அக்டோபரில் கொடூரமாகச் சுடப்பட்டார். உலகிற்கே முன்னுதாரணமான துணிச்சலான அந்த 14 வயதுப் பெண்ணுக்கு ஆதரவாக இந்தியா உட்பட பெரும்பாலான நாட்டு மக்கள் திரண்டு நின்றனர்.

பிறகு லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தவரை கௌரவிக்க வேண்டி ஐக்கிய நாடுகள் சபை, ஜூலை 12ஆம் தேதியை மலாலா தினமாக அறிவித்துள்ளது. மேலும், குழந்தைகளின் கல்விக்காகப் பாடுபடும் மாணவ, மாணவிகளுக்கு மலாலாவின் பெயரில் ஒரு புதிய விருது ஒவ்வொரு வருடமும் அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x