

மத்திய அரசின் கட்டாய கிராமப்புற மருத்துவ சேவை திட்டத்தைக் கைவிடக்கோரி வரும் 8-ம் தேதி தமிழகம் முழுவதும் மருத்துவ மாணவர்கள் பேரணிகளை நடத்த உள்ளதாக தமிழ்நாடு மருத்துவ மாணவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் மாணவர் பிரவீண் கூறுகையில், “மாநில அரசுகளின் பணி நியமன உரிமைகளை மத்திய அரசு தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தின் மூலம் பறிக்கக் கூடாது. இந்தத் திட்டத்தைக் கைவிட மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மேலும், கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்குக் கூடுதல் ஊதியம், படிகள், போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை வழங்க வேண்டும்’’ என்றார்.
மாணவர்களின் இந்தப் பேரணிக்கும் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்திருக்கும் 'சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் குழு'வின் தலைவர் மருத்துவர் ரவீந்திரநாத் கூறுகையில், “கிராமங்களில் மருத்துவ சேவை செய்யத் தயாரில்லை என்று எந்த மருத்துவரும் மருத்துவ மாணவரும் சொல்லவில்லை.
நிரந்தர அடிப்படையில் மட்டுமே அவ்வாறு அமைக்க வேண்டும். தாற்காலிகமாக மருத்துவ மாணவர்களை கிராமப்புறங்களில் சேவை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவது சுமார் 40,000 மருத்துவர்களின் நிரந்தர பணி வாய்ப்புகளைத் துடைத்தெடுக்கும் முயற்சியாகும்’’ என்றார்.
சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.