Published On : 12 Aug 2020

பிஎம்டபிள்யூ கார் ஒண்ணு புக் பண்ணிருக்கேன்!- வலிய வந்து தகவல் சொன்ன வரிச்சியூர் செல்வம்

varichiyur-selvam

குள.சண்முகசுந்தரம்

இன்று காலையில் எனக்கு ஒரு போன் கால்... எடுத்து பேசினால் அந்த முனையில், அத்திவரதர் புகழ் தா(த்)தா வரிச்சியூர் சொல்வம்.

“என்னங்கய்யா  தீடீர் போன்... போலீஸ்  பிரச்சினை ஏதுமா?” என்று கேட்டேன்.

“சும்மா தான் அடிச்சேன்  தலைவா. என்ன பண்றீங்க... எப்டி இருக்கீங்கன்னு விசாரிக்கலாம்ண்டு...” என்று சொன்னார் வரிச்சியூர் செல்வம்.

அதைத் தொடர்ந்து நடந்த எனக்கும் வரிச்சியூராருக்கு மான உரையாடல் அப்படியே இங்கே:

“ஏதாச்சும் நியூஸ் இருக்கா?”

 “நம்ம வாழ்க்கையில எல்லாமே நியூஸ் தானே சாமி...”

 “ஊருக்குள்ள கரோனா சர்வீஸ் ஏதாச்சும் செஞ்சீங்களா?”

“கரோனா வந்த டயத்துல அம்ம ஊருக்கு மட்டும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன். வரிச்சூரு, தச்சனேந்தல், களிமங்கலம், குன்றத்தூர்னு அம்ம ஊரச் சுத்தி இருக்கிற தாய்க்கிராமங்களுக்கு 4,500 பேருக்கு கிட்டத்துல அரிசி, பருப்பு, சேலை , கைலின்னு உதவி செஞ்சேன். அம்மால செய்ய முடிஞ்சது அவ்ளோ தான். அதுவே அந்தா இந்தான்னு செலவு ஓடிருச்சு சாமி. நாலாயிரத்தி சொச்சம் குடும்பம்னா நீங்களே யோசிச்சுப் பாருங்க.”

“மக்கள் என்ன சொன்னாங்க?”

“அம்ம ஊருக்காரப் பய உதவுறாண்டான்னு சொல்லி எல்லாரும் சந்தோஷப்பட்டாய்ங்க. அதானே நமக்கு வேணும்.”

“உங்களோட ஐஏஎஸ் கனவு மனைவி எப்டி இருக்காங்க?”

“சித்ராவ கேக்குறீங்களா... அவள ஐஏஎஸ் படிக்க வைக்கணும்னுண்டு நான் தான் நெனச்சேன். ஆனா, அவ மனோன்மணியம் யுனிவர்சிடியில பிஎச்டி முடிச்ச கையோட ஸ்கூல் பிரின்சிபலா போயிட்டா. தென்காசியில இருக்கிற எக்ஸ் மினிஸ்டர் இசக்கி சுப்பையாவோட ஸ்கூல்ல தான் இப்ப பிரின்சிபலா இருக்கா. மகனும் அவகூடவே இருக்காரு; எட்டாம் கிளாஸ் படிக்காரு.”

“கரோனா காலத்துல அவங்கள பாக்கப் போனீங்களா?”

“போனவாரத்துக்கு முந்துன வாரம் போனேன் சாமி. குற்றாலத்துல ஒரு வீடு கட்டிக்கிட்டு இருக்கேன். அதப் பாக்கப் போறேன்னு சொல்லி இ - பாஸ் கேட்டு வாங்கி போயிட்டு வந்தேன்.”

“இதுக்கெல்லாமா இ - பாஸ் குடுக்காங்க?”

“முன்ன குடுத்தாங்க... இப்ப குடுக்கிறதில்லை”

“இ-பாஸ் போட்டுப் போனீங்களா... இல்ல, அத்திவரதர பார்க்கப் போன மாதிரி ஷார்ட் கட்டுல போய்ட்டு வந்துட்டீங்களா?”

“இல்ல சாமி... இ-பாஸ் போட்டுத்தான் போனேன். இல்லைண்டாத்தான் இந்நேரம் பேப்பர்ல போட்டுவிட்டுருப்பீங்கள்ல... இப்பக்கூட,‘ஐயாயிரம் குடுங்க, பாஸ் எடுத்துத் தர்றோம்’ண்டு எனக்கிட்ட வந்தாங்க. ‘டேய்... உங்கள கும்புட்டுக் கேட்டுக்குறேன் சாமி... மத்தவங்களுக்கு வேணும்னா உங்க ஸ்டைல்ல எடுத்துக் குடுங்க. எனக்கு எடுத்துக் குடுத்தீங்கண்டா... தப்பாகிப் போகும்ண்டா சாமி. அப்புறம் உங்களுக்கும் சிக்கல் எனக்கும் சிக்கல்’னு சொல்லிட்டேன்.”

“குற்றாலத்துல வீடுகட்டுனா... வாழவைத்த மதுரையை மறந்துட்டு அங்க ஷிஃப்ட் ஆகுறதா பிளானா?”

“இல்ல சாமி... அங்க ஒரு ஹெஸ்ட் ஹவுஸ் கட்டுறேன். ஏற்கெனவே சித்ராவுக்கு கிராமத்துல வீடுகட்டிக் குடுத்தாச்சு. ஏதாச்சும் வேலையா குற்றாலத்துக்கு போனமிண்டா சாதாரண ரூமுக்கே ஐயாயிரம் ரூபாய் வாடகை கேக்குறாங்க. அதனால, அங்க ஒரு வில்லா கட்டுறதா பிளான். 55 லட்ச ரூபாய்ல பில்டரே நமக்குக் கட்டிக் குடுத்துருவாங்க. அந்த வில்லாவ அவங்க கஸ்டடியிலயே வெச்சிருப்பாங்க. நமக்கு வருசத்துக்கு ஒரு லட்ச ரூபாய் பேங்க் அக்கவுண்டுல போட்டு விட்டுருவாங்க. நம்ம போனா வந்தா செலவில்லாம தங்கிக்கலாம்.”

“முன்ன மாதிரி இப்ப போலீஸ் தொந்தரவு எல்லாம் இல்லையே..?”

“நம்ம தான் எங்கயும் வெளியில போறதில்லையே... பழைய மதுரை போலீஸ் கமிஷனர் ஐயாவையும் மணிவண்ணன் (மதுரை முன்னாள் எஸ்பி) சாரையும் போய் பார்த்துட்டு வந்தேன். புதுசா வந்திருக்கிற கமிஷர் ஐயா கரோனா சமயத்துல யாரையும் சந்திக்கிறது இல்லைன்னு சொன்னாங்க; அதனால சந்திப்பு தள்ளிப் போகுது.”

“உங்க மேல இருந்த வழக்குகள் எல்லாத்தையும் முடிச்சுட்டீங்களா?”

“இன்னும் ஒரு 17 கேஸ் இருக்கு சாமி.”

“என்ன இவ்ளோ சாதாரணமா சொல்றீங்க?”

“ஆமா... என்ன செய்யச் சொல்றீங்க? இதுவரைக்கும் 56 வாட்டி ஜெயிலுக்குப் போயாச்சு. அதுவே நூத்திச் சொச்சம் கேஸ் ஆச்சு. இது பூராத்தையும் முடிக்க வேண்டாமா? நாலஞ்சு கோடி வரைக்கும் செலவு பண்ணி இதுவரைக்கும் எந்தக் கேஸ்லயும் தண்டனை இல்லாம தப்பிச்சு வந்துட்டோம்ல சாமி... அதுவே பெரிய விஷயமில்லையா?”

“மீதி இருக்கிற வழக்குகள்ல பெரிய வழக்குகள் ஏதும் இருக்கா?”

“எல்லாமே சப்பை மேட்டர். சொல்லிக்கிற(!) மாதிரி எதுவும் கிடையாது. நெருக்கி எல்லாத்தையும் முடிச்சாச்சு.”

“வேற ஏதாச்சும் ஸ்பெஷல் நியூஸ் இருக்கா?”

“முந்தா நாளு ,  ‘பிஎம்டபிள்யூ - எக்ஸ் 7’ காரு ஒண்ணு புக் பண்ணிட்டு வந்தேன். கரோனா முடிஞ்ச பின்னாடி ஜனவரி 22-ம் தேதி நம்ம பிறந்த நாளுக்கு புது காரை ரிலீஸ் பண்ணலாம்ண்டு இருக்கேன்.”

“புது கார் மட்டும் தானா... இல்ல, பிறந்த நாளுக்கு வேற ஏதாச்சும் பிளான் இருக்கா?”

“எங்க வகையறாவுல 50 வயசுக்கு மேல யாருமே உசுரோட இருந்ததில்ல. எங்க ஐயாவ 40 வயசுலயே கொன்டுபுட்டாய்ங்க. எங்க அப்பாரு 48 வயசுல கொலையாகிட்டாரு. நான் ஒருத்தன் தான் 50 வயசக் கடந்து இருக்கேன். வர்ற வருசம் 53-வது பிறந்த நாள்.
ஐம்பதாவது பிறந்த நாளுக்கே ஊர அமர்க்களப் படுத்தியாச்சு. அதுக்காக ஒரு கோடி ரூபாய் செலவு பண்ணுனேன். மூவாயிரம் பேருக்கு சேலை, மூவாயிரம் பேருக்கு வேட்டி, 2,600 கிலோ கறி சமைச்சு விருந்து, 500 லிட்டர் ரம்மு, 500 லிட்டர் பிராந்தி, 500 லிட்டர் விஸ்கின்னு  அமர்க்களப் படுத்தியாச்சு. எங்க கிராமத்துல வெள்ளைக்காரங் களையே பாத்திருக்க மாட்டாங்க. அதுக்காக அமெரிக்கா, ரெஷ்யா, செக்கோஸ்லோவெகியா நாடுகள்ல இருந்து வெள்ளைக்காரங்கள வரவெச்சு பெல்லி டான்ஸ் ஆடவிட்டேன். அப்டியெல்லாம் அம்பத அமர்க்களப்படுத்திட்டதால இந்த வருசம் அடக்கித்தான் வாசிக்கணும்; பொழச்சுக் கெடந்தா அறுவதுல பாத்துக்கலாம்.”

“கரோனா காலத்துல எப்டி பொழுது போகுது?”

“வீட்டுக்குள்ளயே ஜிம்மு வெச்சிருக்கேன். அதுல அப்பப்ப எக்ஸர்சைஸ் பண்ணிக்கிறது. அப்டியே பேரன் -பேத்திகள கூட்டிக்கிட்டு வெளியில காத்தாட போயி காப்பி கீப்பி சாபிட்டு வர்றது... இப்டித்தான் கரோனா காலம் கழிஞ்சுட்டு இருக்கு சாமி.”

You May Like

More From This Category

More From this Author


More From The Hindu - Tamil