குழந்தைகளைக் காப்போம்!

குழந்தைகளைக் காப்போம்!

பெருந்தொற்று காலத்தில் பெற்றோரின் அரவணைப்பைச் சார்ந்திருக்கும் குழந்தைகள் மட்டுமல்ல, ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகள், காப்பகங்களில் பராமரிக்கப்படும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்களாக்கப்பட்டவர்கள் என கிட்டத்தட்ட எல்லாக் குழந்தைகளும் ஏதேனும் ஒருவிதத்தில் பாதிப்புகளை சுமந்து நிற்கிறார்கள்.

குடும்பத்தில் ஒருவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுவிட்டாலே வீட்டில் குழந்தைகளைப் பராமரிப்பது என்பது கடினமான விஷயம். பெற்றோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழலில் குழந்தைகள் பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்கள்.  பெற்றோர் எதிர்பாராதவிதமாக கரோனாவுக்குப் பலியாகிவிட்டால் குழந்தைகள் நிர்கதியான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். குழந்தைகள் கரோனா தொற்றுக்குள்ளாகும் விகிதமும் அதிகரித்து வருகிறது. உருமாறிய கரோனா வைரஸ் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனும் செய்தியும் மிரட்சியடைய வைக்கிறது. 

நிலைமை இப்படி இருக்க, குழந்தைகளுக்கு முறையாக முகக்கவசம் அணியவைப்பதில்கூட பலர் அலட்சியம் காட்டுகிறார்கள். இவற்றையெல்லாம் கடந்து, ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளை யார் பராமரிப்பது எனும் கேள்வி சமூக அளவில் பிரம்மாண்டமாக உருவெடுத்திருக்கிறது. தத்தெடுப்பது தொடர்பான வழிமுறைகள் எளிதானவை அல்ல என்பதும், அரசு மற்றும் தனியார் காப்பகங்கள்தான் குழந்தைகளுக்குப் பாதுகாப்பை வழங்கும் என்பதும் நடைமுறை உண்மைகள். அதேசமயம், சில காப்பகங்களிலேயே கரோனா பரவல் இருப்பதாக வெளியாகும் செய்திகள் மேலும் கவலை தருகின்றன.

இந்நிலையில், குழந்தைகள் விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளைப் பராமரிப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்கும்  மாவட்ட அளவிலான பணிக்குழுக்களைத் தமிழக அரசு அமைத்துள்ளது. அத்துடன் குழந்தைகள் பராமரிப்பு தொடர்பான அரசு அமைப்புகளையும், தொண்டு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து தீவிர கண்காணிப்பையும், கணக்கெடுப்பையும் மேற்கொள்ள வேண்டும். போர் முனையில் நிராதரவாக நிற்கும் குழந்தைகளுக்கும், பெருந்தொற்றின் விளைவாகக் கைவிடப்படும் குழந்தைகளுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. அந்தத் தளிர் விரல்களை ஆதூரமாகப் பற்றி நம்பிக்கையளிப்பதுதான் அரசின் கடமை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in