நிழற்சாலை

நிழற்சாலை

காலக் குறிப்புகள்

உணவருந்திய பின்
கண்ணாடி முன்
கை கழுவி நிற்கையில்
கலைந்த முடியினை
அலங்கரிக்கும்
அலட்சிய வாழ்வுக்கு
கை கழுவியவுடன்
பாத்திரத்தில்
தண்ணீர் மொண்டு
அடுத்து வருபவரிடம்
பணிவுடன் கொடுத்த
காலம் தெரியவில்லை.
- பல்லவிகுமார்

நம்பிக்கையின் குறுக்குக் கோடுகள்

சிலுவையில் அறையப்பட்ட
தேவனைப் போல் கைகளை நீட்டி
பலகையில் சாய்ந்து நிற்கிறாள்
நிறைமாத கர்ப்பிணியான
கழைக்கூத்தாடிப் பெண்.
எதிரிலிருந்து வீசப்படுகிற கத்திகள்
தலைக்கு மேல்
மார்பின் பக்கவாட்டில்
கழுத்துக்கு அருகில்
இடுப்பின் இரண்டு ஓரங்களும்
நூலளவு இடைவெளிதான்
உடலில் படாதவாறு
ஒவ்வொன்றாகக் குத்தி நிற்கிறது.
இவளோ வயிற்றில்
உதைக்கும் குழந்தையை
உயிருக்குள் ரசித்தபடியே
புன்னகை செய்கிறாள்
அசையாது நின்றபடி
எல்லோரும் பார்க்க.
இப்போது சொல்லுங்கள்
எதிரில் இருந்துவரும் கத்திகளின் மேல்
அவள் வைத்திருக்கும்
அதீத நம்பிக்கையைவிடவா
பெரிதாய் இருக்கப்போகிறது
என் மீது நீங்கள்
வைத்திருக்கும் நம்பிக்கை
அல்லது
உங்கள் மீது நான்
வைத்திருக்கும் நம்பிக்கை?
- கனியன்செல்வராஜ்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in