கனா பேச்சு 10- வண்ணத்துப்பூச்சி விளைவு

கனா பேச்சு 10- வண்ணத்துப்பூச்சி விளைவு

கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

வலியென்றால் பெருங்குரலெடுத்து அழவும் தன்னை தாக்கும் மனிதரிடம் ஏதோ ஒரு வகையில் தன் எதிர்ப்பை பதிவு செய்யவும் சாதாரண மனிதனுக்குத் தெரிந்திருக்கிறது. மனப் பிறழ்வு கொண்டு அலையும் விளிம்பு மனிதன் ஒருவனின் வெளிப்படுத்த முடியா வலியும், கோபமும், சாபமும் ஒரு ஊரையே அழித்த கதை நம்ப முடியாததுதான். சினிமாக்களில் மட்டும் பார்த்து வியந்து கைதட்டி
விலகும் வேடிக்கை மனிதர்களுக்கு கெழங்கான் என்கிற ரவியின் கதை நம்பவே முடியாத கட்டுக்கதையாய் தெரியும். ஆனால் அவன் வாழ்ந்ததற்கும் இல்லாமல் போனதன் அடையாளமாகவும் இன்றும் பல மனிதர்கள் வாழ்கின்றனர்.

கிழங்கான் மீனைப் போல வெள்ளையாய் உடலில் எலும்பையே பார்க்க முடியாமல் உருண்டையாய் இருப்பான் ரவி. ஊர் மனிதர்களுக்குகெழங்கானான அவனிடம் யார் எந்த வேலை சொன்னாலும் முகம்சுழிக்காமல் அலுத்துக் கொள்ளாமல் செய்து முடிப்பான். அவனின் தொடக்கம் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. ஆனாலும் யார் குடிக்கும் தேநீரிலும் கெழங்
கானுக்கு ஒரு டம்ளர் பங்கிருக்கும். சாப்பிட்டியா கெழங்கானுக்கு இல்லையென்று தலையாட்டினால் ஒரு தட்டில் சோறும் குழம்பும் இரண்டு மீன் துண்டுகளும் வந்து விழும். “டீக்கடைக்கு போய் வடையும் டீயும் வாங்கிட்டு வா...’’ என்றால் தூக்கு வாளி வாங்கிக்கொண்டு ஓடுவான். “செத்த ரேசன் கடைக்குப் போய் மண்ணெண்ணையும் சீனியும் வாங்கிட்டு வா கெழங்கான்’’ என்றால் மஞ்சள் பையும் பிளாஸ்டிக் கேனுமாய் அங்காடி வரிசையில் வெயிலைப் போர்த்திக்கொண்டு நிற்பான்.

அவனுக்கென்று ஒரு கூரை வீடு இருந்தது. மண் சுவர் அணைந்த சிறு வீடு. ஆனாலும் பெரும்பாலும் கெழங்கான் இருப்பது ஒற்றை பிணத்தை மட்டும் எரிக்கக்கூடிய வசதிகொண்ட மயான கொட்டகையில். எரிந்து முடித்த பிணத்தின் நீரு பூத்த சாம்பல் அருகில் கெழங்கான் தூங்குவதை அந்த வழியே கடக்கும் பலரும் பார்த்திருக்கின்றனர். யாருக்கும் எந்தத் தொந்தரவும் தராத கெழங்கான் எதற்கு ஓய்வெடுக்க இடுகாட்டு இருளைத் தேர்ந்தெடுத்தான் என்பது பலருக்கும் புரியாது. இருள் கடந்து இயற்கை உபாதைக்கு ஒதுங்கும் சிலர், சில நேரங்களில் கெழங்கான் சுய இன்பம் புரிந்துகொண்டிருப்பதை சில் அவுட்டில் பார்த்து சிரித்து நகர்ந்திருக்கிறார்கள். எடுப்பார் கைப்பிள்ளையான கெழங்கான் ஊரில் அநேகருக்கு செல்லப்பிள்ளையும் கூட. செல்வம் பார்பர் ஷாப்பில் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை கெழங்கானுக்கு முடி எடுக்கப்படும். பெரும்பாலும் மொட்டைத் தலையுடன் தான் திரிவான் கெழங்கான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in