மஹா பெரியவா 56: அருளே ஆனந்தம்

மஹா பெரியவா 56: அருளே ஆனந்தம்

பி. சுவாமிநாதன்
swami1964@gmail.com

குறிப்பிட்ட ஒரு கொள்கையுடன் தொடர்ந்து வாழ்ந்து வரும் பெண்மணி ஒருவரின் நிலையை வார்த்தைகளால் விவரித்தார் மகா பெரியவா. இதைக் கேட்டுக் கொண்டிருந்தார் அமெரிக்காவில் இருந்து வந்திருந்த தம்பதியின் நவநாகரிக குடும்ப நண்பர். பிறகு, அந்தப் பெண்மணியின் இந்த நிலைமையை அப்படியே விளக்கக் கூடிய ஆங்கிலச் சொல், அதுவும் ஒரே ஒரு வார்த்தை என்னவென்று கூறுமாறு கேட்டார் மகான்.

அமெரிக்காவில் இருந்து வந்திருந்த இந்தக் குடும்ப நண்பர் திடுக்கிட்டார். பெரியவா கேட்ட கேள்விக்கு உண்டான பதிலை அவரால் உடனடியாகச் சொல்ல முடியவில்லை. காரணம், அந்த ஆங்கில வார்த்தை அவருடைய நினைவுக்கு சட்டென்று வரவில்லை. நீண்ட நேரம் யோசித்தார்.

அதன் பிறகுதான், ‘‘நான் ஒரு வார்த்தை சொல்றேன்... அது சரியா இருக்குமானு பாருங்கோ’’ என்றார் பெரியவா.

‘காவி வஸ்திரத்தை அணிந்து கொண்டிருக்கிற ஒரு சந்நியாசி, எவருக்குமே தெரியாத ஒரு ஆங்கில வார்த்தையைச் சொல்லப் போகிறாரா? பல காலம் அமெரிக்காவில் வசித்து வருகிற எனக்குத் தெரியாத, இங்கு கூடி இருக்கிற பல்வேறு அன்பர்களுக்குத் தெரியாத ஒரு ஆங்கில வார்த்தையை இவர் எந்த ‘யூனிவர்சிடி’யில் போய்ப் படித்திருப்பார்? சிவ பூஜை செய்து கொண்டு, வருகிற அன்பர்களிடம் அளவளாவுகிற இவர் ஆங்கிலத்தில் புலமை கொண்டவரா?’ என்று நவநாகரிக அன்பர் மனம் பலவாறும் சிந்தித்தது.

ஒரு பரிசாரகராக விளங்கியவரை, ஒரே நாள் இரவில் காளமேகப் புலவராக ஆக்கினாள் திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரி!

ஒரு நொடிப் பொழுதில் நாக்கில் பீஜாட்சர மந்திரத்தை எழுதி ஆடுகள் மேய்க்கக் கூடிய ஒரு இடையரை மகாகவி காளிதாஸ் ஆக்கினாள் அன்னை காளி!

பேச முடியாத மூகரை பேசவும் வைத்து கவி பாடும் வல்லமையையும் கொடுத்தாள் காஞ்சி அன்னை காமாட்சி!

கல்வியைக் கற்பது என்பது எல்லோருக்கும் சாத்தியம். அறிவைப் பயன்படுத்தினால் போதும்.

ஆனால், ஞானத்தைப் பெறுவதற்கு பராசக்தியின் கிருபை அவசியம். அதற்குப் பக்தியும் உண்மையும் வேண்டும்.
காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யராக விளங்கிய அனைவருமே அன்னை காமாட்சியின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றவர்கள். அவர்கள் குரு முகமாகத்தான் அனைத்தையும் பெற வேண்டும் என்பதில்லை. அன்னையே குருவாகவும் இருந்து போதிக்கிறாள். ஆட்கொள்கிறாள்.

காமாட்சிக்கே நித்தமும் பூஜை செய்து அந்த அன்னையையே அருகில் அமர்த்திக்கொண்டு அளவளாவுகிற அற்புத புருஷர் அல்லவா நம் மகா பெரியவா! அவருக்கு ஆங்கிலம் சொல்லித் தர ‘ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிடி’யில் இருந்தா அறிஞர்கள் வர வேண்டும்? அன்னை காமாட்சியின் கண்ணசைவு மட்டும் போதுமே... பிரபஞ்சத்தில் இருக்கிற ஆய கலைகள் அனைத்தையும் அருளக் கூடியவள் ஆயிற்றே அவள்!

அது சரி, நவநாகரிக அன்பர் பதில் தெரியாமல் தவித்தார் அல்லவா? மகா பெரியவா கேட்ட கேள்விக்கு உண்டான ஒற்றை ஆங்கில வார்த்தை தெரியாமல் இங்குமங்கும் நடந்து நடந்து யோசித்தார் அல்லவா? இத்தனை நேரம் எடுத்தும் அந்த வார்த்தை அவருக்குத் தோன்றவில்லை.

அதன் பின் மகானே சொன்னார். அவர் சொன்ன ஆங்கில ஒற்றை வார்த்தை ...

'EQUIPOISED' !

இந்த வார்த்தையைக் கேட்ட மறுகணம் நவநாகரிக இளைஞர் பிரமித்தார். தன்னைப் போல் ஆங்கிலம் கற்றவர்கள் பலரும் இருக்கிற இந்த இடத்தில் ஒரு சந்நியாசி அனாயாசமாகவும் அடக்கத்துடனும் பதில் சொல்லி தன்னைத் திரும்பிப் பார்க்க வைக்கிறாரே!
இளைஞர் விழிகள் நீரைச் சுரந்தது. தன்னிடம் இருக்கக் கூடிய செருக்கை முற்றிலும் அகற்றிய மகானின் திருச்சந்நிதியில் விழுந்து நமஸ்கரித்தார். ‘தாங்கள் சொன்ன ஆங்கில வார்த்தை மிகவும் சரியானதே... பொருத்தமானதே’ என்பது போல் அதை ஏற்றுக் கொண்டு தலை அசைத்தார். அதுவரை இருந்த ஆணவம் அவரிடம் இருந்து அகன்றது.

மேலே சொன்ன ஒற்றை ஆங்கில வார்த்தைக்கு என்ன பொருள்?

எந்த நிலை வந்தாலும், உச்சத்துக்குப் போகிறோமோ, அல்லது கீழே போகி றோமோ... தடுமாறாமல் எப்போதும் இருப் பதுபோல் ஒரே நிலையில் காணப்படுவது!

இதைத்தான் மகா பெரியவா சொன்னார்... ‘‘இந்தப் பெண்மணி பொருளா தாரத்தில் உயர்ந்த நிலையில் இருந்த போதும் சரி... தற்போது பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுக் கீழே வந்தபோதும் சரி... மடத்தின் மீது இருக்கிற பக்தியும், பெரியவா மீது இருக்கிற பக்தியும் அப்படியே உள்ளது’’ என்று!

உச்சத்துக்குப் போவதும், உதவாக் கரையாகச் சுற்றுவதும் எல்லாம் பூர்வ ஜன்ம வாசம். கடந்த ஜன்மத்தில் பட்ட கடனை அடைப்பதற்கு இந்தப் பிறவியில் கடவுள் கொடுக்கும் இன்பமும் துன்பமும் தான் அவை.

எது எப்படி இருந்தாலும், மகா பெரியவா மீது அசைக்க முடியாத பக்தியைக் கொண்டிருந்தால், அதல பாதாளத்தில் விழ வேண்டியவனையும் கைகொடுத்துத் தூக்கி விடுவார். அவரின் அருள் பரிபூரணமாக இருந்து விட்டால், கர்மாவை எல்லாம் கரைத்து விடுவார். துன்பம் அனுபவிக்க வேண்டியவனையும் இன்பத்தை அனுபவிக்க வைப்பார்!

அப்படித்தான் அமெரிக்காவில் வசித்து வரும் தம்பதியின் குடும்ப நண்பரான நவநாகரிக இளைஞருக்கு இருந்த அகந்தையை மிக நாசூக்காக அகற்றி, அவரையே அவருக்கு உணர வைத்தார்!

இதன் பிறகு எப்போதெல்லாம் இந்தியா வருகிறாரோ, பாரம்பரிய உடை அணிந்து, மகானைத் தரிசித்து அவரது ஆசிகளைப் பெறுவதற்கு தவறவில்லை அந்த நவநாகரிக இளைஞர்!

கலியுக தெய்வமான காஞ்சி முனிவர், தன்னைத் தரிசிக்க வருகிறவர்கள் மனதில் பக்தி எண்ணங்களையும் நற்சிந்தனைகளையும் விதைத்தார். ஆலயம் செல்வது எதற்காக என்று சொன்னார். கால ஓட்டத்தில் மண்ணோடு மண்ணாக புதைந்து போன ஏராளமான ஆலயங்களையும் தன் ஞான திருஷ்டி மூலமாக வெளிக்கொண்டு வந்தார்!

அந்நியர் ஆட்சிக் காலத்தில் ஏராளமான இந்து ஆலயங்கள் சேதப்படுத்தப்பட்டன என்று வரலாற்றில் படிக்கிறோம். போர் பயம் ஒழிந்து, மக்களாட்சி வந்த பிறகும் இத்தகைய ஆலயங்கள் பல மண் மூடிக் காணப்பட்டன. தமிழகத்தின் பல பகுதிகளுக்கு மகான் பயணிக்கிறபோது அந்த ஊர் மக்களை அழைத்துப் பேசுவார். ‘இந்த இடத்தில் ஒரு கோயில் மறைந்துள்ளது. இங்கே தோண்டுங்கள்’ என்று குறிப்பு கொடுத்துவிட்டுத் தன் யாத்திரையைத் தொடர்ந்து விடுவார். மகான் சொன்னபடி குறிப்பிட்ட இடத்தில் அகழ்ந்து பார்த்தால், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சிதிலமாகிப் போன ஆலயம் தென்படும்!

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் அருகே ஒரு வீட்டின் அடியில் இருந்த சிவா விஷ்ணு கோயிலை மகா பெரியவா அடையாளம் காண்பித்து வெளிக் கொணரச் செய்தார். அனந்த பத்மநாப ஈஸ்வரர் என்ற அந்த இறைவன் இன்றைக்குத் தன்னை நாடி வருகிற பக்தர்களுக்கு அருளிக் கொண்டிருக்கிறார்.

திருவாரூருக்குப் பக்கம் இஸ்லாமியர் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் ஒரு சிவன் கோயில் புதைந்திருந்தது. அது தெரியாமலேயே வாழ்ந்து வந்து கொண்டிருந்தார் அந்த உத்தமர். மகா பெரியவா தங்கள் ஊருக்கு வருகை புரிந்தபோது தனக்கு சொந்தமான அந்த இடத்தையே சிவன் கோயில் புனர் நிர்மாணத்துக்காக அப்படியே கொடுத்து விட்டார் அந்த இஸ்லாமிய அன்பர். இது எப்படி நடந்தது தெரியுமா? மகா பெரியவா அந்த ஊருக்கு வருவதற்கும், தனக்குச் சொந்தமான இடத்தில் ஏதோ கட்டுமானத்துக்காக அவர் தோண்டுவதற்கும் சரியாக இருந்தது!

தன் ஞான திருஷ்டியால் இதை உணர்ந்திருந்தார் மகா பெரியவா. சிவன் கோயிலை ஊருக்குக் கொடுத்த அந்த இஸ்லாமிய அன்பரை மகா பெரியவாளும் அந்த ஊர்க்காரர்களும் கொண்டாடினார்கள்.

சென்னை குரோம்பேட்டை அருகே குமரன்குன்றம் என்ற மலைக்கோயில் ரொம்பப் பிரபலம். மலை உச்சியில் ‘பாலசுப்ரமண்ய ஸ்வாமி’ என்ற பெயரில் முருகப் பெருமான் அற்புதமாக அருளிக் கொண்டிருக்கிறார்.

1960-களில் கண்டுபிடிக்கப்பட்ட கோயில் இது. ஆலயத்தை உலகறியச் செய்தவர் மகா பெரியவாதான்!

எப்படி?

(ஆனந்தம் தொடரும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in