இவருக்கு கமல்ஹாசன் பரவாயில்லை- ரஜினி மீது ஆதங்கப்படும் சொந்தபந்தங்கள்

இவருக்கு கமல்ஹாசன் பரவாயில்லை- ரஜினி மீது ஆதங்கப்படும் சொந்தபந்தங்கள்

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

தனது அரசியல் பிரவேசம் தொடர்பான ‘எழுச்சி’ அறிவிப்பை ரஜினி வெளியிடுவதற்கு முதல் நாள், அவரது உறவினர்கள் நிறைந்திருக்கும் கிராமமான நாச்சிகுப்பத்துக்குச் சென்றிருந்தேன். ஊரின் ஒவ்வொரு மனிதரும், ரஜினியின் அரசியல் வருகைக்காக அத்தனை ஆவலுடன் காத்திருந்ததை உணர முடிந்தது. தங்கள் உறவினரான ரஜினி, ஆட்சிக் கட்டிலில் அமர்வார் என்று பலரும் சொன்னதைக் கேட்கமுடிந்தது.

கிருஷ்ணகிரியிலிருந்து குந்தாரப்பள்ளி - கேஜிஎப் சாலையில் உள்ள வேப்பனஹள்ளி அருகே இருக்கிறது நாச்சிகுப்பம். வெயில் சுட்டெரிக்கும் நண்பகல் பொழுதில் அங்கு சென்றபோது முதலில் எதிர்ப்பட்டவர் ஈஸ்வரராவ். ரஜினியின் உறவினரான அவர், வேப்பனஹள்ளி திமுக இளைஞரணியைச் சேர்ந்தவராம். ரஜினி பற்றி கேட்டதும் மனிதர் ரொம்பவே குஷியானார்.
“இந்த ஊர்ல 200 வீடுகள் இருக்கு. மொத்தம் 956 ஓட்டுகள். ரஜினி கட்சி ஆரம்பிச்சா அத்தனை ஓட்டும் அவருக்குத்தான். ஏன்னா, ஊர்ல 75 சதவீதம் பேர் மராத்திகள்தான். எல்லாரும் ரஜினி சாருக்குப் பங்காளி, மாமா, மச்சான் முறை. ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணா ஊர்ல கல்யாணம், சீர், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அடிக்கடி வருவார். நாங்களும் அவரோட பெங்களூரு வீட்டுக்கு நல்லது கெட்டதுக்குப் போயிருக்கோம். அவரோட சம்சாரம் இறந்தப்ப அங்கே போயிருந்தோம். அப்போ ரஜினியைப் பார்த்து, ‘நம்ம ஊருக்கு எப்ப வர்றீங்க?’ன்னு கேட்டோம். ‘வரலாம், வரலாம். அதுக்கும் நேரம் வரும்’னு சொன்னார்” என்று படபடவெனப் பேசியவரை இடைமறித்து, “நீங்க திமுககாரர். ஆனா, ரஜினிக்குத்தான் ஓட்டுங்கிறீங்களே?” என்றேன்.

“ஊர்ல 75 சதவீதம் பேர் திமுகதான். எல்லாருமே 1996-ல் ரஜினி சொன்னதுக்காக சைக்கிள்ல ஊர்வலமா போய் திமுகவில சேர்ந்தவங்க. அவரே கட்சி ஆரம்பிச்சிட்டா, அப்புறம் ஏன் நாங்க திமுகவுல இருக்கணும்? அவர் மட்டும் கட்சி ஆரம்பிக்கட்டும். வேப்பனஹள்ளி தொகுதியே ரஜினியோட கோட்டையா மாறிடும்” என்று உற்சாகத்துடன் சொன்னார் ஈஸ்வரராவ்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in