கனவுகளின் துளி வெளிச்சம்

கனவுகளின் துளி வெளிச்சம்

கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

1856- ல் பிறந்த சிக்மண்ட் ஃபிராய்டு என்ற மனோவியலாளரின் தேவை இன்றைய 2020- லிலும் தேவைப்படுகின்றது என்பதற்கு சாட்சியாய் வெளிவந்திருக்கிறது இந்நூல். கால சுப்ரமணியம் எழுதிய இக்கட்டுரை மீச்சிறு தொகுப்பாக வந்திருந்தாலும் உள்ளடக்கத்தில் பேசப்படும் விஷயத்தில் கனம் கூடி நிற்கின்றது. மனோவியல் மருத்துவராயிலும் அக்காலத்தில் ஐன்ஸ்டீன், மார்க்ஸ், டார்வின் போன்ற மேதைகளுடன் பேசப்பட்டவர் ஃபிராய்டு. அவர் ஆய்வு செய்த குழந்தைப் பருவ பாலியல் பாதிப்பு பற்றிய தியரியையும் இலக்கியக் கோட்பாட்டினைப் பற்றியும் சேர்த்து சிறு புத்தகமாக வெளிவந்திருக்கிறது இத்தொகுப்பு.

ஃபிராய்டு குறித்து ஜே. எம். மேன்சன் என்ற மனப் பகுப்பாய்வாளர் எழுதிய விமர்சனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பினை கால சுப்ரமணியம் சிறப்பாகத் தந்துள்ளார் இதில். ஃபிராய்டுக்குப் பிறகுதான் செக்ஸ் பற்றி தாராளமாக இங்கே பேச முடிந்திருக்கிறது என்ற உண்மைக்கு ஃபிராய்டு தந்த விலையை மேன்சன் விளக்கும்போது தன் சுயக் கோட்பாட்டுத் தெளிவுக்கு மேதைகள் படும் சித்திரவதை புரிகிறது. தான் நம்பும் ஒன்றுக்காக ஃபிராய்டு எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்து- ஃபிராய்டுக்கும் அவரது நண்பரான பெலிசுக்கும் இடையேயான அதிர்ச்சிகரமான உறவு- வாசிக்கையில் நிஜமாகவே பகீரென்கிறது. ஆனாலும் மேன்சன் கட்டுரையில் தனக்கு ஒவ்வாத ஒன்றை மொழிபெயர்ப்பாளர் பதிலளிக்கையில் அதைத் தனியாகச் சொல்லாமல் மேன்சனின் கட்டுரையிலே இணைத்திருப்பது சற்றே குழப்புகிறது. அதே போல் சிக்கலான ஒன்றை அதே இறுகிய எழுத்து நடையில் தந்திருப்பதும்.

புத்தகத்தின் பின்னால் வரும் படைப்பாளிகளும் பகல் கனவும் என்ற ஃபிராய்டின் கட்டுரையின் தமிழாக்கம் சில ஆச்சரியங்களை அள்ளித் தந்தபடி நகருகிறது. இன்று காணுமிடமெல்லாம் நிறைந்திருக்கும் கவிஞர்கள் குறித்து அப்போதே ஃபிராய்டு சொல்லிச் சென்றிருக்கும் ‘ எல்லா மனிதர்களும் தம்முடைய மனதளவில் கவிஞர்களே...’ நிதர்சனமாகிவிட்டதே... குழந்தைப் பருவத்தில் விளையாடும்போது தான் கட்டமைக்கும் கற்பனை உலகத்தின் வழியே படைப்பாளன் பிறந்து விடுகிறான் என்பதை மறுக்க முடியாதுதான். ‘கற்பிதங்கள் மிகுந்த அலங்காரத்துடனும் மிக அதிக வலிமையுடனும் தோன்றுமாயின் அது நரம்பு நோய்க்கோ அல்லது மன நோய்க்கோ இட்டுச் செல்லும் தொடக்கப்புள்ளியாகும்’ என்ற ஃபிராய்டின் கூற்றை சற்றே வியப்புடன் மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in