இணையச் சிறையின் பணயக் கைதிகள் 21: விளையாட்டு வினையாகும் விபரீதம்!

இணையச் சிறையின் பணயக் கைதிகள் 21:  விளையாட்டு வினையாகும் விபரீதம்!

ஆன்லைன் வீடியோ கேம்கள் முழுவதும் தவறானது என்று சொல்லிவிட முடியாது என்பவர்களும் இருக்கிறார்கள். அவ்வகை விளையாட்டுகளால் ஏற்படும் லாபங்களையும் பட்டியலிடுகிறார்கள்.

கவனம் சிதறிக்கொண்டே இருக்கும் குழந்தைகள் கேம் விளையாட ஆரம்பித்தால் அமைதியாகி விடுகின்றன. கவனக்குவிப்பு அதிகரிக்கிறது. கூர்மையடையும் அவர்களின்பார்வை, பிரச்சினைகளைத் தீர்க்கும் திறமையை (problem solving skills) வளர்த்தெடுக்கிறது. ஒரே நேரத்தில் ஒலி, ஒளி, இலக்கைச் சென்றடையும் நோக்கம், சமயோசித புத்தி போன்றவை இயங்குவதால் அக்குழந்தைகளின் ஆளுமை நேர்மறை மாற்றங்களை நோக்கிச் செல்கிறது என்கிறார்கள் இவர்கள். இதே குணாதிசயங்கள் அன்றாட வாழ்விலும் அதிகரிப்பது அவர்தம் சமூக ரீதியிலான வெற்றிக்கு வழி கோலும் என்றும் நம்புகின்றனர்.

மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளின் நடத்தையில் சில நல்ல மாற்றங்கள் வருவதும் உண்டு. அவர்களது கோபம், எரிச்சல் போன்றவை குறைந்துவிளையாட்டில் ஆர்வம் செலுத்தும்போது சற்றே அமைதியடைவதாகவும் சில பெற்றோர் சொல்கின்றனர்.

மனப்பிறழ்வு (psychosis) போன்றதீவிர மனக்கோளாறுகளில் உணர்வு ரீதியாக சில முக்கியப் பிரச்சினைகள் ஏற்படும். அதாவது யாரும் நம்மைத் தொட்டிருக்க மாட்டார்கள். ஆனால், மேலே பூச்சி ஊர்ந்து செல்வது போல தோன்றும். யாரும் அருகே இருக்க மாட்டார்கள். ஆனால், நம் காதில் பேச்சுக்குரல் கேட்கும். இருவர் தமக்குள் பேசிக்கொள்வார்கள். அல்லது நம்முடன் ஒருவர் பேசுவார். பேசுவார் என்பதை விட அந்தக் குரல் நம்மை சகட்டுமேனிக்குத் திட்டி வசைபாடும். இதை ‘ஆடிட்டரி ஹாலுசினேஷன்’ (auditory hallucination) என்கிறோம். மனநோயாளிகள் பலரும் அனுபவிக்கும் கடும் சிரமங்களில் இது முக்கியமானது. அப்படிப்பட்ட சில பிணியாளர்கள் இணையத்தில் யு-டியூப் அல்லது வீடியோ கேம்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும்போது அந்த மாயக்குரல்கள் சற்றே குறைவதாக உணர்கிறார்கள்.

அதைவிட, எண்ணச்சுழற்சி நோயால் நிறைய பாதிப்புக்கு உள்ளானவர்களையும் ஆய்ந்து பார்த்திருக்கிறார்கள். ஒரே மாதிரியான சிந்தனை திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்கும். அச்சிந்தனை தவறானது, தேவையற்றது என்று நோயாளிக்குத் தெரியும். ஆனாலும் அச்சிந்தனைகளைக் கட்டுப்படுத்தவும் முடியாமல் ரெண்டுங்கெட்டான் மனப்பாங்கில் ஏகத்துக்கும் தடுமாறுவதுதான் ஓ.சி.டி. (Obsessive Compulsive Disorder) எனப்படும் இந்த எண்ணச்சுழற்சி நோய்.

மன நல மருத்துவர்கள் சாதாரணமாகச் சந்திக்கும் இந்தப் பிரச்சினை சமயங்களில் சிகிச்சைக்குக் கட்டுப்படுவதற்கு சவாலாகவே இருக்கும். இது போன்ற பிணியாளர்கள் வீடியோ கேம்களில் கவனம் செலுத்தி விளையாடும்போது தமது எண்ணச்சுழற்சி ஓரளவுக்குக் குறைவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் விட, போர்வீரர்களைச் சம்பந்தப்படுத்தி நடத்தப்பட்ட ஒரு ஆய்வு சுவாரசியமானது. போர்முனையிலோ, ஏதேனும் விபத்திலோ தீக்காயம் அடைந்த வீரர்களுக்குச் சிகிச்சையளிக்கும்போது அவர்களை வீடியோ கேம்களை விளையாடச் செய்து பரிசோதித்தார்கள். என்ன ஆச்சரியம்... காயத்தின் மிகுவலியால் துடித்த சிலருக்கு விளையாட்டில் ஈடுபட்டவுடன் வலியின் தீவிரம் குறைந்திருக்கிறது.

முற்றிய நோயின் கொடும் வலியில் துடித்தவர்களுக்கு மனதிற்கினிய இசை வலியைக் குறைத்து நோயை எதிர்க்கும் வலிமையை அவர்களுக்குக் கொடுக்கிறது என்பது பலரும் அறிந்த, ஏற்கெனவே ஒத்துக் கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள். அது போல வீடியோ கேம்களும் வலியைக் குறைப்பது நல்ல விஷயம்தான்.

அதாவது மனதளவிலும் உடலளவிலும்  தீவிரமாக பாதிக்கும் ஒரு விஷயத்திலிருந்து நம்மை திசை திருப்பிக் கொண்டால் அந்த விஷயத்தின் பாதிப்பில் இருந்து ஓரளவேனும் விடுபடலாம் என்ற அறிவியலின் அடிப்படையைத்தான் இதுபோன்ற ஆய்வுகள் மீண்டும் நிரூபிக்கின்றன. ஆனால், இவையனைத்தும் ஆங்காங்கு மேற்கொள்ளப்பட்ட சிறு சிறு ஆய்வுகளின் முடிவுகளே. இவையே இறுதி முடிவுகள் ஆகாது. வீடியோ விளையாட்டுகளின் பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் மேற்கொண்டு நிறைய ஆய்வுகள் தேவைப்படும் ஒரு முக்கியக் கட்டத்தில்தான் நாம் இருக்கிறோம்.

இதனால் ஆன்லைன் கேம்கள் அனைத்தும் நன்மை மட்டுமே பயக்கும் என்று சொல்லிவிட முடியுமா? முடியாது. அதே சமயம் இவ்வகை நவீன விளையாட்டுகள் அனைத்துமே தீங்கு பயப்பவை என்று சொல்லி விட முடியமா? ஆனாலும் இதுபோன்ற விளையாட்டுகள் அடிமைத்தனம் கொண்டவை. அவற்றில் ஈடுபடும்போது நன்மை தீமைகளைப் பற்றிய புரிதல் இருப்பது நலம்.

எதுவரை விளையாட்டு? எதற்குப் பின் அது வினை? என்ற எல்லைக்கோட்டை அறிந்து வைத்திருப்பது குழந்தைகளுக்கு மாத்திரமல்ல... பெற்றோருக்கும் அவசியமாகிறது. அடிமைத்தனம் ஏற்பட்டபின் சிகிச்சைக்கு வருவதை விட அதற்கு முன்னரே கட்டுப்பாடுகளுடன் விளையாடக் கற்றுக் கொடுக்க வேண்டிய சூழலில்தான் நாம் இன்று இருக்கிறோம்.
ஆன்லைன் விளையாட்டுகளைப் பொறுத்தவரை பெற்றோர்கள் பலருக்கும் நிறைய தவறான புரிதல்கள் இருக்கின்றன. அவை பற்றியும் உண்மை என்ன என்பது பற்றியும் பார்க்கலாம்.

விளையாட்டு என்றாலே வேடிக்கையானது. செலவில்லாதது. கவனிக்க வேண்டிய வேலை நமக்கு இல்லைதானே…

இல்லை. எல்லா விளையாட்டுகளும் வேடிக்கையானவை அல்ல. அடிமைத்தனம் கொண்ட விளையாட்டுகளும் இப்போது இருக்கின்றன. பல்லாங்குழி ஆடியும், திருடன்-போலீஸ் விளையாடியும், கபடி ஆடியும் யாரும் அடிமை ஆனதாக நாம் கேள்விப்பட்டதில்லை. முளையிலேயே கிள்ளத்தவறி விட்டால் பிறகு பிரச்சினை வளர்ந்தபின் களையெடுப்பது கடினமே.

அவனது தொழில்நுட்பத்திறன் வளர்கிறது. எதிர்காலத்தில் அவன் பார்க்கும் வேலைக்கு இத்திறமை பயன்படும்.
இல்லை. நிஜ வாழ்வின் அனுபவங்கள் கற்றுத்தரும் பாடமும் திறனும் ஆன்லைன் கேம்களில் இருக்காது.சுயக்கட்டுப்பாடு, மற்றவர்களுடன் பழகி வாழ்வை அனுசரித்துச்செல்லும் திறன் போன்றவை இல்லாமலே போகும் வாய்ப்பு அதிகம்.

நாளை அவன் ஒரு விளையாட்டு டிசைனராக வரலாம் இல்லையா? போதாது. விளையாட்டை வடிவமைக்கும் நிபுணராக வர வேண்டும் என்றால்கூட கணிதம், இயற்பியல், ஓவியம், இசைக் குழுவாக முயற்சி செய்தல், தொடர்புகொள்ளும் திறன் போன்ற எல்லாமும் வேண்டும். இவற்றிலும் ஓரளவு தேர்ச்சி இருந்தால் மட்டுமே வெற்றிகரமாக அத்துறையிலும் சாதிக்க முடியும். வெறுமனே விளையாடிக்கொண்டே இருந்தால் போதுமா? மருத்துவருடனேயே இருப்பதால் நர்ஸ் மருத்துவராகி விட முடியுமா? சினிமா அதிகம் பார்ப்பேன், ரசிப்பேன் என்று சொல்பவர்கள் எல்லோருமே ஒரு திரைப்படம் எடுத்து விட முடியுமா?அதுபோலத்தான் இதுவும்.

வீட்டினுள் பாதுகாப்பாகத்தானே விளையாடிக் கொண்டிருக்கிறான் குழந்தை…

இல்லை. உங்களுக்குத் தெரியாத நபர்களுடன் இணைய வெளியில் உலவுகிறார் குழந்தை. உங்களுக்கே பிடிபடாத ஒரு மாய உலகில் சஞ்சரிக்கும் அக்குழந்தையின் மற்ற திறமைகள் வளராமலே போகும் ஒரு ஆபத்து அங்குள்ளது. இதை உட்கார்ந்தே விளையாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் வெளியில் சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது, சைக்கிள் பழகுவது, நீச்சல் பழகுவது, இசை மொழி போன்ற புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது இன்னும் நன்மை பயக்கும்.

அப்பாவும் மகனும் சேர்ந்துதான் விளையாடுகிறார்கள். அவர்களைப் பாசத்தால் பிணைக்கும் ஒரு நிகழ்வு இது.

இது இன்னும் ஆபத்து. குழந்தைகளுடன் நேரம் செலவு செய்ய இன்னும் ஆயிரம் வழிகள் உள்ளன. வெளியிடங்களுக்கு அழைத்துப் போவது, பிறருடன் பழக வழிவகை செய்வது, உடல் ரீதியான விளையாட்டுகளின்போது உடனிருப்பது என்று பல வழிகளில் நம் குழந்தையின் ஆளுமை பரிணமிக்க நம்மால் உதவ முடியும். அல்லது ஒரு மணிநேரம் ஆன்லைனில் விளையாடினால் இன்னொரு மணிநேரம் மேற்சொன்ன ஆஃப்லைன் (offline) பொழுது போக்கிற்கும் நேரம் ஒதுக்கினால் அதுகூட ஒரு சமநிலை நடவடிக்கையே.

என் குழந்தைக்குக் கூச்சசுபாவம் கொஞ்சம் அதிகம். இந்த விளையாட்டு ஒன்றுதான் அவன் விரும்புவது.

தவறு. சுபாவங்களை மாற்ற முடியும். குழந்தைப் பருவம் வளைந்து கொடுக்கக்கூடியது தான். அதே நேரம் நீண்ட நெடிய ஆன்லைன் பயன்பாட்டின் விளைவாகவே குழந்தைகள் கூச்சம் மிகுந்தவர்களாகவும், சமூகப்பதற்றம் கொண்டவர்களாகவும் மாறி விட வாய்ப்புண்டு என்பதை மறக்க வேண்டாம். இது போன்ற விளையாட்டுகள் சமூகத்தை விட்டு விலக்கும் தன்மை கொண்டவை.

அவன் நண்பர்கள் அனைவருமே ஆன்லைனில் விளையாடுகின்றனர். இவனை மட்டும் அந்த குரூப்பில் இருந்து வெளியே வரச்சொன்னால் சரியாக இருக்குமா? தன்னைத் தனிமைப்படுத்திவிட்டதாக நினைக்க மாட்டானா?
அப்படிப்பட்ட முழுநேர விளையாட்டுக்குழுவே உங்கள் குழந்தைக்கு வேண்டாம். ஆங்காங்கு தவறு நடக்கிறது என்பதற்காக நாமும் தவறு செய்தால் அதை சட்டம் ஒத்துக்கொள்ளுமா? சக பெற்றோர்களிடமும் தொடர்பு கொண்டு குழந்தைகளின் ஆன்லைன் நடவடிக்கைகளைப் பற்றிப் பகிர்ந்து கொள்வது இன்னும் நல்லது.

சின்னப்பையன்தானே, இப்போ அதன் மீது வெறியா இருக்கான், போகப்போக சரியாயிடும், அவனாவே வெளியே வந்துடுவான்.
தவறு. அடிமைத்தனம் ஏற்பட்டபின் மீட்பது கடினம். இவ்வகை விளையாட்டுகளின் அடிப்படை மூளை மற்றும் நரம்பு மண்டலம் சார்ந்த வேதிப்பொருட்கள் சம்பந்தப்பட்டது. மூளையின் நரம்புத் தொடர்களில் மாற்றங்களை (rewiring) ஏற்படுத்தவல்லது. மற்ற போதைப்பொருட்களைப் போன்றே இதற்கும் நோய்க்கூறுகள் உண்டு. இவ்வகை ஸ்கிரீன் சார்ந்த விளையாட்டுகளை ‘டிஜிட்டல் ஹெராயின்’ என்று வர்ணிக்கும் ஆய்வாளர்கள் உண்டு.

ஆக, ஆன்லைன் விளையாட்டுகள் என்பவை நாம் நினைக்கும் அளவுக்கு சாதாரணமானவை அல்ல என்பதை அறிய வேண்டும்.
குழந்தைகள் விளையாட்டில் போரிடுகிறார்கள். பெற்றோர்கள் அவ்விளையாட்டோடு போரிடுகிறார்கள். ஆனால், கடைசியில் விளையாட்டுதான் ஜெயிக்கிறது என்று எங்கோ படித்தேன்.

(இணைவோம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in