இசைவலம்: மனிதமும் மதமும்!

இசைவலம்: மனிதமும் மதமும்!

வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in

90-களில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியவை இந்தி இசை ஆல்பங்கள். தனிப் பாடல்கள் என்று அழைக்கப்படும் அந்த ஆல்பங்களின் புத்துயிர்ப்பான இசையும், கவிதைப்பூர்வமான படமாக்கலும் இந்திய அளவில் ரசிகர்களை ஈர்த்தன. அந்தக் காலகட்டத்தில் தமிழிலும் தனிப்பாடல் முயற்சிகள் முகிழ்த்தன என்றாலும், பரவலான வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தச் சூழலில், தமிழிலும் தற்போது தனிப் பாடல்களை ரசிப்பதற்கென்று ரசிகர்கள் உருவாகிவருவது ஆரோக்கியமான விஷயம். அதிலும் தனிப் பாடல்களை ஏனோதானோ என்று உருவாக்காமல் ஒவ்வொரு பாடலையும் ஒரு குறும்படத்துக்கான தரத்தோடு உருவாக்கும் கலை நேர்த்தியைப் பாராட்டியே ஆக வேண்டும்.

காதலர் தினத்தன்று ‘இசை போதை’ குழுவினர் வெளியிட்டிருக்கும் ‘உன்னாலே என்னைத் தொலைத்தேன்’ பாடல் காதலுக்கும் மதத்துக்கும் இடையில் ஊசலாடும் காதலர்களின் நிலையைப் பாடுபொருளாகக் கொண்டிருக்கிறது. காதலுக்கும் பிரிவுக்கும் நியாயம் செய்யும் வார்த்தைகளோடு பாடலை எழுதிப் பாடியிருக்கிறார் முகமது அப்பாஸ். இதமான ஆனால் அழுத்தமான இசையை ஆர்.கே.பத்மநாபன் வழங்கியிருக்கிறார். பாடலின் தொடக்கத்தில் இதுவும் ஒரு சராசரிக் காதல் பாடல்தான் என்று நினைக்கும் அளவுக்குத்தான் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனினும், முடியும்போது வேறு ஒரு தளத்துக்குள் பயணிக்கும் காட்சிகளோடு பாடல் முடிகிறது. ‘ஆணும் பெண்ணும் நட்பு என்னும் கட்டத்துக்கு அடுத்து தங்களின் எல்லையை விரிக்கும்போது மட்டும் மதம் என்னும் இரும்புக்கரங்கள் மனிதர்களுக்கு எங்கிருந்து முளைக்கின்றன?’ எனும் காலத்துக்கேற்ற நியாயமான கேள்வியைப் பாடல் எழுப்புகிறது.

மனிதத்தின் மகத்துவத்தை உணரவைக்கும் பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=jB-LzWlbTfQ

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in